சற்று முன்
Home / செய்திகள் / “மனிதப் பிறப்பாக இருந்து கொண்டு மிருகமானால் வாழமுடியாது” – மனைவியைக் கழுத்தறுத்துக் கொன்ற இராணுவச் சிப்பாய்க்கு நீதவான் கண்டிப்பு

“மனிதப் பிறப்பாக இருந்து கொண்டு மிருகமானால் வாழமுடியாது” – மனைவியைக் கழுத்தறுத்துக் கொன்ற இராணுவச் சிப்பாய்க்கு நீதவான் கண்டிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிங்கள மாணவி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது கணவரை வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

“மனிதராகச் செயற்பட்டால்தான் வாழமுடியும். மனிதப் பிறப்பாக இருந்து கொண்டு மிருகமானால் வாழமுடியாது” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், சந்தேகநபரை கண்டித்தார்.

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுலாக் கடற்கரையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட இறுதி வருட மாணவி ஒருவர் நேற்று புதன்கிழமை பிற்பகல் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதுடன், அவரது சடலம் கடலுக்குள் தள்ளிவிடப்பட்டிருந்தது.

கொழும்பு பேருவளையைச் சேர்ந்த ரோசினி ஹன்சனா (வயது – 29) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார்.

சம்பவத்தையடுத்து அந்தப் பகுதியில் கூடியிருந்த உள்ளூர் இளைஞர்கள் கொலையாளியைப் பின்தொடர்ந்து சென்றதுடன், அவரை துரத்திப் பிடித்தனர். இளைஞர்களுக்கு அந்தப் பகுதியில் நின்ற விமானப் படையின் புலனாய்வு உத்தியோகத்தர்களும் உதவினர்.

இவ்வாறு பிடிக்கப்பட்டவர் கிளிநொச்சி – பரந்தன் இராணுவ முகாமில் பணியாற்றும் படைச் சிப்பாய் ஆவார்.

சந்தேகநபர் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார். அவர் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் இறப்பு விசாரணை இடம்பெற்றது.

கொல்லப்பட்ட மாணவியின் தாயாரும் சகோதரனும் மன்றில் முன்னிலையாகி இறப்பு விசாரணையில் சாட்சியமளித்தனர்.

“எதிரி மகளை 2017ஆம் ஆண்டு பதிவுத் திருமணம் செய்தததுடன் அவருடன் வாழ்ந்து வந்தார். அண்மைக்காலமாக இருவருக்கும் முரண்பாடுகள் இருந்தன” என்று மாணவியின் தாயார் சாட்சியமளித்தார்.

“மனிதனாக இருந்தால் மட்டுமே வாழ முடியும். மனிதப் பிறப்பாக இருந்து கொண்டு மிருகமானால் வாழ முடியாது” என்று நீதிவான், எதிரிக் கூண்டில் நின்ற எதிரியைப் பார்த்து எச்சரித்தார்.

அத்துடன், எதிரியை வரும் பெப்ரவரி 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்று, வழக்கு விசாரணையக அன்றைய தினம் வரை ஒத்திவைத்தது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com