சற்று முன்
Home / Uncategorized / தீவிரவாதிகள் கை ஓங்கிய 2015

தீவிரவாதிகள் கை ஓங்கிய 2015

ஒவ்வொரு வருடமும் உலகம் ஏதேனும் ஒரு வகையில் மாறுதலுக்கு உள்ளாகிக் கொண்டே வருகிறது. ஆனால் எந்த மாற்றமும் அடையாமல் பல வருடங்களாக இறவா நிலையுடன் சில பழக்கங்கள் மட்டும் நம்முடன் தொடர்ந்து வருகிறது.
அப்படி இறவா நிலையுடன் இருக்கும் பழக்கங்களில் முதன்மையானது காதல். காதலுக்கு அடுத்த படியான நிலையில் இருப்பதுதான் தீவிரவாதம். பலவருடங்களாக உலகை ஏதோ ஒரு வகையில் இந்த தீவிரவாதம் ஆட்டுவிக்கிறது. ஒவ்வொரு நாளும் உலகின் எங்கோ ஒரு பகுதியில் வாழும் மக்கள் ஏதோ ஒரு வகையில் தீவிரவாத தாக்குதல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள், பெண்கள் கடத்தப்படுகிறார்கள், குழந்தைகள் இருக்கும் பள்ளிக்கூடங்களில் குண்டுகள் வெடிக்கின்றன,துப்பாக்கி சூடுகள் நடத்தப்படுகின்றன, குறைந்தபட்சம் ஒருவருடைய குரல்வளையேனும் கத்தியால் அறுக்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் புதுப்புது இயக்கங்கள் தோன்றுகின்றன, அதற்கு ஆட்சேர்க்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன. நம்மைவிட்டு பிரிந்து செல்ல காத்திருக்கும் இந்த 2015- ம் ஆண்டும் பல தீவிரவாத தாக்குதல்களை சந்தித்திருக்கிறது. இன்னொரு வகையில் பார்த்தால், இந்த வருடம் உலகப் பாதுகாப்பிற்கே சவால் விட்ட வருடம். சிற்றரசுகள் தொடங்கி பேரரசுகள் வரை எல்லோரும் பார்த்து நடுங்கும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம், தன் அசுரத்தனமான கால்களை ஒவ்வொரு நாட்டிலும் அழுத்தமாக பதித்தது இந்த வருடம்தான்.
குழந்தைகள்  என்று கூட பார்க்காமல் எல்லோர் மீதும் தாக்குதல் நடத்தும் இயக்கமான போகோ ஹராம் வளர்ந்து நின்றதும் இதே வருடம்தான். தீவிரவாதத்திற்கு எதிராக எழுதிய பேனாக்களின் முனைகள் உடைக்கப்பட்டதும் இதே வருடத்தில்தான்.
இதோ இந்த 2015-ம் ஆண்டு முடியப்போகிறது. இந்த நாளில் நம் உலகை உலுக்கிய டாப்-10 தீவிரவாத தாக்குதல்கள் குறித்து ஒரு பார்வை… 

1) நைஜீரியாவில் நடந்த தாக்குதல்
2015-ம் ஆண்டின் தொடக்கத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து முடிந்த இரண்டே நாட்களில் நடந்தேறியது அந்த தீவிரவாத தாக்குதல். ஜனவரி 3-ம் தேதி நைஜீரியாவின் பேகா என்னும் நகரத்தில் உள்ள நைஜீரிய ராணுவ நிலையத்திலும், நைஜீரியாவின் ஒருங்கிணைந்த  பன்னாட்டு ராணுவ தலைமையகத்திலும் போகோ ஹராம் தீவிரவாத இயக்கத்தால் நடத்தப்பட்டது அந்த தாக்குதல். நான்கு நாட்கள் அந்த நகரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போகோ ஹராம்,  கிட்டத்தட்ட 2000 உயிர்களை காவு வாங்கியது. அங்கே அமைக்கப்பட்டிருந்த அனைத்து ராணுவ தளவாடப் பொருட்களையும் கைப்பற்றியது.
நகரம் மொத்தத்தையும் சூறையாடியது. பேகாவில் நடந்த தாக்குதலால் அதனை சுற்றியுள்ள நகரங்களில் இருந்து ஏறக்குறைய 30000க்கும் அதிகமான மக்கள் அகதிகளாக வெளியேறியதாக அந்த நாட்டு அரசு தெரிவித்தது. பேகா படுகொலை என அழைக்கப்படும் இந்த நிகழ்வு,  இந்த வருடத்தில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய தாக்குதலாக பார்க்கப்படுகிறது.

