சற்று முன்
Home / கட்டுரைகள் / பெண் தலமைத்துவ குடும்பங்களின் பிரச்சனையும் அதிகரிக்கப்பட வேண்டிய பெண் பிரதிநித்துவமும் -ரி.விரூஷன்

பெண் தலமைத்துவ குடும்பங்களின் பிரச்சனையும் அதிகரிக்கப்பட வேண்டிய பெண் பிரதிநித்துவமும் -ரி.விரூஷன்

பெண்கள் என்ற ஒரு சொல்லை சுற்றி தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பல்வேறு விடயப் பரப்புக்கள் கட்டியெழுப்பட்டுள்ளது. பெண்களுக்கு என வருடத்தில் ஒரு நாளினை ஜக்கிய நாடுகள் சபையானது சர்வதேச மகளீர் தினம் என பிரகடனப்படுத்தியுள்ளது. அத்தகையளவு பெண்களுக்கான முக்கியத்துவமானது சர்வதேச ரீதியாக உணரப்பட்டுள்ளது.

பெண்மை என்பது இல்லையென்றால் இப் பூமியில் உயிரினங்களே தோன்றியிருக்க முடியாது. ஏனெனில் மனிதர்கள் மாத்திரமன்றி இப் பூமியில் அனைத்து ஜீவராசிகளும் தோன்றுவதற்கு பெண்மை என்ற ஒன்றே அவசியமாகின்றது. இத் தனித்துவத்தை யாராலும் தட்டிப்பறிக்கவோ அல்லது மாற்றிடவோ மறுத்துரைக்கவோ முடியாது.

இத்தகைய பெண்களின் முக்கியத்துவத்தை அன்றே எமது முன்னோர்கள் உணர்ந்த்தால் தான் பூமியை அன்னைக்கு ஒப்பாகவும் மனிதன் வாழ்வாங்கு வாழ வழிசமைத்த இயற்கைக்கும் ஆற்றுக்கும் நதிக்கும், பெண்களின் பெயரினை சூட்டி பெண்களுக்கு வீட்டிலும் வெளியிலும் முக்கியத்துவத்தையும் தனித்துவத்தையும் கொடுத்திருந்தான்.
இவ்வாறு முக்கியத்துவமும் கௌரவும் பெண்களுக்கு கொடுக்கப்பட்டாலும் பெண்களுக்கு எதிரான அல்லது விரோதமான செயற்பாடுகளே உலகளவில் அதிகம் இடம்பெறுகின்றது. அவற்றை இல்லாது செய்து பெண்ணியத்தை பாதுகாக்க வேண்டியும், அவர்களுக்குரிய உரிமைகளை பெற்றுக்கொடுக்கவுமே ஜக்கிய நாடுகள் சபையால் சர்வதேச மகளீர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

ஏனெனில் உலகம் பூராகவுமே பெண்களுக்கு எதிராக குடும்ப வன்முறை, பாலியல் துன்புறுத்தல்கள், அடுக்குமுறைகள் மற்றும் அடிமைப்படுத்தல், உரிமைகள் மறுக்கப்படல், சமூகத்தின் பல்வேறு சந்தர்ப்பங்களில் சமத்துவமும் சம சந்தர்ப்பமும் வழங்கப்படாமை போன்ற பல எதி்ர்மறையான விடயங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இது சர்வதேச பூராகவும் உள்ள பிரச்சனையாக இருந்தாலும் மூன்றாம் உலக நாடுகளை பொறுத்தளவில் அதிகமாக இடம்பெறக்கூடிய ஒன்றாகவுள்ளது. உதாரணமாக பாலியல் துன்புறுத்தல்களில் இலங்கையை பொறுத்தளவில் UNFPA என்ற தன்னார்வ நிறுவனம் ஒன்றின் ஆய்வில் இலங்கை பெண்களில் 90 வீதமானவர்கள் தமது வாழ்நாளில் ஒரு முறையாவது பொது போக்குவரத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றார்கள் எனவும், அவர்களில் 4 வீதமானவர்கள் மாத்திரமே பொலிஸில் முறைப்பாடு செய்வதாகவும் தெரியவந்துள்ளதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு பல பிரச்சனைகளை பெண்கள் எதிர்நோக்குகின்ற நிலையில் இக் கட்டுரையூடாக நாம் பார்க்கப்போவது பெண் தலமைத்துவ குடும்பங்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனையாகும். இது சர்வதேச ரீதியாக அனைத்து நாடுகளிலும் காணப்பட்டாலும் இலங்கையை பொறுத்தளவில் அதிகமாகவே காணப்படுகின்றது. அதற்கு பிரதான காரணம் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போராகும். இதனால் இலங்கையில் தமிழர்கள் மாத்திரமின்றி சிங்கள மக்கள் மத்தியிலும் இப் பிரச்சனை காணப்படுகின்றது.

