சற்று முன்
Home / செய்திகள் / பொலிஸ் அதிகார விடயத்தில் முன்னாள் பொலிஸ் பிரதானிகளின் கருத்து ஏற்கமுடியாதது – விந்தன் கனகரட்ணம்

பொலிஸ் அதிகார விடயத்தில் முன்னாள் பொலிஸ் பிரதானிகளின் கருத்து ஏற்கமுடியாதது – விந்தன் கனகரட்ணம்

மாகாணங்களுக்கான பொலிஸ் அதிகாரத்தினை எதிர்த்து விவாதத்திற்குள்ளாக்குவோர் தமிழ் மக்களுக்கு நிர்வாக அதிகாரங்கள் கூட வழங்கப்படக்கூடாது எனச் சிந்திப்போராகவே உள்ளனர் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.
வட மாகாணம் உள்ளிட்ட சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்க வேண்டாம் என முன்னாள் பொலிஸ் பிரதானிகள் சங்கம் தங்களது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனை அது கோரிக்கையாக அரசாங்கத்திற்கும் அனுப்பியுள்ளது. இவ்வாறாக தென்னிலங்கையில் இருந்து வெளிக்கிளம்பும் கருத்துக்கள் இன்றும் அதிகார பகிர்வில்; நிலவும் மோசமான எண்ணங்களையே காட்டுகின்றன.
பொலிஸ் அதிகாரம் அரசியலமைப்பின் 13 திருத்தத்தில் உள்ளது. அதனை நடைமுறைப்படுத்துவற்கு தடைகள் உள்ளன. பொலிஸ் அதிகாரம் வடக்கிற்கு வழங்கப்பட்டால் அது தனிநாட்டு அந்தஸ்த்திற்கு உரித்தானதாக அமைந்துவிடும் என்ற விளக்கமற்ற சிந்தனை தென்னிலங்கை மட்டத்திலும் ஏன் அரசியலில் உள்ள சிங்களத் தலைவர்கள் பலரிடத்திலும் உள்ளது.
பொலிஸ் அதிகாரம் என்பது நிர்வாக ரீதியிலான ஓர் விடயமாகும். மாகாண மட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கு மாகாண மட்டத்தில் பொலிஸ் அதிகாரம் பகிரப்படுவது கட்டாயமானதாகும்.
பொலிஸ் அதிகாரம் வழங்கப்படக் கூடாது என்று கோரும் முன்னாள் பொலிஸ் பிரதானிகள் சங்கம், ‘மகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் அது பொலிஸ் திணைக்களத்தின் அதிகாரத்தினைத் துண்டாடுவதாக அமையும். மாகாண மட்டத்தில் பொலிஸ் அதிகாரம் பகிரப்படுவதால் அவசர (119) பொலிஸ் சேவையினைப் பெற முடியாது போகும். பொலிஸ் திணைக்கள புலனாய்வு பிரிவினை மாகாண மட்டத்தில் துண்டாடுவதாக அமைந்துவிடும்’ என சிறுபிள்ளைத்தனமான யதார்த்தத்திற்குப் பொருந்தாத வியாக்கியானங்களை முன்வைக்கின்றது.
அண்மையில், முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய காமினி குணவர்த்தனவும் பொலிஸ் அதிகாரங்கள் எவ்வேளையிலும் பகிரப்படக் கூடாது என அரசாங்கத்தினை சிங்கள நாளிதழ் ஊடாக எச்சரித்திருந்தார்.
இவ்வாறாக 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் வாயிலாக வழங்கப்பட்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட பொலிஸ் அதிகாரத்தினை நடைமுறைப்படுத்துவதில் தென்னிலங்கையில் தவறான புரிந்துணர்வே என்றும் உள்ளது. அவர்கள் தேசிய பாதுகாப்பிற்கு மாகாண பொலிஸ் அதிகாரம் அச்சுறுத்தல் என்கின்றனர்.
பொலிஸ் அதிகாரம் பொது மக்கள் ஒழுங்குடன் சம்பந்தப்பட்டது. தேசிய பாதுகாப்புடன் இராணுவமே சம்பந்தப்பட்டது. உண்மையில் தேசிய பாதுகாப்பு விடயங்கள் எதுவும் மாகாண பொலிஸ் அதிகாரத்திற்குள் இல்லை.  சட்டத்தின் பிரகாரம் மாகாண பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் கூட மட்டுப்படுத்தப்பட்டவை ஆகும்.
தேசிய பாதுகாப்பு, அரசுக்கு எதிரான குற்றங்கள், அரச சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள், அரச அதிகாரிகளுக்கு எதிரான குற்றங்கள், மத்திய அரசிற்குட்பட்ட விடயங்கள் தொடர்பான குற்றங்கள், மாகாணங்களுக்கிடையிலான குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்கள் மாகாண பொலிஸாரின் அதிகாரத்தின் கீழ் அமையாது. இப்படியிருக்கும் போது தமிழ் மக்களுக்கு குறைந்தளவான அதிகாரங்கள் கூட செல்லக் கூடாது என்பதற்காகவா வடக்கிற்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படக் கூடாது என கெம்பி எழுகின்றனர்?
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குகின்ற போது மாகாணத்தின் பொதுமக்கள் ஒழுங்கு மாகாண சபையின் கண்காணிப்பின் கீழ் வரும். இதன் மூலம் நிர்வாக விடயங்களை திறன்பட ஆற்ற முடியும் என வடக்கு மகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com