சற்று முன்
Home / சிறப்புக் கட்டுரைகள் / படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்தமாக யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்தமாக யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் தங்கப் பதக்கம் யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கமாக இவ் ஆண்டு செல்வி அன்ட்கேசிகா லோறன்ஸ் ராஜ்குமாருக்கு வழங்கப்படுகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34ஆவது பட்டமளிப்பு விழா 06.12.2019 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 08.12.2019 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகின்றது.

07.12.2019 சனிக்கிழமை நடைபெறும் அமர்வின் போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையில் ஊடகவியலில் திறமைச் சித்தி பெற்ற மாணவியான உடுவிலைச் சேர்ந்த செல்வி அன்ட்கேசிகா லோறன்ஸ் ராஜ்குமாருக்கு ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடக மாணவனாகப் படித்துக் கொண்டு ஊடகவியலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நிலக்சன் 2007 ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி அதிகாலை 5 மணியளவில் அவரது வீட்டில் வைத்து பெற்றோர் முன்னிலையில் ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

நிலக்சனது ஞாபகார்த்தமாக அவருடன் யாழ் இந்துக்கல்லூரியில் ஒன்றாய்க் கற்ற 2004 உயர்தர மாணவர்களால் முன்னெடுக்கப்படும் “நிலா நிதியம்” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தங்கப்பதக்கத்தை அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

இந்நிதியத்தின் அங்குரார்ப்பண சான்றிதழ் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தலின் போது யாழ் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியிடம் கையளிக்கப்பட்டு பின்னர் யாழ் பல்கலைகழகத்திடம் நிதி கையளிக்கப்பட்டது.

குறித்த அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்ற அதேவேளை கடந்த ஆண்டு கோண்டாவில் குமரகோட்டத்தைச் சேர்ந்த யாழ் பல்கலை மாணவியான தினேஸ் விஜயதர்சினி பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் கல்கலை பட்டமளிப்பு விழாவில் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கத்தினை இவ் ஆண்டு பெற்றுக்கொள்ளும் செல்வி அன்ட்கேசிகா லோறன்ஸ் ராஜ்குமாருடனான கருத்துப் பகிர்விலிருந்து…….

எனது பெயர் அனற்கேசிகா லோறன்ஸ் இராஜகுமார். உடுவில் பிரதேசத்தில் வசித்து வருகின்றேன். எனது தாயார் ஒரு விஞ்ஞான பாட ஆசிரியர். தந்தை வியாபாரம். எனது கல்வி செயன்முறையைப் பொறுத்தவரையில் தரம் 1 தொடக்கம் 11 வகுப்பு வரை உடுவில் மகளிர் கல்லூரியிலும் பின்னர் உயர்தரத்திற்காக சுன்னாகம் ஸ்கந்தவரோதையா கல்லூரியிலும் கல்வி கற்கவேண்டிய தேவை ஏற்பட்டது. அதன் பின்னர் ABC பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி ஊடகக் கற்கைகளை சிறப்புகலையாக தெரிவுசெய்து கற்று தற்போது ஊடகக்கற்கைகள் துறையில் உதவி விரிவுரையாளராக பணியாற்றிக்கொண்டிருக்கின்றேன்.

நான் உயர்தரத்திலே கல்வி கற்றுக்கொண்டிருக்கும் போதுதான் ஊடகக்கற்கைகள் பாடநெறி பாடசாலை மட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் உயர்தரத்தில் ஏற்கனவே மூன்று பாடங்கள் தெரிவு செய்தமையினால் குறித்த பாடத்தெரிவினை என்னால் கற்கமுடியவில்லை. பின்னர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான போது முதலாம் வருடத்தில் கற்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. அடுத்து கோட்பாடு ரீதியாக நாம் கற்கின்ற விடயங்களை பயிற்சியாக செய்து பார்க்கின்ற விடயம் என்னை மிகவும் கவர்ந்தது. குறிப்பாக பல்கலையன் என்ற பத்திரிகை ஒன்றினை வடிவமைத்து வெளியிட்டமை. பின்னர் இரண்டாம் வருடத்தில் புகைப்பட இதழியல் என்ற பாடத்திற்காக புகைப்படங்களை நாங்களே களத்திற்கு சென்று எடுத்தமை மற்றும் விவரணபடஉருவாக்கத்திற்காக செயற்பட்டமை என கற்கின்ற பாடங்களை செயன்முறைப்படுத்தி பார்க்கின்ற விடயம் குறிப்பாக சொல்லலாம். அடுத்து தற்போது துறைத்தலைவராக பணியாற்றுகின்ற கலாநிதி சி.ரகுராம் சேர் அவர்களின் கற்பித்தல் செயன்முறைகளோடு எப்போதும் பல புதிய விடயங்களையும் கற்றுக்கொண்டோம். அதுமட்டுமல்லாது ஊடக நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய வாய்ப்புக்கள் என புதிய புதிய விடயங்களை கற்க முடிந்தது.

