சற்று முன்
Home / செய்திகள் / சம்பளம் முதல் சாப்பாடு வரை – வடக்கு மாகாணசபையில் தேறியதும் சுவறியதும்

சம்பளம் முதல் சாப்பாடு வரை – வடக்கு மாகாணசபையில் தேறியதும் சுவறியதும்

“நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”

கடுவெளிச் சித்தர் பாடியிருந்த இந்தப் பாடலை வடக்கு மாகாணசபை அமர்வொன்றின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினரான பசுபதிப்பிள்ளை பாடியபோது ஊடகங்களில் அது மிகப் பிரபலமாக பேசப்பட்டது

வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெற்று வடக்கு மாகாணசபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியபோது அதனை “மலர்ந்தது தமிழர் அரசு” என செய்திப் பத்திரிகை ஒன்று புகழாரம் சூட்டியிருந்தது. ஆனால் வடக்கு மாகாணசபையில் பின்னாளால் நடந்தேறியவையோ உயரிய அந்தச் சபையை சந்திசிரிக்க வைத்தது.

ஐந்து வருட மாகாணசபை ஆட்சியில் 134 அமர்வுகளும் 07 விசேட அமர்வுகளும் நடைபெற்றிருந்தபோதும் அங்கு நிறைவேற்றிய தீர்மானங்களில் பல வெற்றுத் தீர்மானங்களாகவே கோவைகளுக்குள் அடங்கிப்போயின. ஐந்து வருடத்தில் வடக்கு மாகாணசபை என்ன செய்தது என்ற மக்களின் கேள்விகள் குறித்து ஆராயவே ஒரு விசேட அமர்வுவைத்தது மாகாணசபை.

நிர்வாகச் சீரகேடுகள், ஊழல்கள் எனக் கூறி அமைச்சர்களை நீக்கியதையும் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, நீதிமன்றில் வழக்கு என ஐந்து வருட ஆட்சியை அர்த்தமற்ற ஆட்சியாக நிகழ்த்தியிருந்தாலும் தங்கள் பொக்கற்றுக்கள் நிரப்பும் காரியங்களில் ஒவ்வொரு உறுப்பினரும் பின்னிற்கவில்லை.

வரியற்ற வாகனத் தீர்வை முதற்கொண்டு சலுகைகள் படிகள் என சுகபோக வாழ்வை அனுபவித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள் என்பதுதான் அப்பட்டமான உண்மை.

கல்வியங்காட்டிலுள்ள தனது வீட்டிலிருந்து கைதடியிலுள்ள தனது அலுவலகத்திற்குச் சென்று வர மாதாந்தம் ஆயிரம் லீற்றர் எரிபொருள் செலவாகுவதாக மாதாந்தம் சுமார் ஒரு இலட்சம் ரூபாவினை எரிபொருள் படியாக பெற்றிருக்கிறார் வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவாஞானம்.

வரியற்ற வாகன பொமிற் அதற்குப் பிறிதாக மாதம்தோறும் எரிபொருள் படி, வாடகைப் படி, தொலைபேசிப் படி, அலுவலக வாடகை, தமது பணியாளருக்கான கொடுப்பனவு அவைத்தலைவரோ அமைச்சர்களோ அல்லாத ஒரு உறுப்பினர் வடக்கு மாகாணசபையில் சுமார் ஒன்றரை இலட்சம் ரூபா சம்பாதித்திருக்கிறார் என்றால் நம்பவா போகிறீர்கள். நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்கிறன தகவல் அறியும் சட்டம் ஊடாக வடக்கு மாகாண சபையிலிருந்து பெறப்பட்ட புள்ளிவிபரங்கள்.

வடக்கு மாகாணசபையின் உயர் பதவி அவைத்தலைவருக்குரியது. ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் முடிந்து வடக்கு மாகாணசைபை கலைக்கப்பட்டுள்ளபோதும் அவைத்தலைவர் பதவி வரிதாகவில்லை. மாகாணசைபைக்கான தேர்தல் ஒன்று நடைபெற்று அதன் முதல் அமர்வு நடைபெறும் வரை முன்னைய அவைத்தலைவர் தொடர்ந்து தனது பதவியில் நீடிப்பார் என்கிறன இலங்கை மாகாணசபைகள் குறித்த சட்ட ஏற்பாடுகள்.

