சற்று முன்
Home / செய்திகள் / முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டம் தொடர்கிறது – படங்கள் தொகுப்பு

முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டம் தொடர்கிறது – படங்கள் தொகுப்பு

வடமேல் மாகாணத்திலும், கம்பகா மாவட்டத்தின் சில பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த சில நாட்களாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளில் பெருமளவு வீடுகள், வணிக நிலையங்கள், தொழிற்சாலைகள், மசூதிகள் தீயிட்டு எரிக்கப்பட்டும், சூறையாடப்பட்டும் உள்ளன.

நேற்று முன்தினம் குருநாகல, நிக்கவரெட்டிய, குளியாப்பிட்டிய, ஹெற்றிபொல, பிங்கிரிய, பண்டுவஸ்நுவர, தும்மலசூரிய உள்ளிட்ட வடமேல் மாகாணத்தின் பல பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

குவிக்கப்பட்ட குண்டர்கள்

பேருந்துகளில் கொண்டு வந்து இறக்கி விடப்பட்ட குண்டர்கள் உள்ளூரில் இருந்த சிலரின் உதவியுடன் தாக்குதல்களில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கணக்கானோர் உந்துருளிகளிலும் வாகனங்களிலும், ஆயுதங்கள், பொல்லுகளுடன் சென்று முஸ்லிம்களின் சொத்துக்களை அடையாளம் கண்டு தீயிட்டு எரித்தனர். அடித்து நொருக்கினர்.

கண்காணிப்பு காணொளிப் பதிவுக் கருவிகளை அடித்து நொருக்கி விட்டு குண்டர்கள் தாக்குதலில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

நூற்றுக்கணக்கான வீடுகள் நாசம்

நேற்று முன்தினம் 100இற்கும் அதிகமான வீடுகளும், பெருமளவு வணிக நிலையங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த மோதல்களின் போது வாள்வெட்டுக்கு முஸ்லிம் ஒருவர் பலியானார்.

மினுவாங்கொடவில் பரவிய வன்முறை

கம்பகா மாவட்டத்தில் உள்ள மினுவாங்கொடவிலும், நேற்று முன்தினம் குண்டர்கள் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.

நூற்றுக்கணக்கான குண்டர்கள், முஸ்லிம்களின் வணிக நிலையங்கள், பள்ளிவாசல்களை தாக்கி எரித்தனர். மினுவாங்கொட சந்தியில் இருந்த பெருமளவு வணிக நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

பாரிய தொழிற்சாலை நாசம்

இந்தப் பகுதியில் 700 மில்லியன் ரூபாவில் புதிதாக அமைக்கப்பட்ட- சிறிலங்காவின் மிகப்பெரிய பாஸ்தா உற்பத்தி தொழிற்சாலையும் அதன் இயந்திரங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

மினுவாங்கொட பகுதியில் 30இற்கும் அதிகமான வணிக நிலையங்கள் தீக்கியரையாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்களவர்களின் வணிக நிலையங்களும் தப்பவில்லை

இந்த வன்முறைகளின் போது, சிங்களவர்களுக்கு சொந்தமாண வணிக நிலையங்களும் கூட தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மினுவாங்கொட நகரில் சிங்களவர்களுக்குச் சொந்தமான பாரிய ஆடையகம் ஒன்றும், வணிக நிலையம் ஒன்றும் இந்த வன்முறைகளில் தீக்கிரையாகின.

அலையலையாக வந்து தாக்குதல்

பண்டுவஸ்நுவர பகுதியில் உள்ள கொட்டம்பிட்டியவில் திங்கட்கிழமை இரவு 11 மணி தொடக்கம், முஸ்லிம்களின் வீடுகளின் மீது அலையலையாக வந்த குண்டர்கள் மூன்று தடவைகள் தாக்குதலை நடத்தினர். இதில் 50 வீடுகள் சேதமடைந்தன. உந்துருளிகள், உள்ளிட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

பண்டுவஸ்நுவர பகுதியில் இரண்டு பள்ளிவாசல்களும் தீக்கிரையாக்கப்பட்டன. மேலும் வடமேல் மாகாணத்தில் பல பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டன.

பதற்றம் – ஊரடங்கு

இதனால் வடமேல் மாகாணத்திலும், கம்பகா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்தும் பதற்ற நிலை காணப்படுகிறது.

நேற்று முன்தினம் இந்தப் பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட போதும், வடமேல் மாகாணத்தில் நேற்றுக்காலை ஊரடங்கு நீக்கப்படவில்லை.

ஊரடங்கிலும் குண்டர்களுக்கு கொண்டாட்டம்

நேற்றுக்காலை ஊடரங்கு வேளையிலும் கூட குருணாகல மாவட்டத்தில் பல இடங்களில் குண்டர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டனர்.

தாக்குதல்களில் ஈடுபட்ட குண்டர்களை தடுக்காமல் சிறிலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்று முஸ்லிம்கள் முறையிட்டுள்ளனர்.

2 மணி நேரம் தளர்வு

வடமேல் மாகாணத்தில் நேற்று மாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் மீண்டும் 6 மணிக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இன்று காலை வரை இந்த ஊரடங்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பகா மாவட்டத்திலும், நேற்று மாலை 6 மணி தொடக்கம் இன்று காலை வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் நேற்றிரவு 9 மணியில் இருந்து இன்று காலை 4 மணிவரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார் ரணில்

வடமேல் மாகாணத்தில் குளியாப்பிட்டிய, ஹெற்றிபொல பகுதிகளில் குண்டர்களின் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர்களும் சந்தித்து ஆறுதல் கூறினர்.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

கவசவாகனங்களில் இராணுவத்தினர்

வடமேல் மாகாணத்திலும், மினுவாங்கொட உள்ளிட்ட பதற்றமான பிரதேசங்களிலும் சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

துருப்புக்காவி கவசவாகனங்களில் சிறிலங்கா இராணுவத்தினர் குருணாகல, குளியாப்பிட்டிய, ஹெற்றிபொல, மினுவாங்கொட உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கைது வேட்டை தொடங்கியது

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டவர்கள், வன்முறைகளைத் தூண்டிவிட்டவர்களையும் சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.

இதுவரை 60 பேரைக் கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் நேற்றுமாலை தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் நாமல் குமார, அமித் வீரசிங்க, டான் பிரியசாத் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய நபர்களும் அடங்கியுள்ளனர்.

மதுபான சாலைகளுக்கு பூட்டு

இந்த வன்முறைகளை அடுத்து, மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் மறு அறிவித்தல் வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com