சற்று முன்
Home / செய்திகள் / மணிவண்ணன் நுள்ளிப் போட்டார் – கஜேந்திரன்ஸ்களும் குற்றச்சாட்டுக்களும்

மணிவண்ணன் நுள்ளிப் போட்டார் – கஜேந்திரன்ஸ்களும் குற்றச்சாட்டுக்களும்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து வி.மணிவண்ணனை அந்த பொறுப்புக்களில் இருந்து நீக்குவதென கட்சி எடுத்த முடிவையடுத்து, மணிவண்ணனிற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.

அவரது அலுவலகத்தில் பெருமளவிலான இளைஞர்கள் ஒன்று திரண்டு வருகிறார்கள். அவர்கள் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட தயாரான போதும், மணிவண்ணன் தலையிட்டு இளைஞர்களை தடுத்து நிறுத்தியுள்ளார்.

காரணமில்லாமல் மணிவண்ணனை நீக்குவதென தலைமை எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கும் சாத்தியமே அதிகமுள்ளது. மணிவண்ணனிற்கு பெருகியுள்ள ஆதரவையடுத்து, மத்தியகுழு முடிவை பகிரங்கமாக அறிவிக்க முடியாமல் முன்னணி பதுங்கி வருகிறது.

என்ன பிரச்சனை?

முன்னணிக்கும் மணிவண்ணனிற்கும் அப்படியென்ன பிரச்சனையென ஆராய்ந்தால், தலை சுற்றும். பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாத அளவிலேயே பிரச்சனைகள் உள்ளன.

வெளியார் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தும் எந்த பிரச்சனையும் தென்படாத நிலையில், கட்சி தலைமையிடமே பலரும் தொலைபேசி மூலம் காரணத்தை கேட்டுள்ளனர்.

மணிவண்ணனின் ஆதரவாளர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் நேற்று முழுநாளும் முன்னணியின் முக்கியஸ்தர்களை தொடர்பு கொண்டு, மணிவண்ணன் நீக்க விடயம் உண்மையா என வினவினர். கட்சி பிரமுகர்கள் அதை ஏற்றுக்கொண்டனர். ஆனால், இன்றுவரை அதை பகிரங்கமா அறிவிக்காமல் பதுக்கி வருகிறார்கள்.

அப்படி, கட்சியின் செயலாளருடன் நடந்த உரையாடலை ஒருவர் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

மணிவண்ணனை நீக்கியது ண்மையா என கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனை தொடர்பு கொண்டு அவர் வினவியுள்ளார். கஜேந்திரன் அதை ஏற்றுக்கொண்டுள்ளார். நீக்கியதற்கான காரணத்தை வினவியபோது, “மணிவண்ணனை வைத்துக் கொண்டு எமது கொள்கையை முன்னெடுக்க முடியாது“ என செயலாளர் பதிலளித்துள்ளார். அழைப்பேற்படுத்தியவர் பதிலுக்கு, “மணிவண்ணனை வைத்துக் கொண்டு முன்னெடுக்க முடியாத உங்கள் கொள்கை என்ன? உங்கள் கொள்கை என்ன?“ என கேட்டுள்ளார். செயலாளருக்கு உடம்பு தீப்பற்றியிருக்க வேண்டும். “தம்பி.. நான் அலுவலாக நிற்கிறன். பிறகு எடுக்கிறன்“ என தொலைபேசியை துண்டித்துள்ளார்.

இதுதான் மணிவண்ணனை நீக்க காரணம்!

இதெல்லாம் ஒரு குற்றமா?

மணிவண்ணனுடன் கட்சி பிரமுகர்களிற்கு முரண்பாடு வந்தது கடந்த ஜனாதிபதி தேர்தலில். அப்பொழுது பல்கலைகழக மாணவர்கள் ஒரு பேச்சு முயற்சியை முன்னெடுத்தனர். அந்தபேச்சு நடந்து கொண்டிருந்த போதே- பேச்சின் ஒரு தரப்பான நமது கொள்கை குன்றுகளான முன்னணியினர், முந்திரிக்கொட்டை தனமாக, தமது முடிவை அறிவித்தனர்.

அந்த முடிவைஅறிவிக்க முன்னர் முன்னணிக்குள் நடந்த கலந்துரையாடலின் போது, மாணவர்களின் தலையீட்டுடனான பேச்சு முடியும் வரை கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்காமலிருக்கலாம் என தனது கருத்தை மணிவண்ணன் தெரிவித்ததே நீக்கத்திற்கான மூல காரணம்.

அதாவது தலைமை தமது முடிவை அறித்த போது- “ஆமாம் ஐயா.அந்த மாதிரி, இராஜதந்திரம் மிக்க முடிவு“ என மணிவண்ணன் பக்கப்பாட்டு பாடவில்லையென்ற கோபம் அப்பொழுதே தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.

பின்னர், அதை பலர் பற்ற வைத்துள்ளனர். அவ்வளவுதான் நடந்தது.

இது தவிர, மணிவண்ணனிற்கு இளைஞர்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு ஏனைய சில பிரமுகர்களிற்கு பொறாமையை ஏற்படுத்தியிருக்கலாம். அவரை வைத்திருந்தால் கட்சிக்குள் நீண்டநாள் போட்டியாளராக இருப்பார் என்பதால் இப்பொழுதே நீக்கியிருக்கலாம்.

இத்தனைக்கும், இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லையென்ற முடிவுடனேயே மணிவண்ணன் இருந்தார். கட்சி தலைமைதான் அவரை வற்புறுத்தி இழுத்து வந்தது. அவர் 20,000 இற்கும் அதிக விருப்பு வாக்கை பெற்றார். அவர் மூலமும் கட்சி கணிசமான வாக்கை பெற்றது.

மணிவண்ணன் கொள்கைக்கு முரணானவர் என்றால், கொள்கைக்கு முரணானவரின் மூலம் கிடைத்த வாக்கும் தமது தெரிவிற்கு ஒரு காரணமென்பதால், எம்.பி பதவிகளையும் தலைவரும், செயலாளரும் நீக்குவார்களா என்ற கேள்வியெழுந்துள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com