சற்று முன்
Home / செய்திகள் / “தோற்கடித்தமைக்காக பழிவாங்கிவிடாதீர்கள்” – சுதந்திரக் கட்சியிடம் சுமந்திரன் வேண்டுகோள்

“தோற்கடித்தமைக்காக பழிவாங்கிவிடாதீர்கள்” – சுதந்திரக் கட்சியிடம் சுமந்திரன் வேண்டுகோள்

“நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சியைத் தோற்கடித்தமைக்காகத் தமிழர்களை ஒருபோதும் பழிவாங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடந்துகொள்ளக் கூடாது. புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் முற்போக்கானவர்களான தயாசிறி ஜயசேகரவும் டிலான் பெரேராவும் தலைமை தாங்கவேண்டும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வடமராட்சி கிழக்கு இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, மருதங்கேணி பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

‘நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அவசரத்தால், தமிழர்கள் நியாயமான அதிகாரப் பகிர்வை இழக்கநேரிடும்’ என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலர் தயாசிறி ஜயசேரக தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், மருதங்கேணி பிரதேச செயலகத்தில் நடந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உரையாற்றியிருந்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

எரிச்சலின் விளைவு

நாட்டில் ஜனநாயக மீறல் இடம்பெற்றபோது, ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்ற பொறுப்பு பிரதான எதிர்க்கட்சியாக இருந்த கூட்டமைப்பின் தலையில் சுமத்தப்பட்டிருந்தது. அதனை நாங்கள் பொறுப்புடன் நிறைவேற்றியிருக்கின்றோம்.

அதை நாங்கள் நிறைவேற்றிய காரணத்தால் சிலருக்கு கசப்பு ஏற்பட்டிருக்கின்றது. தவறான வழியில் பதவிகளைக் கைப்பற்ற முனைந்தவர்கள், ஜனநாய விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அதிகாரத்தில் நிலைத்திருக்க விரும்பியவர்கள் ஆகியோர் நீதிமன்றங்கள் ஊடாக அவர்கள் தடுக்கப்பட்டார்கள்.

அதன் காரணமாக அவர்களுக்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கின்றது. மனஉளைச்சல் ஏற்பட்டிருக்கின்றது.

அந்த மன உளைச்சலின் வெளிப்பாடுகளை அண்மைய நாட்களாக ஊடகங்களில் காணக் கூடியதாக இருக்கின்றன.

விதிமுறைகள் மீறப்பட்டபோது தட்டிக்கேட்டதுதான் என் மீது சிங்கள அரசியல்வாதிகள் விமர்சனங்களை முன்வைக்கக் காரணம்.

தவறாகச் செயற்பட்டவர்களால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதுதான் அதற்கான காரணம்.

அவர்கள் சொல்வதற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. எதையாவது பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவானவர்கள்

ஊடகங்களில் எனது நண்பர்கள் இருவர் தயாசிறி, டிலான் பெரேரா ஆகியோர் கடுமையான கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்குப் பதில் சொல்ல வேண்டிய தேவை இருக்கின்றது.

ஏனென்றால் நான் சொன்னதைப் போன்று அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். அரசியலிலே நண்பர்களும் கிடையாது; எதிரியும் கிடையாது என்று சொல்லுவார்கள். ஆனால், இவர்கள் இருவரையும் நெருங்கிய நண்பர்கள் என்று அழைப்பதற்கு முக்கிய காரணம் உண்டு.

இந்த நாட்டில் அதிகாரப் பகிர்வு சரியான முறையில் செய்யப்பட வேண்டும், தமிழ் மக்களுக்கும் அரசியல் அதிகாரங்கள் சரியான முறையிலே கொடுக்கப்பட வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் நீண்ட காலமாக நிலைத்து நிற்கின்றவர்கள் இவர்கள் இருவரும்.

எப்பொழுதெல்லாம் அதிகாரப் பகிர்வு பிரச்சினை எழும்போது, அதற்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் இவர்கள் இருவரும். சந்திரிகா அம்மையாரின் காலத்தில் வெண்தாமரை இயக்கம் என்று அதிகாரப் பகிர்வு ஆதரவான அந்த இயக்கத்தில் முன்னின்று செயற்பட்டவர் டிலான் பெரேரா.