இந்நிலையில் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரான சி.வி.கே சிவஞானம் வடக்கு மாகாண சபை கலைந்து ஆறு மாதங்கள் ஆனபோதும் தனது பதவியில் நீடிக்கிறார். குறித்த பதவி மூலம் கிடைக்கும் வரப்பிரசாதங்களை இன்னமும் அவர் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்.
அவைத்தலைவர் சம்பளம் படிகள் உள்ளடங்கலாக மாதம் எவ்வளவு ரூபா பணத்தினை சம்பாதிக்கிறார் என்பதை பார்த்துவிட்டு வருவோம்.

அவைத்தலைவர் வருமானம்

மாத சம்பளம் – 63,500 ரூபா
உபசரணை – 2,000 ரூபா
எரிபொருள் படி – 1,000 லீற்றர் (100X1000 = 100,000)
வாடகைப் படி 25,000 ரூபா
காகிதாதிகள் படி 1,250 ரூபா
அமர்வு ஒன்றுக்கான படி 1,250 ரூபா
அமர்வு ஒன்றுக்கான பிரயாண படி 3,000 ரூபா
வாகனப்படி – (விபரம் தரப்படவில்லை)
தொலைபேசிப் படி – (விபரம் தரப்படவில்லை)

அவைத்தலைவர் மொத்த மாத வருவாய் – 196,000 ரூபா (வாகன, தொலைபேசி படிகள் நீங்கலாக)

மாதந்தம் உறுப்பினர்களுக்கு தொலைபேசிப் படி 25 ஆயிரம் ரூபா எனவும் எதிர்க்கட்சித்தலைவருக்கு வாகனப்படி 40 ஆயிரம் ரூபா எனக் குறிப்பிடப்பட்டுள்ளபோதும் அவைத்தலைவருக்கு குறித்த விபரங்களுக்கா படிகள் தொடர்பில் தகவல் வழங்காது மறைக்கப்பட்டள்ளது.

இவற்றினைவிட அவைத்தலைவரின் கடமைகளுக்கு என தான் விரும்பியவர்களை தனது சிபார்சின் மூலம் பணிக்கு அமர்த்த முடியும் அவ்வாறாக விநாயகர் வீதி நல்லூர் வடக்கினைச் சேர்ந்த தனது உறவினர்கள் நண்பர்கள் என 08 பேர் அவைத்தலைவரால் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.

பிரத்தியோகச் செயலாளர் 01 – கொடுப்பனவு – 23000 +6600
இணைப்புச் செயலாளர் 01 – கொடுப்பனவு – 22500 + 6600
தனிப்பட்ட உதவியாளர் 01- கொடுப்பனவு – 13990 + 6600
முகாமைத்துவ உதவியாளர் 02 – 13900 + 6600
அலுவலக பணியாளர் 02 – 11730 + 6600
சாரதி 01- 12470 + 6600

இதேபோல பிரதி அவைத்தலைவருக்கும் சில தரவுகள் மறைக்கப்பட்ட நிலையில் அவர் மாதாந்தம் சம்பளம் மற்றும் படிகள் உள்ளடங்கலாக சுமார் ஒரு இலட்சம் ரூபா வருவாயைப் பெற்றுக்கொள்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மறைக்கப்பட்ட விபரங்கள் கிடைக்கப்பட்டிருப்பின் அவைத்தலைவரினட வருமானம் மேலும் அதிகமாக காணப்பட்டிருக்கும்.

