சற்று முன்
Home / செய்திகள் / தமிழர் நலன் காக்க உருவாக்கப்பட்ட கூட்டமைப்பே தமிழ் மக்கள் பேரவை – ஏற்பாட்டாளர்கள் விளக்கம்

தமிழர் நலன் காக்க உருவாக்கப்பட்ட கூட்டமைப்பே தமிழ் மக்கள் பேரவை – ஏற்பாட்டாளர்கள் விளக்கம்

 புதிய அரசியல் யாப்பு ஒன்று உருவாக்குவதற்கான முனைப்புக்கள் முன்னெடுக்கப்படுவதாக அரசு கூறிவரும் நிலையில் புதியஅரசியல் யாப்பினை உருவாக்கும் வேலைத்திட்டம் முடிவு நிலையை எட்டியிருப்பதாகவும் ஆனால் அதில் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் புபூர்த்தி செய்யக்கூடிய தமிழ்மக்களிற்கான நிரந்தரத் தீர்வினை எட்டக்கூடிய சாதகமாக முடிவுகள் எதும் இல்லை என தமிழ் நலன்பற்றிச் சிந்திக்கும் தென்னிலங்கை பெரும்பான்மை இன அரசியல்வாகதிகள் சிலர் மூலம் அறிந்தோம். புதிய அரசியல் யாப்பில் ஒற்றையாட்சி என்ற பதம் மட்டுமே மாற்றப்பட்டிருக்கும் ஆனால் புதிய வரைபில் பெரிதாக எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. எங்கள் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் கூட்டமைப்பு அரசுடன் நல்லுறவைப் பேணிவரும் நிலையிலும் அரசியற் தீர்வுத்திட்டம் தொடர்பில் அரசிற்கு அழுத்தம் கொடுக்கவில்லை எனவேதான அனைத்து அரசியற் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மதத் தலைவர்களை உள்ளடக்கியதாக தமிழ் மக்கள் பேரவை என்ற புதியதொரு அமைப்பினை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டதாக தமிழ் மக்கள் பேரவையில் அங்கம்வகிக்கும் அரசியற் கட்சிஒன்றின் முக்கியஸ்தர் ஒருவர் வாகீசத்திற்குத் தெரிவித்துள்ளார்.

அரசியல் என்ற எல்லை கடந்து தமிழ்மக்களின் நலன்பற்றிச் சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் அனைவரும் இருக்கின்றோம் என்ற பேருண்மை இவ்விடத்தில் உணரப்படவேண்டியது அவசியம் எனக்குறிப்பிட்ட அவர் அப்பேரவையானது உபகுழுக்களாக விரிபு படுத்தப்படும் எனவும். எமக்கான தீர்வுத்திட்டம் தொடர்பான வரைபினை உருவாக்கும் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில்  தமிழ் மக்கள் பேரவை உத்தியோகபுர்வமாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அறிக்கையின் முழு விபரம் வருமாறு
தமிழ் மக்கள் பேரவை
ஊடக அறிக்கை – 19.12.2015
அறிமுகம்
மதத் தலைவர்கள், வடக்கு மாகாண சபையின் மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் இணைந்து தமிழ்மக்களின் நலன்களைப் பாதுகாப்பதையும் வலியுறுத்துவதையும் நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பே தமிழ்மக்கள் பேரவையாகும்.
வடக்கு மாகாண சபை முதலமைச்சர் மாண்புமிகு சி.வி.விக்னேஸ்வரன் அவர்களைத் தலைவராகவும் வைத்திய நிபுணர் பு.லக்ஷ்மன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தின் செயலாளர் திரு.ரி. வசந்தராஜா ஆகியோரை இணைத் தலைமையாகவும் கொண்ட பேரவையானது மதத் தலைவர்களையும் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களையும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் உறுப்பினர்களாகக் கொண்டமைந்த அமைப்பாகும்.
தமிழ்மக்களின் நலன்கள், உரிமைகள், அபிலாசைகள் என்பவற்றை அடையும் பொருட்டும் அவற்றை அடையாளப்படுத்தும் பொருட்டும் அமைக்கப்பட்ட தமிழ்மக்கள் பேரவையானது தேவையான கட்டமைப்புக்களுக்கும் துறைகளுக்கும் பொருத்தமான நிபுணர்களை இனங்கண்டு அவர்களை உள்ளடக்கியதான உபகுழுக்களை அமைத்துக்கொள்ளும்.
இந்த உப குழுக்கள் தமக்குக் குறித்தொதுக்கப்பட்ட இலக்குகளை குறிப்பிட்ட கால எல்லைக்குள் செய்து முடிக்கும் என்பதுடன் தேவையான சந்தர்ப்பங்களில் உப குழுக்களின் பணிகள் நீண்டு செல்லும் பொருட்டு நிலைத்தனவையாகவும் அமையும். தமிழ்மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக் குழுவானது தேவைகளுக்கமைவாக பேரவையைக் கூட்டி தீர்மானங்கள் எடுக்கின்ற ஏற்பாடுகளைச் செய்து கொள்ளும்.
தமிழ்மக்களின் நலன்கள் தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்மக்கள் பேரவையில் தற்போது இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை என்பது முற்றுப்பெற்றதன்று. இன்னமும் சில அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள், பெண்கள் பிரதிநிதித்துவம் என்பன உள்வாங்கப்படவேண்டிய தேவையுள்ளது. இத் தேவையை நிறைவு செய்யும் பணியில் ஏற்பாட்டுக் குழு சம்பந்தப்பட்டவர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்றையதினம் (19.12.2015) அமைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையானது நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படும் போது அதனால் தமிழ்மக்கள் காத்திரமான பெறுவனவுகளை அனுபவிப்பர் என்பது உண்மை.

