சற்று முன்
Home / Uncategorized / போட்டிகளிற்குப் பஞ்சம் வைக்காத 2015

போட்டிகளிற்குப் பஞ்சம் வைக்காத 2015

2015-ம் ஆண்டு, உலகில் நடந்த முக்கிய விளையாட்டு நிகழ்வுகள், விறுவிறுப்பான போட்டிகளின் தொகுப்புகள் இங்கே… 

கிரிக்கெட்

2015  கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான வருடம்தான். இந்த வருடத்தின் தொடக்கத்திலே ஒருநாள் உலககோப்பை, அதனை தொடர்ந்து ஐ.பி.எல், முதல் முறையாக நடைபெற்ற பகல் இரவு டெஸ்ட் போட்டி, அதிவேக சதம் என பல சுவாரஸ்யங்களை கொண்டது.


> ஜனவரி மாதத்தில் தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கு இந்திய தீவுகள் அணி,  அங்கு ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடியது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் டிவில்லிர்ஸ் 31 பந்துகளில் சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்தார். அந்த போட்டியில் அவர் மொத்தமாக 16 சிக்ஸர்களும் 9 பவுண்டரிகளும் விளாசி தள்ளினார். 

> பதினோறாவது உலககோப்பை போட்டிகளை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்தியது. போட்டிகள் பிப்ரவரி 14 தொடங்கி மார்ச் மாதம் 29 வரை நடைபெற்றன. உலககோப்பைக்கு தகுதி பெற்ற 14 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள்  நடைபெற்றன.


>  ‘ஏ’ பிரிவில் நியூசிலாந்து  அணியும், ‘பி’ பிரிவில் இந்திய அணியும் எந்த அணிக்கு எதிராகவும் தோல்வி பெறாமல் லீக் பிரிவில் முதல் இடங்களை பிடித்தது.

>  இந்திய அணி தனது பரம எதிரியான பாகிஸ்தானை தனது முதல் போட்டியில் சந்தித்தது. பிப்ரவரி 15-ம் தேதி நடந்த இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.


> காலிறுதி வரை தோல்வியே சந்திக்காத இந்திய அணி,  அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் அடிபணிந்தது. மற்றொரு அரையிறுதியில் தென்னாப்பரிக்க அணியை  வீழ்த்தி,  நியூசிலாந்து இறுதி போட்டிக்கு முன்னேறியது.

> மார்ச் 29 -ம் தேதி  மெல்பெர்ன் மைதானத்தில் வைத்து நடைபெற்ற இறுதி போட்டியில்,  ஆஸ்திரேலிய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணிய வீழ்த்தி,  ஐந்தாவது முறையாக உலக கோப்பையை வென்றது.
>  இந்த உலககோப்பை தொடரில்தான் முதன் முதலாக தனிநபர் இரட்டை சதம் அடிக்கப்பட்டது. மேற்கு இந்திய தீவுகள் அணியின் க்றிஸ் கெயில்,  ஜிம்பாப்வே அணிக்கு எதிரான் லீக் ஆட்டத்தில் உலகக்கோப்பை தொடரில் முதலாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
 
> இந்தியாவில் திருவிழாவாக கொண்டாப்படும் ஐ.பி.எல் போட்டி, இந்த ஆண்டும்  ஏப்ரல் மாதம் 8-ம் தேதி தொடங்கி மே மாதம் 24 -ம் தேதி வரை நடைபெற்றது. வழக்கம் போல் இந்த முறையும் சென்னை அணி லீக் ஆட்டங்களில் அபாரமாக செயல்பட்டு ப்ளேஆப் சுற்றுக்குள் நுழைந்தது.
> மே மாதம் 24 -ம் தேதி,  கொல்கத்தா ஈடன் கர்டன் மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் சென்னை அணியும் மும்பை அணியும் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த இறுதி போட்டியில்,  மும்பை அணி வெற்றி பெற்று,  கோப்பையை இரண்டாவது முறையாக வென்றது.
>ஜூலை மாதம் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஐ.பி.எல் தொடரில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. சென்னை அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான  குந்த்ரா  ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக,  அவர்களுக்கு ஆயுள் கால தடையும் விதித்தது நீதிமன்றம்.
>தடை செய்யப்பட்ட இரு அணிகளுக்கு பதிலாக புனே மற்றும் ராஜ்கோட் அணிகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டன. இவ்விரண்டு அணிகளும் அடுத்து வரும் இரண்டு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும். சென்னை அணியின் நிரந்திர கேப்டன் என பெயர் பெற்ற இந்திய கேப்டன் தோனி, 12.5 கோடிக்கு புனே அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
> கோலி தலைமையில் இலங்கையில் டெஸ்ட் தொடர் விளையாட சென்ற இந்திய அணி,  2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அதன் பின்னர் இந்தியாவில் நடந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும், விராட் கோலி தலைமையிலான இந்திய அணிய 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று,  டெஸ்ட் தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது. அதற்கு முன்னதாக ஒருநாள் மற்றும் ட்வென்டி ட்வென்டி தொடரை இந்தியா இழந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
> டெஸ்ட் போட்டிகளில் முதலாவது பகல் இரவு ஆட்டமும் இந்த ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய நிகழ்வாகும். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்று வந்தது நியூசிலாந்து அணி. இவ்விரண்டு அணிகளுக்கு இடையே  நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி, நவம்பர் மாதம் 27-ம் தேதி, அடிலைடு ஓவல் மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது. முதன் முதலாக விளக்குகளில் ஒளிரும் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்பட்டது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கால்பந்து

