சற்று முன்
Home / செய்திகள் / தகவல் அறியும் உரிமை -குறைபாடுகளைக் நிவர்த்தி செய்யுமா ஆணைக்குழு ?

தகவல் அறியும் உரிமை -குறைபாடுகளைக் நிவர்த்தி செய்யுமா ஆணைக்குழு ?

mde

ரி.விரூஷன்
இலங்கையில் மீண்டும் ஜனநாயகம் திரும்பிவிட்டது என்ற ஓர் தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் கடந்த 2016ஆம் ஆண்டு ஜீன் 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தகவலறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்திக்கொண்டது.
இச் சட்ட வரைபானது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமையை கொண்டு, இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் மக்களிற்கான ஜனநாயகத்தின் பண்புகளை மேலும் உறுதிப்படுத்தியிருந்தது என சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் தெரிவித்திருந்தது.

குறிப்பாக இத் தகவலறியும் உரிமை சட்டமானது ‘மக்களின் இறமை அதிகாரங்களை பேணிச் செயற்படுத்துகின்ற அரசினதும் மற்றும் பொது வாழ்வில் தாக்கம் செலுத்தும் தனியார் நிறுவனங்கள் உள்ளடங்கலான பொது அதிகார சபைகளினதும் வெளிப்படை தன்மையினையும், பொறுப்புக்கூறும் தன்மையினையும் கோருவதற்கான வலுவை பிரசைகளுக்கு வழங்குகின்றது’.
இத்தகைய இத் தகவலறியும் சட்டம் தொடர்பான விழிப்புனர்வுகள் நாடு தழுவிய ரீதியில் வேகமாகவும் முன்னெடுக்கப்பட்டன.

இச் செயற்பாட்டை அரசாங்கம் மாத்திரமன்றி தனியார் அமைப்புக்களும், சர்வதேச நிதியில் செயற்படுகின்ற தன்னார்வ நிறுவனங்களும் தகவலறியும் உரிமை சட்டம் தொடர்பான தெளிவுபடுத்தல்களை மக்களிடத்தில் கொண்டு சென்றது.
அதேநேரம் இலங்கை அச்சு ஊடக மற்றும் இலத்திரணியல் ஊடகங்களும் இப் பணியில் இணைந்துகொண்டன. இதன் மூலம் நாட்டில் பல்வேறு ஊழல் மற்றும் பல்வேறு அரச அலுவலகங்களில் காணப்பட்ட முறைகேடுகள், அதிகார துஸ்பிரயோகங்கள் மற்றும் மறைக்கப்பட்ட பல விடயங்களின் உண்மைத் தன்மைகள் வெளிக்கொண்டுவரப்பட்டன.

பல அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களது பல்வேறு முறைகேடுகள் கூட வெளியில் கொண்டுவரப்பட்டது. இது மக்களின் தகவலறியும் உரிமைக்கும், ஜனநாயகத்திற்கும் ஒர் முன்மாதிரியான சட்டமாகவே காணப்பட்டது.
அந்தவகையில் இத் தகவலறியும் உரிமை சட்டம் தொடர்பாக தகவலறியும் உரிமை ஆணைக்குழு ஒன்றும் நிறுவப்பட்டது. ஆனால் இவ் ஆணைக்குழு தொடர்பில் அதில் காணப்பட்ட சில குறைபாடுகளும் பரவலாக சுட்டிக்காட்டப்பட்டன. குறிப்பாக அவ்வாறு கூறப்பட்ட குறைபாடுகளுக்கு சார்பாக சில சம்பவங்கள் இடம்பெற்றும் உள்ளன. அப்படியான ஒரு சம்பவம் பற்றியே இங்கு பார்க்கவுள்ளோம்.

நாம் முன்னர் குறிப்பிட்டது போல இத் தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட ஆணைக்குழுவே இச் சட்டம் தொடர்பாக கண்காணிக்கின்ற செயற்பாட்டையும், இச் சட்டத்தின் மூலம் தகவல்கள் வழங்கப்படாத நிலையில் அதற்கான மேன்முறையீடுகளை பெற்று அது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு தீர்வினை வழங்குவதாக செயற்பட்ட வருகின்றது.
இந்நிலையில் இலங்கை பிரஜையொருவர் கடந்த ஆண்டு செப்ரம்பர் மாதத்தில் இலங்கை தகவலறியும் ஆணைக்குழுவிடமே தகவல்கள் சிலவற்றை கோரி கடிதம் மூலம் பதிவு தபாலில் அனுப்பியிருந்தார்.

அப் பதிவு தபால் அனுப்பப்பட்டு சுமார் நான்கு வாரங்கள் கடந்த பிற்பாடும் அதற்கான பதில்கள் ஏதும் கிடைக்காத நிலையில் மீளவும் அதே தகவல்களை வழங்க கோரி தகவலறியும் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ மின்னஞ்சலுக்கு அதே விண்ணப்பம் மீள அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் இவை எவற்றிற்கும் இது வரையில் குறித்த தகவலறியும் ஆணைக்குழுவினால் பதிலழக்கப்படவில்லை என்பதே மிக முக்கியமான விடயமாகும். அதாவது ஒரு பகிரங்க சேவை ஆணைக்குழுவிடமோ, அல்லது திணைக்களத்திடமோ தகவலொன்றை கோரி விண்ணப்பம் செயப்பட்டால் அவ் விண்ணப்பம் கிடைக்கப்பெற்று 14 வேலை நாட்களில் அவ் விண்ணப்பம் கிடைக்ப்பட்டதான தகவலை வழங்க வேண்டும் என சட்டம் கூறுகின்றது.
அதேநேரம் அவ்வாறு பதில் அனுப்பட்ட விண்ணபத்திற்கு, தகவலை வழங்க முடியுமாக இருந்தால் தகவலையும் அல்லது, வழங்க முடியாது எனின் அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு அடுத்த 14 நாட்களுக்குள் அதனை விண்ணபதாரிக்கு அனுப்ப வேண்டும் என இத் தகவலறியும் உரிமை சட்டம் கூறுகின்றது.