2) எகிப்தில் நடந்த தாக்குதல் 

கடந்த அக்டோபர் 31,சனிக்கிழமை எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக் விமான நிலையத்தில் இருந்து ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நோக்கி சென்று கொண்டிருந்தது அந்த ரஷ்ய விமானம். கிளம்பிய சில மணி நேரத்திலேயே ரேடார் சிக்னலில் இருந்து காணாமல் போனது. 224 பேருடன் பயணித்த அந்த  விமானம் காணாமல் போன சில மணி நேரம் கழித்து,  ஷினாய் மலைப் பகுதியில் 31000 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த 224 பேரும் மரணிக்க,  129 பேரின் உடல்கள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டன. ஷினாய் பகுதியில் ஏற்கனவே ரஷ்யாவிற்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருந்தனர். பின்பு இந்த விபத்திற்கு நாங்கள்தான் காரணம் என ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டது. ஐஎஸ்ஐஎஸ் நடத்திய தாக்குதல்களில் மிகவும் மோசமான தாக்குதல் இது எனக் கூறப்படுகிறது.

3) சிரியாவில் நடந்த தாக்குதல் 
இந்த வருடம் ஐஎஸ்ஐஎஸ் நடத்திய தாக்குதலுக்கு அதிக முறை பலியாகிய நாடுதான் சிரியா. தீவிரவாத இயக்கங்களுக்கு நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையே வேறுபாடு தெரியாது. அப்படி ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் சிரியாவின் கிராமங்கள் மீதும் நகரங்கள் மீதும் கடந்த ஜூன் 25ல் நடத்திய தாக்குதல்தான் இந்த வருடம் அந்த நாடு எதிர்கொண்ட மிகப்பெரிய தாக்குதல். கோபன் என்ற நகரத்தையும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களையும் எதிர்பாராத நேரத்தில் வெவ்வேறு வகையில் தாக்கியது ஐஎஸ்ஐஎஸ்.
வெடிகுண்டுகள் நிரம்பிய கார்களை பொது இடங்களில் பார்க் செய்வது போன்ற முறைகளை பயன்படுத்தி ஒரே நாளில் வெவ்வேறு பகுதிகளில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 154க்கும் அதிமானோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பிறகே சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு  எதிராக குரல்கள் வலுவாக எழத்தொடங்கின. 

4) நைஐீரியாவில் நடந்த இரண்டாவது தாக்குதல் 
நைஜீரியாவில் ஏற்பட்ட தொடர் தீவிரவாத தாக்குதல்களால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு,  பிரதமர் குட்லக் ஜோனாதன் பதவியிழந்தார். அவரை தொடர்ந்து அதீத எதிர்பார்ப்புடன் பதவி ஏற்றார் முகமது புஹாரி. ஆனால் முகமது புஹாரி பதவி ஏற்ற பின்பு குறையும் என எதிர்பார்க்கப்பட்ட தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கின. அப்படி நடந்த முக்கியமான  பெரிய தாக்குதல்தான் இது. ஜூன் 30-ம் தேதி தொடங்கிய இந்த தாக்குதல், ஜூலை 1-ம் தேதி வரை தொடர்ந்தது. நைஜீரியாவின் வெவ்வேறு பகுதிகளில் தொடர்ந்து  இரண்டு நாட்கள் தாக்குதல்கள் நடத்தப் பட்டன.இந்த தொடர் தாக்குதலில் போகோ ஹராமின் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர் தாக்குதல்களால் ஏற்கனவே நிலைகுலைந்து போய் இருந்த நைஜீரியா,  இந்தத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் முடங்கியது. 145க்கும் அதிகமான பேரை காவு வாங்கிய இந்த தாக்குதல்,  முகமது புஹாரியின் ஆட்சியின் மீதிருந்த மக்களின் நம்பிக்கையை சுக்குநூறாக்கியது.

