சற்று முன்
Home / செய்திகள் / தகவல் அறியும் உரிமை சட்டம் கடந்து வந்த பாதை

தகவல் அறியும் உரிமை சட்டம் கடந்து வந்த பாதை

  • மயூரப்பிரியன் –
    இலங்கையில் 2016ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமை சட்டமானது உலகளவில் மூன்றாவது இடத்திலும் தெற்காசியாவில் மிக சிறந்தது எனவும் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. மெக்சிக்கோ மற்றும் செர்பியா ஆகிய நாடுகள் முறையே முதலாம் இரண்டாம் இடத்தில் உள்ளன.

தகவலுக்கான உரிமை பற்றி அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடுகள் 1996ஆம் ஆண்டு வெகுஜன ஊடக அமைச்சு ஆர்.கே. குணசேகர தலைமையில் ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவற்றை பாதிக்கும் சட்டங்களை சீர்செய்வதற்கு ஆலோசனை குழு நியமிக்கப்பட்டது. அக்குழு கருத்து சுதந்திரத்தின் ஒரு பகுதியாக தகவல் அறியும் உரிமை சட்டத்தை உள்ளடக்க பரிந்துரை செய்தது.

அதனை அடுத்து அந்த ஆண்டே இலங்கை சட்ட ஆணைக்குழு தகவல் அணுகுவதற்கான சட்ட முன் வரைவினை சமர்ப்பித்தது. உச்ச நீதிமன்றம் கருத்து சுதந்திரத்துடன் தகவல் அறியும் உரிமையும் உள்ளடங்கப்பட்டு உள்ளதாக அறிவித்தது.

பின்னர் 2000 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைக்கான ஒரு பிரிவினை உள்ளடக்கி அரசியலமைப்பின் சட்ட வரைவு கொண்டு வரப்பட இருந்த வேளை பாராளுமன்றம் கலைக்கப்பட்டமையால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

அதன் பின்னர் 2004ஆம் ஆண்டு பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவால் நியமிக்கப்பட்ட குழு சட்டவரைவை உருவாக்கியது. அது அமைச்சரவை அங்கீகாரம் பெற்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அப்போதும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமையால் அதன் மீதான விவாதம் நடைபெறவில்லை.

இலங்கை சட்ட ஆணைக்குழு தகவல் உரிமை சட்டத்திற்கு பரிந்துரைக்கும் சட்ட வரைவு ஒன்றினை 2006ஆம் ஆண்டு உருவாக்கியது. அதனை சட்ட பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என சட்ட ஆணையம் பரிந்துரைத்தது.

அதன் பின்னர் 2009ஆம் ஆண்டு அப்போதைய நீதித்துறை அமைச்சர் மிலிந்த மொரகொடவினால் நியமிக்கப்பட்ட குழுவினால் சட்ட வரைவினை 2010ஆம் ஆண்டு பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையும் விவாதிக்கவில்லை.

பின்னர் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக 2011 ஆம் ஆண்டு இருந்த கரு ஜெயசூரிய சட்டவரைவை கொண்டு வந்தார். அதன் போது தனி நபர் பிரேரனையையாக சமர்பிப்பதனை விவாதிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (LLRC) இலங்கை அரசாங்கமானது தகவல் அறியும் உரிமை சட்டத்தை இயற்ற வேண்டும் என 2011 ஆம் ஆண்டு பரிந்துரைத்தது.

ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வாக்குறுதிகளில் தகவல் அறியும் உரிமை சட்டமும் இருந்தது.

அதன் பிரகாரம் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் திகதி அப்போதைய ஊடக மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் பாராளுமன்றில் தகவல் அறியும் உரிமை சட்ட வரைவு சமர்பிக்கப்பட்டது. அதன் போது பாராளுமன்றில் வாக்கெடுப்பு இன்றி திருத்தங்கள் செய்யப்பட்டு ஜூன் மாதம் 24ஆம் திகதி சட்டம் கொண்டுவரப்பட்டது. அதேவேளை 19ஆவது திருத்த சட்டத்தில் தகவல் அறியும் உரிமையினை அடிப்படை உரிமையாக அங்கீகரித்தது.

அதனை தொடர்ந்து சபாநாயகர் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி சட்டத்தினை உத்தியோக பூர்வமாக அங்கீகரித்தார். அது 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி தகவல் அறியும் உரிமை சட்டம் இலங்கையில் அமுலுக்கு வந்தது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் முக்கிய நோக்கமானது, பகிரங்க அதிகாரிகளின் வெளிப்படை த்தன்மை , பொறுப்புணர்வு ஆகியவற்றுடன் நாட்டில் ஊழல் மோசடிகள் அற்ற நல்ல ஆட்சி நடைபெறவேண்டும் என்பதாகும்.

அதனாலையே 2018ஆம் ஆண்டின் தேசிய வரவு செலவு திட்டத்தின் கீழ் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பில் அரச அதிகாரிகளுக்கான பயிற்சிகள் , பொதுமக்களுக்கான விழிப்புணர்வுகள் என்பவற்றுக்காக நிதி ஒதுக்கப்பட்டது. அத்துடன் அரச சார்பற்ற நிறுவனங்கள் , உலக வங்கி உள்ளிட்டவை விழிப்புணர்வு நடவடிக்கைகள் , பயிற்சிகள் என்பவற்றுக்காக உதவுகின்றன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com