>2014- 2015-ம் ஆண்டுக்கான ல-லீகா கால்பந்து தொடரை நட்சத்திர ஆட்டக்காரர்களை கொண்ட பார்சிலோனா அணி கைப்பற்றியது. மெஸ்ஸி, நெய்மர், ஆகிய நட்சத்திர வீரர்களை கொண்ட பார்சிலோனா அணி,  23 -வது முறையாக கோப்பையை கைப்பற்றியது..
>2014-2015-ம் ஆண்டிற்க்கான பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் செல்சே (chelsea) அணி கோப்பையை வென்றது. அந்த அணிக்கு இது ஐந்தாவது கோப்பை ஆகும்.
>கிளப் அணிகளுக்கான உலகக்கோப்பையை ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா அணி வென்றது. பிபாவால் நடத்தப்படும் இந்த உலகக்கோப்பை இந்த ஆண்டு ஜப்பானில் நடைபெற்றது.  டிசம்பர் 20-ம் தேதி நடைபெற்ற இறுதி போட்டியில்,  பார்சிலோனா அணி வெற்றி பெற்று கோப்பையை  மூன்றாவது முறையாக கைப்பற்றியது,

>இந்தியாவில் நடைபெறும் கால்பந்து தொடரான ஐ.எஸ்.எல்,  இந்த ஆண்டும் அதிக வரவேற்புடன் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை நடைபெற்றது. தொடக்க ஆட்டங்களில் சிறிது சொதப்பினாலும்,  பின்னர் பெற்ற தொடர் வெற்றிகளால் சென்னையின் எப்,சி அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி,  இறுதி போட்டியில் கோவா அணியுடன் மோதியது.
> விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னை அணி,  கோவா அணியை அதன் சொந்த மண்ணில் 3-2 என்ற கோல்கணக்கில் வெற்றி கொண்டு, 2015-ம் ஆண்டிற்கான சாம்பியன் பட்டதை கைப்பற்றியது. தொடரில் அதிக கோல் அடிக்கும் வீரருக்கு அளிக்கப்படும் தங்க ஷூ விருதினை,  13 கோல்களை அடித்ததற்காக சென்னை வீரர் மேண்டோசாவிற்கு வழங்கப்பட்டது.

டென்னிஸ்

ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன்,  இந்த ஆண்டும் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. அதில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர், வீராங்கனைகளின் பட்டியல் இதோ:

ஆண்கள் ஒற்றையர்: ஜோகோவிக்
பெண்கள் ஒற்றையர்: செரீனா வில்லியம்ஸ்
ஆண்கள் இரட்டையர்:  சிமொனே போலேல்லி / பாபியோ போக்னினி
பெண்கள் இரட்டையர்: பதனி மட்டக்-சான்ஸ் / லூசி சபாரோவா
கலப்பு இரட்டையர்: மார்டினா ஹிங்கிஸ் / லியான்டர் பயஸ்
களிமண் தரையில் நடைபெறும் கிராண்ட்  ஸ்லாம் போட்டியான பிரெஞ்ச் ஓபன் டென்னில் தொடரில்,  2015-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்றவர்களின் பட்டியல்:

