சற்று முன்
Home / செய்திகள் / புதுக்குடியிருப்பில் விவசாய குளத்தை மூடி அனுமதியின்றி கட்டப்பட்ட சிவன் ஆலயம்

புதுக்குடியிருப்பில் விவசாய குளத்தை மூடி அனுமதியின்றி கட்டப்பட்ட சிவன் ஆலயம்

செய்தித்தொகுப்பு – துன்னாலைச் செல்வம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் குளத்தை மூடி சிவன் ஆலயம் ஒன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலக அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தி அனுமதியின்றி ஆலயம் கட்டப்பட்டது என்ற தகவல் பெறப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் உள்ள மணற்குளத்தினுள் பெரிய அளவில் சிவன் ஆலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளதால் அந்தக் குளத்தின் மூலம் விவசாயத்தை மேற்கொண்டு வரும் அந்தப் பகுதி மக்கள் தமது வாழ்வாதாரத்தை நகர்த்த முடியாமல் தவிக்கின்றனர். 30 வருடங்களாக இந்தப் பிரச்சினை முடிவின்றி தொடர்கிறது. மணற்குளத்தினை மீட்பதற்காக தொடர்ந்து போராடுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை மூடமுடியாது என்று சொல்லுகிறார்களே ஒழிய அந்தக் குளத்தினை மீட்டு மக்கள் விவசாயம் செய்வதற்கு ஆவண செய்கிறார்கள் இல்லை. இதனால் அந்த மக்களின் பொருளாதாரம் பின்தங்கிச் செல்கிறது.

ஆலய தரப்பினர் அந்த மக்களின் வாழ்வு பற்றி துளியளவு மனிதநேயமின்றி குளத்தின் பெயர்ப் பலகையை உடைத்தெறிந்ததுடன் குளத்தின் எல்லைகளாக போடப்பட்ட தூண்களையும் உடைத்தெறிந்துள்ளனர். அதுமட்டுமல்ல அந்த மக்களை அந்த இடத்தில் இருந்து விரட்டிவிட வேண்டும் என்று கங்கணம்கட்டி நிற்கின்றனர். 9.3 ஏக்கர் குளத்தின் கால்வாசிப் பகுதியை மூடி ஆலயம் கட்டப்பட்டுள்ளதால் குளத்தின் மூலம் தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வரும் மக்களின் இருப்பிடம் கேள்விக்குறியாகி வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த மணற்குளத்தினுள் மண்டபம் உட்பட வீடு மற்றும் கள்ளுத்தவறணையும் கட்டப்பட்டுள்ளன. மந்துவில் கிராமத்துக்கு உரித்து இல்லாதவர்கள் அடாத்தாக இந்தக் குளத்தில் ஆலயத்தை கட்டி விஸ்தரித்து வருகின்றனர். மந்துவில் கிராம மக்கள் ஒன்றாகச் சேர்ந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியும் பயனளிக்கவில்லை.

அரசியல்வாதிகளினதும் அதிகாரிகளினதும் செல்வாக்கிலேயே இந்த மணற்குளத்திற்குள் ஆலயம் கட்டப்பட்டு மேலும் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் குளத்தில் இருந்து 24 ஏக்கர் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. கால்நடைகள் மேய்ச்சலுக்கு விடுகின்றனர். மீன்பிடித்து தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் குளத்தில் நீர் இருப்பதால் 3 கிராமங்களைச் சேர்ந்த 2ஆயிரம் வரையான குடும்பங்கள் நல்ல குடிதண்ணீர் பெறுகின்றனர். குளத்தை மூடி வருவதால் நீர் மட்டம் குறையுமாக இருந்தால் கிணற்று நீர் மட்டம் குறைந்து குடிதண்ணீரைப் பெற முடியாது போய்விடும். இயற்கைக்கு குந்தகம் விளைவித்தால் இந்தக் கிராம மக்கள் இடம்பெயர வேண்டி வரும் என்றும் கவலை தெரிவிக்கின்றனர்.

ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் இந்தப் பிரச்சினை பேசு பொருளாக வந்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. முல்லைத்தீவு கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் குளத்தின் நிலஅளவை வரைபடத்தில் குறித்துக் காட்டப்பட்டுள்ளதன் அடிப்படையில் குளத்தினை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து அவர்களை வெளியேற்றுமாறு 14.05.2018 புதுக்குடியிருப்பு பிரதேச செயலருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. பிரதேச செயலர் கண்டும் காணாமல் இருப்பதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.

குளப்பிரச்சினை சம்பந்தமாக போகாத இடமில்லை என்றும் சம்பந்தப்பட்டவர்கள் குளத்தினை மூட முடியாது என்று சொல்லுகின்றார்களே ஒழிய அதற்கான நடவடிக்கை எவையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

ஆலய நிர்வாகத்தின் விட்டுக்கொடுப்பின்மையும் கமக்கார அமைப்பின் விட்டுக்கொடுப்பின்மையும் காரணமாக இந்தக் குளத்தின் பிரச்சனை தீர்;க்கப்படாமல் இழுபட்டு வந்த நிலையில் மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டதிற்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கும் எதுவித முடிவுகளும் எட்டப்படாத நிலையில் இரு தரப்பினரையும் ஒரு இணக்கத்திற்கு கொண்டுவருவதற்கு முடியாமல் போனது.

மக்களின் தொடர் அழுத்தம் காரணமாக பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் 25.09.2018 அன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மண்டத்தில் கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம.பிரதீபன், முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் பிரதேச சபை தவிசாளர் உப தவிசாளர் பிரதேச சபை உறுப்பினர்கள் கமக்கார அமைப்புக்கள் ஆலய நிர்வாகத்தினர் என பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தின் போது அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆலயத்திற்கான குளத்தினை குறிப்பிட்ட அளவு அளந்து கொடுப்பதற்கு மக்கள் இணக்கம் தெரிவித்தனர்.

ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு அன்று முற்பகல் 11.30 மணிக்கு அனைவரும் சென்ற போது அங்கு இணக்கப்பாட்டிற்கு இணங்கிய குளத்தின் எல்லை போதாது என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அதாவது ஆலயத்தின் தேர் இழுப்பதற்கு வீதியின் விஸ்தீரணம் தேவை என்பதை அவர்கள் வலியுறுத்திவந்த வேளை கமக்கார அமைப்புக்கள் இணக்கப்பாட்டிற்கு எட்டப்பட்ட எல்லையினை விட மேலதிகமான இடத்தினை ஆலயத்திற்காக விட்டுக்கொடுத்தார்கள் அதுவும் போதாது என ஆலய நிர்வாகத்தினரால் தெரிவிக்கப்பட்டது.

அன்று மாலை 4.00 மணியளவில் பிரதேச செயலர் நில அளவை திணைக்களம் மற்றும் பொலிஸார் கமநலசேவை திணைக்கள உத்தியோகத்தர்கள் மக்கள் முன்னிலையில் ஆலயத்தின் தேவைக்கான குளத்தினை எல்லைப்படுத்தி தூண் போட்டு அடையாளப்படுத்தினர்.

இருந்தும் என்ன அன்றிரவே ஆலய தரப்பினரால் எல்லைக்கற்களாக போடப்பட்ட மூன்று தூண்களும் மணற்குளத்தினை அடையாளப்படுத்தும் பெயர் கல்லும் உடைத்து நொருக்கப்பட்டது. பொலிஸில் முறைப்பாடு செய்தும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

குளத்திற்குள் ஆலயம் கட்டுவதை முற்றாக தடை செய்ய வேண்டும். குளத்தை மூடுவதற்கு சட்டத்தில் இடமில்லை. கமநலசேவை அலுவலகம் எதற்காக இயங்குகிறது. குளத்தினுள் ஆலயம் கட்டியவர்கள் மீதும் கட்டுவதற்கு அனுமதி வழங்கிய சம்பந்தப்பட்ட அரச நிர்வாக தரப்பினர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாது போனால். இந்தக் குளப்பிரச்சினை தீர்வுக்கு கொண்டு வரமுடியாது என்பது உண்மை.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com