சற்று முன்
Home / செய்திகள் / மயானத்தையும் விட்டுவைக்காத மணல் கொள்ளையர்கள் – சுழிபுரத்தில் இருவர் கைது

மயானத்தையும் விட்டுவைக்காத மணல் கொள்ளையர்கள் – சுழிபுரத்தில் இருவர் கைது

சுழிபுரம் – திருவடிநிலையில் உள்ள மயானத்தில் மணல் அகழ்ந்த டிப்பர் மற்றும் ஜே.சி.பி வாகனங்களும் அவற்றின் இரு சாரதிகளும் அப்பிரதேச மக்களால் மடக்கிக் பிடிக்கப்பட்டு வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 6.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. சடலங்களைப் புதைக்கும் புதைகுழிகள் அமைந்துள்ள இடத்தில் மணல் அகழப்பட்டமையால் எலும்புக் கூடுகள் வெளியே வந்துள்ளன. எலும்புக் கூடுகளின் எச்சங்களுடன் சேர்த்தே மணல் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது எனவும் மக்கள் தெரிவித்தனர். திருவடிநிலை புனித கடற்கரையோரத்தில் உள்ள இந்து மயானத்திற்கு சமீபமாக சடலங்களைப் புதைக்கும் இடத்தில் நேற்றுக் காலை முதல் இரு டிப்பர்களில் மணல் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது. இதை அறிந்த வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் து.சுஜிந்தன் உடனடியாக வலி.மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் த.நடனேந்திரனின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இவ்விடயத்தை பிரதேச செயலாளருக்கு அறிவிக்குமாறு தவிசாளர் கூறினார் என சுஜிந்தன் தெரிவித்தார். எனினும், குறித்த டிப்பர் வாகனங்கள் தொடர்ந்தும் மணல் அகழ்ந்து சென்றதை அவதானித்த காட்டுப்புலம் – பாண்டவெட்டை இளைஞர்கள் மாலை 6.00 மணியளவில் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று ஒரு டிப்பரையும் ஒரு ஜே.சி.பி வாகனத்தையும் மடக்கிப் பிடித்தனர். இது தொடர்பாக அறிந்த வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான ந.பொன்ராசா, செ.கிருஸ்ணராசா ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

இந்த விடயம் வலி.மேற்கு பிரதேச சபைத் தவிசாளருக்கு மீண்டும் தெரியப்படுத்தப்பட்டது. அவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு அறிவித்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சாரதிகள் இருவரையும் கைது செய்தனர். அவர்களையும் வாகனங்களையும் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். இரு சாரதிகளும் நாளை நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் எனவும் வாகனங்களும் நீதிமன்றில் பாரப்படுத்தப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, வழக்கம்பரையில் கட்டிடப் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வருபவரின் டிப்பர் வாகனத்திலேயே மணல் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் இவர்கள் இந்த இடத்தில் மணல் அகழ்ந்தனர். அப்போது நாம் பிடித்து வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தோம்.

பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவில்லை. டிப்பரையும் சாரதிகளையும் விடுவித்தனர். இந்தத் தடவையும் அவர்கள் உரியவாறு செயற்படுவார்களா என எமக்குச் சந்தேகமாக உள்ளது’ என வாகனங்களை மடக்கிப் பிடித்த இளைஞர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com