ஏனெனில் உள்நாட்டு போரில் விடுதலைப் புலிகள் தரப்பிலும் பல ஆண்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அதேபோன்று அரச படைத்தரப்பிலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர். எனவே இப் பிரச்சனை இலங்கையில் அதிகமாகவுள்ளது. இங்கு நாம் பெண் தலமைத்துவ குடும்பங்களின் பிரச்சனை என்பதை மாத்திரமே பேசுகின்றோம்.
அந்தவகையில் பெண் தலமைத்துவம் குடும்பங்கள் என்பது தொடர்பாக சர்வதேச தொழிலாளர் தாபனம் இவ்வாறு வரைவிலக்கணப்படுத்துகின்றது. அதாவது ‘ குடும்பத்தில் பெண் ஒருவர் மணப்பிரிகை, கணவனை விட்டுப் பிரிந்திருத்தல், வெளிநாடு செல்லுதல், திருமணமாமை, கணவன் இறத்தல், அன்றி கணவன் இருந்த போதிலும் குடும்ப வருமாணத்தில் பங்குகொள்ளாமை போன்ற காரணங்களால் பெண்கள் தனியே குடும்ப சுமையை ஏற்க நேரிடுகின்ற நிலையே’ பெண் தலமைத்துவ குடும்பங்கள் என கூறுகின்றது.

இத்தகைய பெண் தலமைத்துவ குடும்பங்கள் உருவாகின்றமைக்கு பல்வேறு காரணங்களை சரோஜா சிவச்சந்திரன் என்பவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அதாவது உள்நாட்டு போர், இடப்பெயர்வுகள், ஆண்கள் வெளிநாட்டுக்கு செல்லுதல், இதனால் குடும்பங்களில் ஏற்படுகின்ற சிதைவ போன்றன பெண் தலமைத்துவ குடும்பங்கள் ஏற்பட காரணமாகின்றது என அவர் தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு காணப்படுகின்ற பெண் தலமைத்துவ குடும்பங்கள் பல்வேறு பிரச்சனைகளை சமூக மட்டத்தில் எதிர்நோக்குகின்றார்கள். அதாவது பிரதானமாக இவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனை பொருளாதார பிரச்சனையாகும்.
பெண் தலமை தாங்கும் குடும்ப அங்கத்தவர்களின் பொறுப்புக்களை பெரும்பாலும் அப் பெண் மாத்திரம் பொறுப்பேற்பதால் அக் குடும்பம் வறுமை நிலையிலேயே காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட வறுமை மதீப்பிட்டு ஆய்வுகளூடாக 25-60 வீதமான கிராமிய குடும்பங்கள் பெண் தலமை தாங்கும் குடும்பங்களாக இருப்பதாக சரோஜா சிவச்சந்திரனது தனது ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இவை தவிர கல்வி நிலையிலும், பாதுகாப்பு, போஷாக்கு போன்றவற்றிலும் இப் பெண் தலமைத்துவ குடும்பங்கள் பாரிய சவாலை எதிர் நோக்கி வருகின்றார்கள். பொருளாதாரத்தையும் தாமே கவனித்து குடும்பத்தின் அன்றாட செயற்பாடுகளையும், பிள்ளைகள் பெற்றோர் போன்றோரையும் கவனிக்க வேண்டிய நிலையும் இவர்களுக்கு காணப்படுகின்றது. இது போன்ற பல பிரச்சனைகளை இப் பெண் தலமைத்துவ குடும்பங்கள் எதிர்நோக்குகின்றன.
பெண் தலமைத்துவ குடும்பங்கள் இத்தகைய பிரச்சனைகளை எதிர்நோக்குவதற்குரிய காரணம் பெண் தலமைத்துவ குடும்பங்கள் சார்ந்த அரச கொள்கை திட்டமிடல் ஒன்று முறையாக காணப்படாமையும், நடமுறையில் இருக்கின்ற ஒரு சில திட்டங்கள் கூட இவர்களுக்கு சென்றடையாமையும் ஆகும்.

உதாரணமாக பெண் தலமைத்துவ குடும்பங்களுக்கு என மேலைத்தேய நாடுகளில் பிச்சை சம்பளமாக குறிப்பிட்டளவு பணம் அரசாங்கத்தால் கொடுக்கப்படுகின்றது. ஆனால் எமது நாட்டை பொறுத்தவரையில் அவ்வாறு கொடுக்கப்படுகின்ற பணம் மிகச சொற்பமாகவே உள்ளது. அப் பணத்தை 5 ஆயிரம் ரூபாவாக கொடுக்கும்படி பெண் தலமைத்துவ குடும்பங்கள் கோரிய போதும் அதற்கு அரசாங்கம் இதுவரையில் அனுமதி கொடுக்கவில்லை. இது போன்ற பல சந்தர்ப்பங்கள் உள்ளது.