5) ஏமனில் நடந்த தாக்குதல்  
கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி ஏமனின் சனா என்ற நகரத்தில் அமைந்துள்ள அல்-பாதர் மற்றும் அல்-ஹசூஷ் என்னும் இரு ஷியா பிரிவை சேர்ந்த மசூதிகளிலும் மதியவேளை தொழுகை நடந்து கொண்டிருந்தது. தொழுகை முடியவிருந்த வேளையில் நடந்ததேறியது அந்த கண்மூடித்தனமான தாக்குதல். அங்கே தொழுது கொண்டிருந்த ஷியா பிரிவு மக்களை கொலை செய்யும் நோக்கத்துடன் ஐஎஸ்ஐஎல் (Islamic State of Iraq and the Levant-ISIL) மனித வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தியது. பிரார்த்தனைக்கு வந்த மக்கள் இதை கொஞ்சமும் எதிர்பார்க்காததால் என்ன செய்வதென்று தெரியாமல் வெவ்வேறு திசையில் ஓடினர். இரண்டு மசூதிகளிலும் அடுத்தடுத்து மனிதகுண்டுகள் வெடிக்க தொடங்கின. தொடர் தாக்குதல்களால் இரண்டு பகுதியும் நிலைகுலைந்தது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அமெரிக்கா,  தன் படைகளையும், மருத்துவ உதவிகளையும் அனுப்பியது. இந்த தாக்குதலால் 145 பேர் கொல்லப்பட்டதாக ஏமன் அரசு அறிக்கை வெளியிட்டது. 350க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

6) கென்யாவில் நடந்த தாக்குதல் 
கென்யாவில் அமைந்துள்ள காரிசா என்னும் நகரம், உலகிலேயே மனிதர்கள் வசிப்பதற்கு பாதுகாப்பான பகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நகரம்தான் கென்யாவின் ராணுவ தலைமையகத்தையும், காவல் தலைமையகத்தையும் ஒன்றாக இணைக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட “பாதுகாப்பான” நகரம்தான் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ஒரு சிறு தீவிரவாத அமைப்பால் தாக்கப்பட்டது. அல் காய்தாவிடம் பயிற்சி பெற்ற சோமாலியாவை சேர்ந்த சிறு இயக்கமான அல்-ஷபாப் என்னும் இயக்கம்தான்,  கென்யாவில் உள்ள காரிசா பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தியது. வெறும் நான்கு பேரைக் கொண்ட மூர்க்கத்தனமான குழு ஒன்று,  துப்பாக்கிகளுடன் கல்லூரிக்குள் சென்றது. 700க்கும் அதிகமான மாணவர்களை சிறைப்பிடித்து,  அதில் இருந்த இஸ்லாமிய மாணவர்களை மட்டும் முதலில் விடுவித்தது. மீதம் இருந்த மாணவர்களில்  147 பேர் கொல்லப்பட்டனர்; 79 பேர் காயமடைந்தனர். கொல்லப்பட்ட அனைவரும் கிறிஸ்துவ மாணவர்கள். அதே நாளில் அந்த தாக்குதல் நடத்தியவர்களை கொலை செய்தது அந்நாட்டு ராணுவம். பின்னர் மேலும் ஐந்து பேர் இதே தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.

7) ஈராக்கில் நடந்த தாக்குதல் 
எந்தவொரு தீவிரவாத இயக்கம் புதிதாக தோன்றினாலும் அவர்களின் முதல் குறி ஈராக்தான். உலகில் அதிகமுறை தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளான நாடுகளின் பட்டியலில் ஈராக்கும் முக்கிய இடத்தை வகிக்கிறது. கடந்த ஜூலை 17, வெள்ளிக்கிழமை ரமலான் மாத இறுதி என்பதால்,  ஈராக் நகரின் அனைத்து கடை வீதிகளும் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. அதில் முக்கியமான நகரமான ஷைட்,  மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அப்போது அங்கே நின்ற கார் ஒன்று யாரும் எதிர்பாராத வண்ணம் திடீர் என்று வெடித்தது. பெரும் கூட்டம் காணப்பட்டதால் பலி எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது. மூன்று நாட்கள் கழித்து 30 கிலோமீட்டர் தொலைவில்,  இதே போன்றதொரு கார் குண்டு வெடித்தது. பின்பு இந்த இரண்டு தாக்குதலுக்கும் ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த தாக்குதலில் 100 பேர் காயமடைந்தனர், 20 பேர் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.

