சற்று முன்
Home / செய்திகள் / கைதான பல்கலை மாணவர்களை மறந்தாரா சுமந்திரன் ? – மணிவண்ணனை பதவி நீக்கக் கோரும் வழக்கு தொடர் விசாரணை

கைதான பல்கலை மாணவர்களை மறந்தாரா சுமந்திரன் ? – மணிவண்ணனை பதவி நீக்கக் கோரும் வழக்கு தொடர் விசாரணை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணனின் யாழ் மாநகரசபை உறுப்பினர் பதவியைப் பறிப்பதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து நான்கு நாட்களாக தொடர் விசாரணையாக நடைபெற்ற நிலையில் குறித்த வழக்கு விசாரணை நாளை வியாழக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மன்றில் கால அவகாசம் கோருதல், வழக்கு தவணைக்கு செல்லாமல் விடுதல் என பல மாதங்களாக தமிழரசு காலங்கடத்தி வந்துள்ளது. இந்நிலையில் குறித்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சுமார் ஒன்றரை மணிநேரத்திற்கு அதிகமாக எதிர்வாதம் புரிந்த சுமந்திரன் தனக்கு மீண்டும் கால அவகாசம் கோரி வழக்கினை பின் திகதியிட்டு ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

எனினும் சுமந்திரனது விண்ணப்பத்தை ஏற்கமறுத்த மன்று வழக்கினை தொடர் திகதியிட்டு விசாரித்துவருகின்றது. இதனையடுத்து தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி சுமந்திரன் தினமும் மன்றில் முன்னிலையாகி மணிவண்ணனின் யாழ் மாநகர உறுப்பினர் பதவியினை நீக்குமாறு கோரி வாதம் புரிந்துவருகின்றார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலைக்காக பல சட்டத்தரணிகள் சாத்தியமான வழிகளில் போராடிவருகையில் சட்டமா அதிபருடன் பேசி மாணவர்களை விடுவிப்பதாகக் கூறி கொழும்பு சென்ற சுமந்திரன் மாணவர் விடுதலையில் அக்கறை காட்டாது மணிவண்ணனை பதவிநீக்கக் கோரும் வழக்கில் முனைப்புக் காட்டிவருகின்றமை அவரது அரசியல் காழ்ப்புணர்வின் வெளிப்பாட்டையே காட்டுவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணனுக்கு ஆதரவாக சட்டத்தரணி யூட் டினேஸ், சட்டத்தரணி நடராஜா காண்டீபன் ஆகியோருடன் சட்டத்தரணி விஜித் சிங் முன்னிலையாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com