ஆண்கள் ஒற்றையர்: சடன் வாவ்ரின்கா
பெண்கள் ஒற்றையர்: செரீனா வில்லியம்ஸ்
ஆண்கள் இரட்டையர்: இவான் டொடிக் / மார்செலோ மேலோ
பெண்கள் இரட்டையர்: பதனி மட்டக்-சான்ஸ் / லூசி சபாரோவா
கலப்பு இரட்டையர்: பதனி மட்டக்-சான்ஸ் / மைக் பிரயான்

வரலாற்று சிறப்புமிக்க விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டன் நகரில் நடைபெற்றது. கிராண்ட் ஸ்லாம் அந்தஸ்து பெற்ற இந்த போட்டிகளில் பட்டத்தை வென்றவர்களின் பட்டியல்:


ஆண்கள் ஒற்றையர்: ஜோகோவிக்
பெண்கள் ஒற்றையர்: செரீனா வில்லியம்ஸ்
ஆண்கள் இரட்டையர்: ஜீன் – ஜூலின் ரோஜர் / ஹோரியா டேகு
கலப்பு இரட்டையர்: மார்டினா ஹிங்கிஸ் / லியான்டர் பயஸ்
பெண்கள் இரட்டையர்: மார்டினா ஹிங்கிஸ் / சானியா மிர்சா

ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள்,  நியூயார்க் நகரில் நடைபெற்றன.
 
ஆண்கள் ஒற்றையர்: ஜோகோவிக்
பெண்கள் ஒற்றையர்: பிலாவியாபென்னெட்டா
ஆண்கள் இரட்டையர்: ஹுகுஸ் ஹெர்பர்ட் / நிகோலஸ் மஹு
பெண்கள் இரட்டையர்: மார்டினா ஹிங்கிஸ் / சானியா மிர்சா
கலப்பு இரட்டையர்: மார்டினா ஹிங்கிஸ் / லியான்டர் பயஸ்
சென்னையில் நடைபெறும் சென்னை ஒபன் தென்னிஸ் தொடர் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்றது. இதில் ஸ்டேன் வாவ்ரிங்கா சாம்பியன் பட்டத்தினை கைப்பற்றினார்.

குத்துச் சண்டை
>தொழில்முறை குத்துச் சண்டை போட்டிகளில் வீழ்த்த முடியாதவராக திகழ்ந்த மேவெதர், தனது இறுதி ஆட்டத்திலும் வெற்றி பெற்றார். உலகமே எதிர்பார்த்த இந்த ஆட்டத்தில், மேவெதர் தன்னை எதிர்த்து ஆடிய அன்றோ பெர்டோவை வீழ்த்தி வெற்றி பெற்றார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த குத்துச் சண்டை போட்டியில், வெற்றி பெற்றதற்காக மேவெதர்க்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை,  இந்திய மதிப்பில் சுமார் 1200 கோடி ஆகும்.
> ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த விஜேந்தர் சிங், அந்த வகையான குத்துச் சண்டை போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று,  பணம் கொழிக்கும் தொழில்முறை குத்துச் சண்டை போட்டிகளில் கவனம் செலுத்தினார். இது வரை நடந்த மூன்று தொழில்முறை குத்துச் சண்டை போட்டிகளில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாட்மின்டன்!

இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான சாய்னா நேவால்,  இந்த ஆண்டு சொல்லிக்கொள்ளும்படியாக ஜொலிக்கவில்லை. காயங்களால் சில முக்கிய தொடர்களில் இருந்து விலகியதால் சாய்னாவிற்கு இந்த ஆண்டு சரியாக அமையவில்லை என்றுதான் சொல்ல முடியும்.
இந்த ஆண்டு நடைபெற்ற இந்தியன் ஓபன் சூப்பர் சீரீஸ் பட்டத்தை வென்றார் சாய்னா. இதே தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்தும் பட்டத்தை கைப்பற்றினார்.

உலக சாம்பியன்ஷிப் தொடரில் முதன் முதலாக இறுதி வரை முன்னேறிய சாய்னா, இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தார்.
இந்தியாவில் ஆண்டு தோறும் நடைபெறும் சையது மோடி உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில்,  பதக்கத்தை கைப்பற்றினார் சாய்னா. இதே தொடரில் இந்தியாவின் கஷ்யாப்,  ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டதை கைப்பற்றினார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆயுதம் மேல் நம்பிக்கையுள்ளோர் வாக்களிக்காதீர்கள்!

நான் உங்களுக்கு தரும் வாக்குறுதி ஆயுதம் இல்லாமல் வன்முறை இல்லாமல் அஹிம்சை மூலம் ராஜதந்திர நகர்வுகள் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com