பிரதி அவைத்தலைவர் வருமானம்

மாத சம்பளம் – 31,750 ரூபா
உபசரணை – 1,000 ரூபா
எரிபொருள் படி – 400 லீற்றர் (100X400 = 40,000)
வாடகைப் படி – விபரம் தரப்படவில்லை
காகிதாதிகள் படி 1,250 ரூபா
அமர்வு ஒன்றுக்கான படி 1,250 ரூபா
அமர்வு ஒன்றுக்கான பிரயாண படி 3,000 ரூபா
வாகனப்படி – (விபரம் தரப்படவில்லை)
தொலைபேசிப்படி – 25,000 ரூபா

பிரதி அவைத்தலைவருக்கான மொத்த மாத வருவாய் – 103,250 (வாடகைப்படி, வாகனப்படி நீங்கலாக)

வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித்தலைவர் மாதாந்தம் சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதியினை வருவாயாகப் பெறுவதாக தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்ட புள்ளிவிபரங்கள் குறித்துநிற்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர்

மாத சம்பளம் – 31,750 ரூபா
உபசரணை – 1,000 ரூபா
எரிபொருள் படி – 300 லீற்றர் (100X300 = 30,000)
வாடகைப் படி – விபரம் தரப்படவில்லை
காகிதாதிகள் படி 1,250 ரூபா
அமர்வு ஒன்றுக்கான படி 1,250 ரூபா
அமர்வு ஒன்றுக்கான பிரயாண படி 3,000 ரூபா
வாகனப்படி – 40,000
தொலைபேசிப்படி – 25,000 ரூபா

எதிர்க்கட்சித் தலைவருக்கான மொத்த மாத வருவாய் – 133,000

இந்நிலையில் அமைச்சர்கள் உள்ளிட்டபதவிகளில் இல்லாத மாகாணசபை உறுப்பினர்கள் மாதாந்தம் 27 ஆயிரம் ரூபாவினை சம்பளமாகப் பெற்றுக்கொள்கின்றபோதிலும் படிகள் உள்ளடங்கலாக மாதம் ஒன்றிக்கு சுமார் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான வருவாயை மாகாண சபைப் பதவி மூலம் பெற்றுக்கொள்கின்றமை தெரியவந்துள்ளது.

உறுப்பினர் ஒருவருக்கு

மாத சம்பளம் – 27,145 ரூபா
உபசரணை – 500 ரூபா
எரிபொருள் படி – 10,000 ரூபா
வாகனப் படி – 18,000 ரூபா
தொலைபேசிப்படி – 25,000 ரூபா
அலுவலகப் படி – 50,000 ரூபா
சாரதிப் படி – 3,750 ரூபா
குழுக் கூட்டப் படி – 1,250 ரூபா
காகிதாதிகள் படி 1,250 ரூபா
அமர்வு ஒன்றுக்கான படி 1,250 ரூபா
அமர்வு ஒன்றுக்கான பிரயாண படி 3,000 ரூபா (வெளி மாவட்ட உறுப்பினர்களுக்கு 7,000 ரூபா)

உறுப்பினர் ஒருவரது மாத வருவாய் – 139,895

இதனைவிட உறுப்பினர் ஒருவர் தனது கடமைகளுக்கு என முகாமைத்துவ உதவியாளர்களாக இருவரையும் அலுவலக பணியாளராக ஒருவரையும் தான் விரும்பியவர்களை தனது சிபார்சின் மூலம் பணிக்கு அமர்த்த முடியும் அவ்வாறாக பெரும்பாலான உறுப்பினர்கள் தனது மாமன், மச்சான், மனைவி, மைத்துனி ஆகியோரை குறித்த பணிகளில் அமர்த்தியதாக விபரம் காட்டி அதன் மூலம் அவர்களது பணிக்கென மாதம் கிடைக்கும் சம்பளப் பணத்தினைச் சுருட்டிக்கொண்டிருந்தமை முன்னர் வாகீசம் வாயிலாக ஆதராங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டிருந்தது.