எனது பணி ஊடகத் துறை சார்ந்ததாக இருக்கும். தற்போது உதவி விரிவுரையாளராக ஊடகக்கற்கைகள் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன். குறித்த பணிக்காலம் முடிவடைந்த பின்னர் மின்னியல் ஊடகம் ஒன்றில் பணியாற்றவேண்டும் என்பது எனது ஒரு அவா என்று கூட சொல்லலாம். ஏற்கனவே எமது கற்கை நெறி காலப்பகுதியில் இலங்கை ரூபவாகினி தொலைக்காட்சி கட்டமைப்பில் தொழில்சார் தகைமை பயிற்சிக்காக செய்தி மற்றும் நிகழ்ச்சிகள் பிரிவில் பணியாற்றிய அனுபவம் இவ்வாறான ஒரு ஊடகம் சார்ந்து பணியாற்றவேண்டும் என்ற ஆவலை கொடுத்தது.

யாழ் பல்கலைக்கழகத்தில் எமது ஊடகக்கற்கைகளைப் பொறுத்தவரை சிறு அலகாக ஆரம்பிக்கப்பட்டு இன்று தனித்துறையாக மிளிர்கின்றது. இன்று குடும்பத்தில் நானும் ஒரு உறுப்பினர் என்ற வகையிலும் என்னை இவ்வளவு தூரம் வளர்த்து விட்ட இத் துறைக்கு நிச்சயமாக எதிர்காலத்தில் எனது பங்களிப்பு எப்போதுமே இருக்கும்.

இன்று ஊடகக் கல்வியை விருப்பத்துடனும் ஆர்வத்துடனும் பயின்றயின்றவர்களில் பலர்; இன்று ஊடகத்துறையில் பணியாற்றுகின்றார்கள் என்பதனையும் குறிப்பிட்டு கூறியே ஆகவேண்டும் எனினும் சிலருக்கு ஊடகத்தில் பணியாற்றக்கூடிய சந்தர்ப்பம் அமைந்து விடுகின்றது. சிலர் அதற்கு அப்பால் தொழில் வாய்ப்புக்கள் வருகின்றபோது தமது தெரிவுகளை மேற்கொள்கின்றார்கள்.

அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்கப்படுகின்ற பதக்கத்தினை பெறுவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். அதுமட்டுமல்லாது பட்டமும் பதக்கமும் பெறுவதற்கு வழிகாட்டியாக செயற்பட்ட எமது ஊடகக்கற்கைகள் துறை தலைவர் கலாநிதி சி. ரகுராம் சேர் அவர்களிட்கும் விரிவுரையாளர்களான திருமதி பூங்குழலி சிறீசங்கீர்த்தனன் மற்றும் திரு. யூட் டினேஸ் கொடுதோர் மற்றும் கிருத்திகா தர்மராஜா மிஸ் அவர்களிட்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்வதோடு இன்று ஊடகங்களின் நிலை என்பது இன்று வளர்ந்து வருகின்றதொன்றாகவும் யாழ்ப்பாணத்தில் இருந்து வலையமைப்புக்கள் ஊடாக நிகழ்ச்சிகள் வெளிநாடுகள் வரை ஒளிபரப்ப்படுகின்றமையும் சிறப்பாகும் பல ஆளுமை மிக்க ஊடகவியலாளர்களை இனங்காண்பிப்பதாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் யாழ்ப்பாண ஊடகங்களின் நிலை என்பது இன்று வளர்ச்சிப்போக்கினையும் மக்களுக்கான காத்திரமான செய்திகளை வழங்குவதில் முன்னோடியாகவும் திகழ்கின்றது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com