சற்று முன்
Home / செய்திகள் / மக்கள் எழுச்சியே பதில் !

மக்கள் எழுச்சியே பதில் !

“மக்களின் பலம் எனக்குள்ளது. எனவே என்னுடைய பாதை சரி என எனக்கு தோன்றுகின்றது” என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக, யாழ். நல்லூரில் இன்று (16) காலை ஒன்று கூடிய பொது மக்கள் பேரணியாக வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்துக்கு சென்று தமது ஆதரவை முதலமைச்சருக்கு தெரிவித்தனர்.

இதன்போது, முதலமைச்சர் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ” விரைவில் விக்னேஸ்வரன் தனது பதவியை பறிகொடுத்துவிடுவார் என, அண்மையில் சரத்பொன்சேகா, தெரிவித்தார். அப்போது, சரத்பொன்சேகாவுடன் எனக்கு தனிப்பிட்ட விரோதங்கள் எவையும் இல்லாத போது ஏன் இவ்வாறு தெரிவிக்கின்றார் என நான் சிந்தித்தேன். எனினும் அதற்கான காரணம் தற்போது புரிகின்றது.

எனக்கான சதி ஏற்கனவே கொழும்பில் வைத்து தீட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் சரத்பொன்சேகா அறிந்திருந்தமையாலேயே இவ்வாறு தெரிவித்தார். இவ்வாறு சதி பின்னப்பட்டமை தொடர்பில் எனக்கு எவ்வித கவலைகளும் இல்லை.

அமைச்சர்கள் மீதான விசாரணையை கொண்டு எனக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என சதி செய்தே அவ்விசாரணை இடம்பெற்றுள்ளது.

இதன்மூலம் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு அவர்களை நான் காப்பாற்ற முயன்றால் பக்கச்சார்பாக முதலமைச்சர் செயற்படுகின்றார் என தெரிவித்து என்மீது நடவடிக்கை எடுக்கலாம். இல்லையேல் தற்போது போன்று, அமைச்சர்களை பதவி விலக்கினாலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரலாம் என சிந்தித்தே இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். எனினும் அவர்களின் எண்ணத்துக்கு மக்களே பதில் கூறிவிட்டனர்.

எமக்கு எத்தனையோ வேலைகள் உள்ளன. தேவைகள் உள்ளன. எனினும் வடமாகாண சபையில் தேவையற்ற விடயங்களை பேசி பேசியே நேரத்தை வீணாக்கியபடி உள்ளனர். அப்படியான நிகழ்வே இந்நிகழ்வும். நான் என்னுடைய கடமையை சரிவரச்செய்கின்றேன். கடமையை செய்வது ஒருவருக்கு தோல்வியோ வெற்றியோ இல்லை.

அமைச்சர்கள் மீது விசாரணை செய்ய வேண்டும் என்று தனிப்பட்டரீதியில் என்னிடம் தெரிவித்தாலே நான் விசாரணை மேற்கொண்டு இருப்பேன். எனினும் உறுப்பினர்கள் சிலர் தமது பெயர்கள் பத்திரிகையில் வரவேண்டும் என்பதற்காக தனிப்பட்ட ரீதியில் என்னிடம் தெரிவிக்க வேண்டியவற்றை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்தனர். எனவே தான் நான் விசாரணைக்குழுவை நியமித்தேன்.

அதனூடாக இரு அமைச்சர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் பதவிநீக்கப்பட்டனர். எனினும் மற்றைய இரு அமைச்சர்கள் மீது விசாரணைகள் முழுமையடையவில்லை. ஆனால் அவர்கள் தாங்கள் குற்றவாளிகள் அல்லர் என தெரிவித்து வருகின்றனர். எனினும் அவர்கள் மீதான விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். குற்றங்கள் நிரூபணமால் பதவி நீக்கப்படுவார்கள்.

இது முதலாவது வடமாகாண சபை. ஊழல்கள் குற்றங்கள் இதன்போதே களையப்பட வேண்டும். வளர விடக்கூடாது. மக்கள் பலம் எனக்குள்ளது. எனவே நான் செல்கின்ற பாதை சரியானது என எண்ணுகின்றேன்” என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com