அவ்வகையில்

இரு முகாமைத்துவ உதவியாளர்களுக்கும் என 41,000 ரூபாவும் ஒரு அலுவலக பணியாளருக்கு என 18,330 ரூபாவும் உறுப்பினர்கள் தங்கள் உறவினர்களின் பெயர்களைச் சமர்ப்பித்து வருமானமாகப் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை வடக்கு மாகாணசபையில் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களது சம்பள விபரங்கள் மற்றும் படிகள் உள்ளிட்ட விபரங்களை வழங்க வடக்கு மாகாணசபையின் பேரவைச் செயலகம் மறுத்துவிட்டது. தகவல் அறியும் சட்டமானது குறித்த ஒரு செயலகத்தில், திணைக்களத்தில் அல்லது அமைச்சில் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தால் அத்தகவல் கோரிக்கையானது அக்குறித்த செயலகத்தோடு அல்லது அமைச்சோடு தொடர்புபட்ட திணைக்களத்தின் தகவலாயின் அவர்களே அத்தகவலைப் பெற்றுத்தரவேண்டும் என கூறுகிறது. எனினும் வடக்கு மாகாண பேரவைச் செயலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல் கோரிக்கை விண்ணபம் தொடர்பில் முதலமைச்சரின் அமைச்சினதோ அல்லது ஏனைய அமைச்சுகளது தகவல்களையோ பெற்றுத்தர முடியாது என மறுத்துவிட்மை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வடக்கு மாகாண சபையின் ஒவ்வொரு அமர்வுக்கும் உபசரணைச் செலவாக 72 ஆயிரத்து 504 ரூபா செலவிடப்படுகின்றமை தெரியவந்துள்ளது. அமர்வு ஒன்றிற்கு சிற்றுண்டிக்கென (கேக், றோல், பால் தேனீர், இலைக்கஞ்சி) 143 பேருக்கு என 10 ஆயிரத்து 725 ரூபாவும் மதிய உணவிற்கு என (கோழி – பொதி மற்றும் சுய பரிமாறல்) 130 பேருக்கு என 56 ஆயிரத்து 970 ரூபாவும் 216 பேருக்கான குடிநீருக்கு என (500 மில்) 3 ஆயிரத்து 909 ரூபாவும் மேலதிகமாக 18 லீற்றர் குடிநீருக்கு என 900 ரூபாவும் ஒவ்வொரு அமர்விற்கும் செலவிடப்படுகின்றது.

வடக்கு மாகாணசபையில் 5 வருட காலப்பகுதியில் விசேட அமர்வுகளும் சேர்த்து 141 அமர்வுகள் நடைபெற்றுள்ள நிலையில் முழு அமர்விற்குமாக உணவிற்கு மட்டும் ஒரு கோடியே இரண்டு இலட்சத்து 23 ஆயிரத்து 64 ரூபா செலவிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனைவிட வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயண விபரங்கள் அதற்கு செலவிடப்பட்ட நிதி விபரங்கள் குறித்த தகவல்கள் கோரப்பட்டபோதும் அவை தொடர்பில் பதில் தரப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் ஐந்து வருட மாகாணசபை ஆட்சியில் மக்களுக்கு என்ன செய்தோம் சபை ஊடாக என்ன சாதித்தோம் என்பதற்கு அப்பால் ஒவ்வொரு உறுப்பினரும் தனிப்பட்ட ரீதியில் சுகபோக வாழ்வு வாழ்ந்துள்ளனர் என்பதுதான் உண்மை.

மாகாணசபையின் பதவிக்காலம் முடிந்தபின் வடக்கு மாகாசபை கீதம் இயற்றிய கலைஞ்களை அழைத்து கடந்த மாதம் கௌரவித்திருந்தார்கள். குறித்த அந் நிகழ்வில் பங்கேற்றிருந்த மாகாண சபையின் உயர் அதிகாரி ஒருவர் உரையாற்றியபோது வடக்கு மாகாண சபை தனது ஐந்து வருட ஆட்சிக்காலத்தில் உருப்படியாக ஒன்றை உருவாக்கியது என்றால் மாகாண சபைக் கீதம் இயற்றிய ஒன்றை மட்டுமே குறிப்பிடலாம் என்றார்.

தமிழருக்கான மாகாண சபை பாட்டுப் பாடியும் கேலி கிண்டல் கதைகள் கதைத்தும் காலத்தைக் கழித்து பதவி வழி சுகபோக வாழ்வு வாழ்வதற்கான இடமல்ல. பல இலட்சம் மக்களின் உயிர்த்தியாகங்களின் பின்னால் கிடைக்கும் அற்ப சந்தர்ப்பங்களையும் சுகபோக அரசியலுக்காய் கைநழுவ விடுதல் முறையானதுமல்ல.

“நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு – அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு”

– கடுவெளிச் சித்தர்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com