எனவே பொதுவாக பெண் தலமைத்துவ குடும்பங்களது பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பெண்கள் குறிப்பாக பெண் தலமைத்துவ குடும்பங்களை சேர்ந்த பெண்களும் தீர்மானம் எடுக்கும் துறைகளிலும், திட்டங்களை உருவாக்கும் துறைகளிலும் பங்குபெற வேண்டும் என்பது பொதுவாக கூறப்படுகின்றது. ஆனால் அதற்கு ஒரே வழி பெண்களின் அரசியல் பிரவேசம் அதிகரிப்பதாகும்.
அதாவது ஒரு நாட்டின் பாராளுமன்றமே நாட்டிற்குரிந சட்டவாக்கத்தையும் கொள்கை வகுப்புக்களையும் மேற்கொள்ளும் சபையாகும். இச் சபையால் அங்கரிக்கப்படுகின்ற போதே ஒரு கொள்கையாயினும் சரி, சட்டமாகிலும் சரி முழுமையான சட்ட அந்தஸ்தை பெறும்.
அதேபோன்று மக்கள் பிரதிநிதி என்பவரே தன் சமூகம் சார்ந்த கொள்கைகள் திட்டமிடல்களை உருவாக்குபவராகவும் அதில் செல்வாக்கு செலுத்துபவராகவும் உள்ளார். எனவே இத்தகைய துறையில் பெண்கள் சார்ந்த கொள்கைகளையும் திட்டமிடல்களையும் மேற்கொள்ள பெண்களின் பிரதிநித்துவம் அவசியமாகின்றது.

குறிப்பாக எமது நாட்டை பொறுத்தவரையில் அல்லது உலகம் முழுவதிலுமே சட்டவாக்க சபையில் அல்லது பாராளுமன்றத்தில் ஆண்களின் பிரதிநித்துவமே அதிகமாகவுள்ளது. இதன்காரணமாக அங்கு பெண்கள் சார்ந்த கொள்கை திட்டமிடல்கள் குறைவாகவே உள்ளன. அச் சபையில் இருக்கூடிய ஒரு சில பெண்களும் பெண்கள் சார்ந்து திட்டமிடல்களை மேற்கொள்ளும் யோசனைகளை முன்வைத்தாலும் அதனை பெரும்பான்மையுடன் நிறைவேற்ற அவர்கள் தரப்பில் பலம் போதாமல் உள்ளது.

உதாரணமாக நாம் மேற்கூறிய விடயத்தையே குறிப்பிட்டால், பெண் தலமைத்துவ குடும்பங்களிற்கான கொடுப்பனவில் கூட பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான பெண்கள் அங்கத்துவம் பெறுபவர்களாக இருந்தால் அத் திட்டத்தை இலகுவில் நடமுறை திட்டமாக கொண்டுவர சந்தர்ப்பத்தை கொடுக்கும்.
ஆண்கள் எமக்கான தீர்வுகளை பெற்றுத் தருவார்கள் என பெண்கள் எப்போதும் அதித நம்பிக்கை கொண்டிருப்பது மடமைத்தனமென்றே கூற முடியும். பொதுவாக ஒர் பழமொழி கூறுவார்கள். அதாவது ‘தலை வலியும் காச்சலும் தனக்கு வந்தால் தான் புரியும்’ என்று. பெண்கள் , பெண் தலமைத்துவ குடும்பங்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனைகளை என்றுமே ஆண்கள் அனுபவிக்க போவதில்லை. எனவே அவ்வாறான நிலை உருவாகத வரை ஆண்கள் முற்றுமுழுதாக பெண்களுக்கான சிபாரிசுகளை மேற்கொள் போவதில்லை.

‘பாம்பின் கண் பாம்பறியும்’ என்பது போல பெண்களின் பிரச்சனைகளை பெண்களே அறிவர். எனவே அத்தகைய பெண்கள் நாட்டின் சட்டவாக்க, கொள்கை வகுக்கும் மற்றும் தீர்மானம் எடுக்கும் துறையில் பெரும்பான்மையாக கோலோச்ச தொடங்குவதனூடாக மாத்திரமே பெண் தலமைத்துவம் போன்ற பெண்கள் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

83 ஜூலை கலவரத்தில் சிக்கிய அபாக்கியசாலிகள் – அனுஷா சிவலிங்கம்

இலங்கையில் தமிழர்கள் மீது செலுத்தப்பட்ட ஸ்ரீ லங்கா அரசின் அநீதிப் பட்டியலில் முதல் இடமாக மலையகத்தில் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com