சற்று முன்
Home / செய்திகள் / மிருசுவில் படுகொலையாளியான இராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பு – இழப்பீடு கோரி பாதிக்கப்பட்ட குடும்பங்கள் முறைப்பாடு

மிருசுவில் படுகொலையாளியான இராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பு – இழப்பீடு கோரி பாதிக்கப்பட்ட குடும்பங்கள் முறைப்பாடு

மிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை செய்த இராணுவ அதிகாரிக்கு உயர் நீதிமன்றால் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டநிலையில் அவர் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும் எனக் கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களின் உறவுகள் இந்த முறைப்பாட்டை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தின் இன்று வழங்கினர்.

2000ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 19ஆம் திகதி, மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற 8 பொதுமக்கள், இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு, கழிப்பறைக் குழிக்குள் போடப்பட்டனர்.

அவர்களுடன் சென்ற மற்றொருவர் தப்பிச் சென்று வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், சடலங்கள் மீட்கப்பட்டதுடன், ஐந்து படையினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

ட்ரயல் அட் பார் முறையில் நடந்த இந்த வழக்கில், 2015 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் திகதி, ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ அதிகாரிக்கு தூக்குத் தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.

ஏனைய நான்கு படையினரும் போதிய சாட்சிகளில்லை என விடுவிக்கப்பட்டனர்.

இந்த தீர்ப்புக்கு எதிராக, ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனு முன்னாள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, நீதியரசர்கள் புவனேக அலுவிகார, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜெயவர்த்தன, முர்து பெர்னான்டோ ஆகிய ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வினால் விசாரிக்கப்பட்டது.

இதையடுத்து 2019 மே 20ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே என்று உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்களும் ஏகமனதாக அறிவித்துள்ளனர்.

சம்பவத்தை நேரில் கண்ட மகேஸ்வரன் என்பவரின் தெளிவான சாட்சியங்களின் அடிப்படையில் இந்த தீர்ப்பை உறுதி செய்வதாக உயர் நீதிமன்றம் கோடிட்டுக் காட்டியிருந்தது.

இந்த நிலையில் ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் இரகசியமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த வாரம் தகவல் வெளியிட்டிருந்தார்.

அதனையடுத்தே படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் தமக்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும் என்று தமது உறவுகளுக்கு அரச வேலை தரவேண்டும் என்று கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

“எமது உறவுகளின் உநிலை மீண்டும் பெற்றுத் தர முடியாது. ஆனால் தற்போது இறந்தவர்களின் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு அரச வேலை வாய்ப்பினையும் இழப்பீட்டையும் பெற்று தருமாறு கோரி முறைப்பாடொன்றை பதிவு செய்திருக்கின்றோம்.

அத்தோடு அண்மையில் ஜனாதிபதியினால் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ராணுவ அதிகாரியினை விடுதலை செய்தது பற்றி எமக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது” என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com