சற்று முன்
Home / செய்திகள் / “சேடமிழுக்கும் யாழ் மாநகர தீயணைப்புப் பிரிவு” – உயிர் போனபின் ஒப்பாரி வைக்க வரவேண்டாம்

“சேடமிழுக்கும் யாழ் மாநகர தீயணைப்புப் பிரிவு” – உயிர் போனபின் ஒப்பாரி வைக்க வரவேண்டாம்

ஒவ்வொரு பிரதேச சபைக்கும் என தனித்தனியாக தீயணைப்புப் பிரிவினை ஏற்படுத்துவதற்கா திட்டம் இலங்கை அரசாங்கத்திடம் இல்லாத சூழ்நிலையில் மாவட்டத்திலுள்ள மாநகரசபைகளின் தீயணைப்புப் பிரிவையே ஒட்டுமொத்த மாவட்டமும் நம்பியிருக்கவேண்டியிருக்கிறது.

அவ்வகையில் யாழ் மாவட்ட மக்கள் யாழ்ப்பாண மாநகரசபையின் தீயணைப்பு சேவையினை மட்டுமே நம்பியிருக்கின்ற சூழலில் யாழ் மாநகரசபையில் தீயணைப்பு சேவைப் பிரிவு மிக மோசமான நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவை குறித்து அதிகாரிகளோ அரசியல்தரப்பினரோ அதீத அக்கறை காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன் இவ்வாறான மிக மோசமான தீயணைப்பு சேவையைக் கொண்டிருந்த கிளிநொச்சி தீயணைப்புப் பிரிவினரால் கிளிநொச்சி வர்த்தக சந்தையில் ஏற்பட்ட பாரிய தீவிபத்தினை உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்திழப்புக்களை அந்த தீ விபத்து சந்தித்து. எனினும் அதன் பின்னராக கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் முயற்சியால் கிளிநொச்சி மாவட்டத்திற்கான தீயணைப்பு சேவை புத்துயிர் பெற்று தரமான தீயணைப்பு சேவைப் பிரிவாக வளர்ச்சியடைந்துள்ளது.

எனினும் யாழ்ப்பாண மாநகசரசபையின் தீயணைப்புப் பிரிவு ஆளணி இன்றியும் உபகரணங்கள் இன்றியும் மிக மோசமான நிலையில் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தீயணைப்பு சேவைப் பிரிவில் உயர்நிலை பொறுப்பதிகாரி, பிரதம தீயணைப்பு அதிகாரி மற்றும் பயிற்றிப்பட்ட மோட்டார் இயக்குநர்கள் உட்பட பதவிகளுக்கு அதிகாரிகள் இல்லாது யாழ் மாநகர தீயணைப்புப் பிரிவு திணறிவருவதான தகவல் அம்பலமாகியுள்ளது.

தகவல் அறியும் சட்டம் மூலம் குறித்த விபரங்கள் கோரப்பட்ட நிலையில் யாழ் மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவிற்கு மிக முக்கிய பதவி நிலைகளில் மட்டும் எட்டு ஆளணி வெற்றிடங்கள் காணப்படுகின்றமை தெரியவந்துள்ளது.

யாழ் மாநகரசபையின் தீயணைப்பு சேவைக்கு உயர்நிலை பொறுப்பதிகாரியாக ஒருவரும் பிரதம தீயணைப்பு அதிகாரிகளாக இருவரையும் மோட்டார் இயக்குநர்களாக நால்வரையும் தீயணைப்பு படை வீரர்களாக 18 பேரையும் ஆளணியாக நியமிக்க முடியும்.

எனினும் அதிகாரிகள் எவருமற்ற நிலையில் வாகன சாராதிகள் உள்ளிட்ட தீயணைப்புப் படை வீரர்கள் 17 பேரை மட்டும் கொண்டு யாழ் மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவு செயற்பட்டுவருகின்றமை தெரியவந்துள்ளது. யாழ் மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவிற்கு அதிகாரிகள் உட்பட 25 ஆளணியினரை நியமிப்பதற்கான ஆளணி அனுமதி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஏன் யாழ் மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவு இவ்வாறு மோசமான நிலைக்கு சென்றும் கவனிக்கப்படாது உள்ளது என யாழ் மாநகரசபை உறுப்பினரான வரதராஜன் பார்திபனை தொடர்புகொண்டு கேட்டபோது,

தாம் யாழ் மாநகரசபையின் தீயணைப்புச் சேவையின் மகத்துவம் அறிந்து அதனை செயற்றிறன் உள்ளதாக மாற்றுவதற்கு தொடர்ந்து குரல்கொடுத்துவருவதாகவும் எனினும் ஆளுந்தரப்பினர் அதனைக் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார். கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பொறுப்பெடுத்து கிளிநொச்சி தீயணைப்பு சேவையினை மேம்படுத்தியதுபோல இங்குள்ள நாடாளுமற்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட அவ்வாறு வினைத்திறன்மிக்க தீயணைப்பு சேவையினை உருவாக்க முன்வரவிலை என்றும் குறிப்பிட்டார்.

தற்போது உள்ள தீயணைப்பு வீரர்களில் கூட பலருக்கு முறையான பயிற்சிகள் இல்லை என்றும் ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை என்றும் நல்ல நிலையில் ஒரு வாகனமே உள்ளதாகவும் வீரர்களுக்கான பாதுகாப்பு அங்கிகள் கூட தரமானதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சியைப் போல பாரிய அனர்த்தம் ஒன்று நேர்ந்தபின்தான் யாழ் மாநகரசபையின் தீயணைப்பு சேவையையும் நவீனமயப்படுத்த அரசியல் தரப்பினர் சிந்திப்பார்களோ தெரியவில்லை.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com