சற்று முன்
Home / செய்திகள் / பராமரிப்பின்றி காணப்படும் நன்னீர் நிலைகள் – நிலத்தடி நீர் அபாயம்

பராமரிப்பின்றி காணப்படும் நன்னீர் நிலைகள் – நிலத்தடி நீர் அபாயம்

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் 45 குளங்கள் உள்ளன எனவும் , அவற்றில் சின்னக்குளம் மற்றும் யமுனா எரி ஆகியவற்றின் நீரே நல்ல நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேவேளை நெடுங்குளம் , இலந்தைக்குளம் , மூண்டுகுளம் , தேவரிக்குளம் , கன்னாதிட்டிக்குளம் , கஸ்தூரியார் வீதி வண்ணன்குளம் , கல்லுக்குளம் ,சின்னப்பள்ளி பெரிய குளம் ,பானான் குளம் ஆகிய ஒன்பது குளங்களின் நீர் மிக மோசமான நிலையில் காணப்படுவதாகவும் மூன்று குளங்கள் ஓரளவு நல்ல நிலையில் நீர் காணப்படுவதாகவும் ஏனைய 31 குளங்களின் நீர் மோசமான நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக யாழ்.மாநகர சபை எல்லைக்குள் உள்ள நீர் நிலைகள் தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு பதில் அளிக்கப்பட்டு உள்ளது.

அதேவேளை குளத்தின் தன்மை தொடர்பில் கேட்ட போது காங்கேசன்துறை வீதியில் உள்ள வட்டக்குளம் , கோம்பயன் குளம் , கல்லுக்குளம் , சின்னப்பள்ளி பெரிய குளம் , திரும்பன் குளம் ஆகிய ஐந்து குளங்களும் மோசமாக பாதிப்படைந்து உள்ளதாகவும் , சின்னக்குளம் , புங்கன்குளம் வீதியில் உள்ள வண்ணான்குளம் , கன்னாதிட்டிக்குளம் , கற்குள வீதியில் உள்ள கற்குளம் ராஜாளிகுளம் , ஆரியகுளம் உள்ளிட்ட 17 குளங்கள் நல்ல நிலையில் உள்ளதாகவும் , ஏனைய 22 குளங்களும் பகுதிகளவில் பாதிப்படைந்துள்ளதாகவும் பதிலளிக்கப்பட்டு உள்ளது.

யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீரினை பெறுவதற்கு மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அந்நிலையில் குடிநீரினை காசு கொடுத்து வாங்கும் நிலையிலே மக்கள் காணப்படுகின்றார்கள்.

மாநகர சபை எல்லைக்குள் வசிப்பவர்களின் பெரும்பாலனவர்கள் குழாய் மூலமே குடிநீரினை பெற்றுக்கொள்கின்றார்கள். அதற்காக இதுவரை காலமும் மாதாந்தம் 70 ரூபாயினை மாநகர சபைக்கு செலுத்தியே குடிநீரினை பெற்றுக்கொண்டார்கள். அந்நிலையில் இந்த வருடம் முதல் மாதாந்தம் 130 ரூபாய் குடிநீருக்காக செலுத்துகின்றார்கள்.

தமது வீடுகளுக்கு அருகில் நன்னீர் தேக்கமான குளங்கள் காணப்படும் போது அந்த குளத்து நீரினை எந்தவொரு தேவைக்கும் பயன்படுத்த முடியாத நிலையில் நீரினை காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் மக்கள் காணப்படுகின்றார்கள்.

அதேவேளை குளத்தினை மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமையால் பாதுகாக்க தவறுகின்றார்கள். குளத்தின் அருகில் வசிப்பவர்கள் தமது வீட்டு கழிவு நீரினை குளத்தினுள் கலக்க விடுகின்றார்கள். அத்துடன் குப்பைகளை குளத்தினுள் போடுகின்றார்கள். இவற்றினால் குளங்கள் அசுத்தமடைந்து குளத்து நீரும் அசுத்தம் மடைகின்றன.

யாழில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் யாழில் உள்ள நன்னீர் தேக்கங்களை அசுத்தமாக்குவதன் ஊடாக நிலத்தடி நீர் மாசுபடுகின்றது. யாழில் நிலத்தடி நீரினை பாதுகாப்பதன் ஊடாகவே சுத்தமான குடிநீரினை பெற்றுகொள்ள முடியும். அதற்கு நன்னீர் தேக்கங்கள் உரிய முறையில் பராமரிக்கபாட்டாலே நிலத்தடி நீரினை தூய்மையாக பெற முடியும்.

நன்னீர் தேக்கங்களை புனரமைப்பு செய்து அதனை சுத்தமாக பராமரிப்பதன் ஊடாகவே யாழில் உள்ள குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க முடியும். அதற்கு உரிய தரப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com