இந்நிலையில், தகவலறியும் ஆணைக்குழுவிற்கு மேற்கூறிய விண்ணபதாரியால் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பம் தொடர்பாக இது எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டதக்கது. அத்துடன் கோரப்பட்ட தகவலுக்கான பதில்கள் எவையும் இதுவரையில் அவ் விண்ணபதாரிக்கு வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
நாம் முன்னரே கூறியது போன்று இவ் தகவலறியும் உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டு அதற்கு என தனியானதொரு ஆணைக்குழு அமைக்கப்பட்டிருந்தாலும் அது தொடர்பில் சில குறைபாடுகள் சுட்டிக்காட்டப்படுகின்றது.

அதாவது குறித்த தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான ஆணைக்குழுவில் பெரும்பான்மையாக சிங்கள மொழி பேசும் அதிகாரிகளே உள்ளார்கள். இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மொழியினை பேசும் மக்களே அதிகமாக வாழ்கின்றார்கள். ஆங்கில மொழி பேசுபவர்கள் ஒப்பிட்டளவில் மிக்க் குறைவாகவே உள்ளனர். இந்நிலையில் நாட்டின் முக்கியமான ஆணைக்குழுவாக உள்ள இத் தகவலறியும் ஆணைக்குழுவில் தமிழ் மொழியில் உரையாடக்கூடியவர்களும் சம அளவில் உள்ளீர்க்கப்பட வேண்டும். ஆனால் அந் நிலமை காணப்படவில்லை.

அதேநேரம் தகவலொன்று கோரப்பட்டு, அது கிடைக்கப்படாதவிடத்து அதற்கான மேன்முறையீடுகளை மேற்கொள்வதாயினும், அதன் பின்னர் அதற்கான விசாரணைகளின் போதும் கொழும்பிற்கே செல்ல வேண்டியுள்ளது. இது சாதாரணமான மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த கூடியதொன்றாகும். எனவே இவ் ஆணைக்குழுக்களின் அமர்வுகளை ஒரு குறிப்பிட்ட கால ஒழுங்கில் மாகாண ரீதியிலோ அல்லது மாவட்ட ரீதியிலோ மேற்கொள்ளப்பட வேண்டும்.

இது போன்ற குறைபாடுகள் இவ் ஆணைக்குழு தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக இங்கு குறிப்பிட்ட விண்ணப்பதாரிகூட மேற்படி இரண்டு காரணங்களினாலுமே மேன்முறையீடு செய்ய முயலவில்லை. ஏனெனில் ஆணைக்குழு அதிகாரிகளை தொடர்பு கொண்டால் என்ன மொழியில் பேசுவது என்பது குறித்த விண்ணப்பதாரிக்கு பாரிய பிரச்சனையாக காணப்பட்டிருந்த்து. அல்லது நேரில் சென்றாலும் இதற்காக எத்தனை தடவைகள் அங்கு செல்ல வேண்டும் என்பதுவும் அவரிடம் காணப்பட்ட நியாயமான சந்தேகமாக காணப்பட்டது.
அத்துடன் தகவல் அறியும் உரிமை சட்டத்தை நிர்வகிக்கும் ஆணைக்குழுவே அச் சட்டத்தை அமுல்ப்படுத்தாத நிலையில் மேன்முறையீட்டின் போது மாத்திரம் அவ் ஆணைக்குழு நீதியாக செயற்படும் என எவ்வாறு நம்புவது என்ற சந்தேகமும் காணப்படுகின்றது.

இந்நிலையில் தகவலறியும் உரிமை சட்டத்தை நிறைவேற்றியதன மூலம் ‘இலங்கைக்கு ஜனநாயகத்தை மீளவும் உறுதிப்படுத்தி விட்டோம்’ என பிரச்சாரம் செய்யும் அரசு, தகவலறியும் உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பிலும் கரிசனை காட்ட வேண்டியது அவசியமாகும்.
பலமொழிகளை பேசுகின்ற நாட்டில் ஓர் மொழியினை மாத்திரம் பிரதானப்படுத்தி அவர்களுக்கு மாத்திரம் சாதகமான செயற்பாடுகளை முன்னெடுப்பதனூடாக ஜனநாயகத்தை மீள உருவாக்கிவிட்டோம் என கூறுவது பயனற்றதாகும்.

மேலும் எச் சட்டத்தை அமுல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஆணைக்குழுவே அச் சட்டத்தை மதிக்காத நிலமை குறித்தும் கவனமெடுப்பது அவசியமானதும், அதற்கான காரணத்தை கண்டறிந்து நிவர்த்தி செய்வதுமே முக்கியத்துவமானதாகும். ஏனெனில் குறித்த விண்ணப்பதாரியின் விண்ணப்பம் தொடர்பாக பதில் வழங்குவதற்கு அவ் ஆணைக்குழுவில் தமிழ் மொழி தெரிந்த உத்தியோகத்தர்கள் போதியளவு இல்லை என்பதை அறிய முடிந்தது. எனவே நாட்டில் ஜனநாயகத்தை மேலும் உறுதிப்படுத்த கொண்டுவரப்பட்ட இச் சட்டத்தை சரியான முறையில் அமுல்படுத்துவதற்கான ஏனைய வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியதும் அரசின் கடமையேயாகும்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com