8) கேமரூனில் நடந்த தாக்குதல் 
இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்தே கேமரூனில் பதட்டமான சூழ்நிலை நிலவி வந்தது. போகோ ஹராம் இயக்கம்,  கேமரூனில் உள்ள மக்களை கட்டாயப்படுத்தி தங்களது இயக்கத்தில் சேர்த்து,  அந்நாட்டு ராணுவத்திற்கு எதிராக சண்டையிட்டுக் கொண்டிருந்தது. அப்படி சேர மறுப்பவர்களை எந்த பதிலும் அளிக்கமால் உயிருடன் கொளுத்தியது. அதன்படி கடந்த பிப்ரவரி 4 மற்றும் 5 தேதிகளில் தனது தாக்குதலை நடத்தியது போகோ ஹராம். இதில் போகோ ஹராம் இயக்கத்தில் இணைய மறுத்த மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள அனைத்து கட்டடங்களையும் சாம்பலாக்கியது. மேலும் அந்த பகுதியில் வாழ்ந்த மக்களை உயிருடன் தீயிலிட்டு எரிப்பது, துப்பாக்கிச் சூடு நடத்துவது என மாறிமாறி தாக்குதல் நடத்தியது. இதன் மூலம் குறைந்தபட்சம் 91 பேராவது இறந்திருக்கலாம் என கேமரூன் அரசாங்கம் தெரிவித்தது. இதில் 500க்கும் அதிமானோர் காயமடைந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கேமரூன் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது இந்தத் தாக்குதல்.

9) நைஜீரியாவில் நடந்த மூன்றாவது தாக்குதல் 
நைஜீரியாவில், ஜனவரி மாதம் நடந்த முதல் தாக்குதலுக்கு பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து நடந்த  இரண்டாவது பெரிய தீவிரவாத தாக்குதல்தான் இது. நைஜீரியாவில் அமைந்துள்ள போகோ ஹராமின் தளவாடங்களை ராணுவம் தாக்கியதை தொடர்ந்து,  அதற்கு பழி வாங்கும் விதமாக போகோ ஹராம் இயக்கம் மோன்குனா, மைதுகிரி மற்றும் போர்னோ ஸ்டேட் போன்ற பகுதிகளில் தொடர்  தாக்குதல்களை நடத்தியது. வெவ்வேறு பகுதிகளில் பலர் காயமடைந்தனர், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை கணக்கில் வராமல் போனது. குறைந்தபடசம் 95 பேர் இறந்திருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் பிரதமர் முகமது புஹாரி மீது இருந்த வெறுப்பின் காரணமாக போகோ ஹராம் இந்த செயலை செய்திருக்கலாம் என கூறப்பட்டது. 

10) ஈராக்கில் நடந்த இரண்டாவது தாக்குதல் 
ஈராக்  தலைநகர் பாக்தாத்தில் உள்ள சடார் நகரத்தில் உள்ள  விவசாயிகள் சந்தையில் வந்து நின்றது அந்த லாரி. காய்கறிகளை குளிரூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் அந்த லாரியை,  தக்காளி விற்பதற்காக கொண்டு வந்திருப்பதாக தாக்குதல் நடத்திய தீவிரவாதி பொதுமக்களிடம் கூறியுள்ளான். பொதுமக்களின் கூட்டம் அதிகரித்தபின் அந்த லாரியில் இருந்த வெடிகுண்டை வெடிக்க வைத்துள்ளான். எதிர்பாராத இந்த சம்பவத்தால் 200க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்; 76 பேர்  இறந்ததாக கூறப்படுகிறது.  இதில் நெரிசலில் இறந்தவர்களே அதிகம். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டது.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆயுதம் மேல் நம்பிக்கையுள்ளோர் வாக்களிக்காதீர்கள்!

நான் உங்களுக்கு தரும் வாக்குறுதி ஆயுதம் இல்லாமல் வன்முறை இல்லாமல் அஹிம்சை மூலம் ராஜதந்திர நகர்வுகள் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com