அந்தக் காலத்திலேயே பீரிஸின் உதவியாளராக, நிபுணராக அரசரமைப்பு உருவாக்கத்துக்கு உழைத்தவர் தயாசிறி ஜயசேகர.

அன்றிலிருந்து இன்று வரைக்கும் அதிகாரப் பகிர்வு அர்த்தமுள்ள வகையிலேயே இருக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள்.

கனவு காண்கிறார்கள்

புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை வெளிவந்தபோது, நாடாளுமன்றத்தில் 6 நாட்கள் விவாதம் நடந்தபோது அது பற்றி பயனுள்ள வகையில் உரையாற்றியிருந்தார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, சமஷ்டி என்று சொல்லப்பட்டால் அதற்கு நான் ஆதரவு கொடுப்பேன். அப்படிச் சொல்லப்படாவிட்டாலும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை ஆதரிப்பேன் என்று சொன்ன ஒரேயொரு சிங்கள அரசியல்வாதி.

ஆனால், இவர்கள் இருவரும் நாட்டிலே புதிய அரசமைப்பு உருவாகுவதை, சுமந்திரன் தன்னுடைய அவசரத்தினாலே குழப்புகின்றார் என்று சொல்லியிருக்கின்றார்கள்.

தேர்தல் நடைபெற இருக்கின்றது, தேர்தல் நடைபெற இருக்கின்ற காரணத்தால் இது செய்ய முடியாது என்று தோரணையில், அப்படி செய்ய முடியாமல் போய்விட்டால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனவாதகக் கட்சி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரப்புரை செய்யப் போகின்றது என்று அவர்கள் கனவு கண்டு பெரிய ஆதங்கத்தை கொட்டித் தீர்த்திருக்கின்றார்கள்.

இதுவரையில், முறையான அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவாகச் செயற்பட்டதைப் போன்று எதிர்காலத்திலும் செயற்படுவீர்கள் என்று நம்புகின்றோம். அதைத்தான் நாங்கள் உங்களிடத்தில் எதிர்பார்க்கின்றோம். நான் உங்களோடு முரண்பட விரும்பவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளேயே இருக்கின்ற மிகவும் முற்போக்கான நீங்கள் இருவரும் அதிகாரப் பகிர்வுக்காக குரல் கொடுத்து, அது காலதாமதமில்லாமல் நிறைவேறுவதற்கு உங்கள் ஆதரவுகளையும் கொடுக்கவேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கின்றேன்.

சுதந்திரக் கட்சிக்கு தலைமை தாங்குங்கள்

அதை எப்படியாகச் செய்து முடிக்கவேண்டும் என்பது தொடர்பிலும் உங்களை வெளியேவிட்டு பேச விரும்பவில்லை. உங்களோடும் பேசித்தான் செய்ய விரும்புகின்றோம்.

நாட்டில் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியை வெற்றியடைய விடாமல் தடுத்த ஒரு காரணத்துக்காக நீங்கள் உங்கள் கொள்கையை மாற்றவேண்டாம்.

அரசியல் சூழ்ச்சியை வெற்றி பெற அனுமதித்திருந்தால் அது நாட்டுக்கும் நல்லதல்ல. உங்கள் கட்சிக்கும் நல்லதல்ல.

சரியானதைச் செய்ய வேண்டியதைச் செய்தமைக்காக, அதிகாரப் பகிர்வு தொடர்பில் நீங்கள் இதுவரை பின்பற்றிய கொள்கையைக் கைவிடவேண்டாம்.

எங்களோடு சேர்ந்து பயணியுங்கள். நாங்கள் அவசரப்படவில்லை. 70 ஆண்டுகளாக காத்திருக்கின்றோம். இதில் அவசரப்படுகின்றோம் என்று சொல்வதற்கு எதுவும் கிடையாது.

அவசரமில்லை என்றாலும், காலதாமதம் இல்லாமல் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வையும் நாங்கள் கண்டுகொள்வதற்கு நாட்டிலே இருக்கின்ற இரண்டு முக்கிய கட்சிகளோடும் அதனைச் சேர்ந்து நிறைவேற்றுவதற்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நீங்கள் இருவரும் தலைமை தாங்க வேண்டும். அதனைச் செயற்படுத்த முன்வரவேண்டும் – என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com