அமைப்பின் தேவைப்பாடு
தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு தமிழ்மக்களின் உரிமைகள் , நலன்கள், அபிலாசைகள் என்பவற்றை வலியுறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டதாகும்.
தமிழ் மக்கள் பேரவை

அரசியல் என்ற எல்லை கடந்து தமிழ்மக்களின் நலன்பற்றிச் சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் அனைவரும் இருக்கின்றோம் என்ற பேருண்மை இவ்விடத்தில் உணரப்படவேண்டியதாகும்.

இலங்கை மண்ணில் தமிழ்மக்கள் சுதந்திரத்துடனும் உரிமையுடனும் வாழ்வதற்கான ஒரு நிரந்தரமான சூழமைவு ஏற்படுத்தப்படவேண்டும் என்பதை சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்வர் என்று நாம் நம்புகின்றோம். அதேவேளை தமிழ்மக்களுக்கான உரிமையை வழங்குவதென்பது இந்த நாட்டில் வாழும் எந்த இனத்திற்கும் பாதகமானது அல்ல என்ற நிதர்சனத்தையும் இதனோடு சம்பந்தப்பட்ட அனைவரும் முதலில் புரிந்து கொண்டாக வேண்டும்.
கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழினம் படுகின்ற துன்பங்கள், துயரங்கள் என்பன சிறுபான்மையின மக்கள் என்ற ஒரே காரணத்திற்கான அனுபவிப்பாக மட்டும் இருந்து விடவில்லை. மாறாக பல்லின மக்களின் இருப்பை- ஒன்றுக்கு மேற்பட்ட சமயங்களின் அனுஷ்டிப்பை- தமது மொழி தவிர்ந்த ஏனைய மொழிகளை அங்கீகரிக்க முடியாத வக்கிரங்களின் வெளிப்பாடாகவும் இருப்பதை நாம் கண்டு கொள்ள முடியும்.எனவேதான் தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வுகான முடியாத துர்ப்பாக்கியநிலை காணப்படுகிறது.
இத்தகைய தோல்விகளின் எதிர் விளைவுகள் காலத்திற்குக் காலம் தமிழின சங்காரவேள்வியாக அரங்கேறி வருகிறது. பேரினவாத உசுப்பேற்றல்கள் அதற்கான முரசுகளின் முழக்கங்களை மீண்டும் பேரினவாத சக்திகள் முழங்க, உருவேற்றம் உச்சமாகி அதன் உச்சமே 2009 இல் வன்னிப்பெரு நிலப்பரப்பில் நடந்த தமிழ் இனத்தின் சங்காரமாகும்.
இந்நிலையில் தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது சர்வதேச சமூகத்தின் காத்திரமான வகிபங்குடன் மட்டுமே சாத்தியமாகும் என்ற நிஜம் வெளிப்படுகிறது.
எனினும் அந்தத் தீர்வு என்பது நடந்து முடிந்த யுத்தத்தின் இழப்புகளுக்கான சமாளிப்புக்களாகவோ அல்லது இனப் பிரச்சினைக்கான தீர்வு தேவை என்று வலியுறுத்துகின்ற அரசியல் தரப்புகளை சாந்தப்படுத்துகின்ற சம்பிரதாயங்களாகவோ இருந்து விடக்கூடாது.
அத்தகையதொரு தற்காலிக ஏற்பாடுகள் தமிழ்மக்களின் எதிர்கால நிலைமைகளை மிகவும் மோசமானதாகவே ஆக்கிக்கொள்ளும். ஆகையால் தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்பது தமிழ்மக்களின் அபிலாசைகளை, அவர்களின் வாழ்வியலுக்கான உரிமைகளை, சுயநிர்ணயத்தின் பண்புகளை தாராளமாகக் கொடுப்பதாக இருத்தல் வேண்டும். இத்தகையதொரு நிலைமையில் தனிமனிதர்களின் தீர்மானங்களை, ஒரு சில அரசியல்வாதிகளின் ஒத்தோடலை நிரந்தர தீர்வாக்கிக் கொள்வது அர்த்தமற்றது.
ஆக, இழப்புக்களைச் சந்தித்தவர்கள் துன்பங்களைச் சுமந்து அதன் அனுபவிப்புக்களால் உருக்குலைந்து போயுள்ள போதிலும் ஒரு காத்திரமான தீ;ர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழுகின்ற தமிழ்மக்களின் அங்கீகாரம் பெற்ற தீர்வுகளே தேவையானவையாகும்.
தமிழ் மக்கள் பேரவை

எனினும் இத்தகைய தீர்வை வழங்குவதில் இதுவரை காலமும் ஆட்சிக்கு வந்த எந்த அரசுகளோ, பெரும்பான்மை இனம் சார்ந்த கட்சிகளோ முன்வரவில்லை. இத்தகையதொரு நிலைமையில் பொதுமுடிவை எடுப்பதில் அரசியல் என்ற எல்லை கடந்து ஒட்டுமொத்தத் தமிழினத்தின் பிரதிபலிப்பை நிர்ணயம் செய்யக்கூடியதான அமைப்பு தேவைப்படுகிறது. அந்த இலக்கை ஈடு செய்யக்கூடியது என்ற நம்பிக்கையோடு மதபீடங்கள், அரசியல் தலைமைகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்த ஓர் அமைப்பாக தமிழ்மக்கள் பேரவை உருவாகியுள்ளது.

இலங்கையில் நிரந்தரமான அமைதியும் சமாதானமும் சாந்தியும் நிலைக்க வேண்டுமாயின் அது தமிழ்மக்களின் அபிலாசைகளை, உரிமைகளை வெறுப்பின்றி வழங்குவதன் மூலமே சாத்தியமாகும் என்ற மெய்மையில் தமிழ்மக்கள் பேரவை இந்த நாட்டிற்கும் அனைத்து இனத்திற்கும் உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.
இங்கு அரசியல் நோக்கங்களோ இனத்துவ வக்கிரங்களோ பழி தீர்க்கும் எண்ணங்களோ அறவேயில்லை என்பது சத்தியமானது.
தமிழ்மக்கள் பேரவை தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற எல்லைகளுடன் மட்டும் தனது பணியை மட்டுப்படுத்தாமல் தமிழ்மக்களின் கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாத்தல், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமூக மேம்பாட்டில் கரிசனை கொள்ளுதல், எங்கள் பொருளாதாரத்தை- வளப்பயன்;பாடுகளை உச்சமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் என்ற உத்தரவாதமும் இங்கு தரப்படுகிறது.
நன்றி.

தமிழ் மக்கள் பேரவைAbout Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com