சற்று முன்
Home / செய்திகள் / கேள்வியும் பதிலும் – சர்வமும் நானே

கேள்வியும் பதிலும் – சர்வமும் நானே

கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றினை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ளார். அதில் உத்தேச அரசியல்யாப்பு வெளியிடப்படவுள்ள நிலையில் தமிழ் மக்களின் கவனங்களைத் திசைதிருப்பும் நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே வடக்கு மாகாணசபையியினையும் அதன் செயற்பாடுகளையும் திட்டமிட்டவகையில் குழப்புகின்றார்களோ என எண்ணத் தொன்றுகின்றது என பதிலளித்துள்ளார்.

அவரது கேள்வி பதில் அறிக்கை வருமாறு,

ஊடகவியலாளர் கேள்வி –  வடக்கு மாகாணசபையில் நடப்பவைகளுக்கும் தெற்கின் அரசியலுக்கும் ஏதும் சம்பந்தமுண்டா?

பதில் – வடக்கு மாகாணசபையினையும் அதன் செயற்பாடுகளையும் திட்டமிட்ட வகையில் குழப்புவதன் மூலம் தமிழ் மக்களின் கவனத்தினைத் திசை திருப்புவதற்கு அரசாங்கமும் அவர்களோடு சேர்ந்து இயங்குகின்ற தமிழ் அரசியல்வாதிகளும் முனைந்து வருகின்றார்களோ என்று எண்ண வேண்டியுள்ளது. அரசியலமைப்பு திருத்தத்தினூடாக தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வினைப் பெற்றுத் தர வேண்டிய அரசாங்கம் அதனைச் செய்து முடிக்காது காலத்தினை இழுத்தடித்து வருவதோடு உத்தேச அரசியல் அமைப்பில் தமிழர் தரப்புக்கு அதிகாரங்களை முழுமையாகப் பகிர்ந்தளிக்காத விதத்தில் மாற்றங்களை உள்ளடக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டு வருகின்றது. இதிலிருந்து தமிழர்களுடைய கவனத்தினைத் திசை திருப்புவதற்காகவே அவர்கள் வடமாகாண சபையினைக் குழப்ப முனைகின்றனரோ என்ற சந்தேகம் எம்முள் பலரிடம் எழும்புகின்றது.

சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி அதிகாரம், வடக்கு கிழக்கு இணைப்பு, நிதி உட்பட பல்வேறு ஆக்க பூர்வமான அதிகாரப் பகிர்வினை தமிழர் தரப்பு எதிர்பார்த்துள்ள வேளையில் அவற்றினை வழங்காது ஒரு அரைகுறைத் தீர்வினைத் திணிப்பதற்கு அரச தரப்பு முயன்று வருகின்றது. இவ்விடயங்களைக் கையாளும் குறித்த சில தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகள் அரசின் இந்தப் போக்கிற்கு ஆதரவளித்து வருவதுடன் மக்களுக்கு இது தொடர்பிலான விடயங்களைத் தெளிவுபடுத்தாது மூடு மந்திரம் போன்று அவற்றைக் கையாண்டு வருகின்றனர். 13வது திருத்தச் சட்டத்திற்கு மேல் எதனையும் தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது என்று சிலர் கூறி வருவது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகின்றது.
இவ்விடயங்கள் தொடர்பில் தமிழ் மக்களுடைய கவனத்தினைத் திசைதிருப்பும் முகமாக நன்கு திட்டமிட்ட வகையில் வடமாகாணசபையின் செயற்பாடுகளில் தொடர்ச்சியாகக் குழப்பங்களை உருவாக்கி தமிழ் மக்களையும் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களையும் எனது கவனத்தினையும் திசைதிருப்ப அரசும் அவர்களுக்குச் சார்பான சில தமிழ் அரசியல்வாதிகளும் முயன்று வருகின்றனர் என்றே தோன்றுகின்றது. இதன் ஒரு அங்கமாக வடமாகாணசபையின் உறுப்பினர்கள் சிலரை பயன்படுத்தி வடமாகாணசபையில் தொடர்ச்சியான குழப்பத்தினை உருவாக்கி வருகின்றனர். எனவே இது தொடர்பில் தமிழர் தரப்பு விழிப்படைதல் அவசியமானது. உத்தேச அரசியல் அமைப்பு மாற்றம் தொடர்பில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பது பற்றி மக்கள் கவனம் செலுத்துதல் அவசியமானது. இல்லாதுபோயின் எமது கவனத்தினைத் திசைதிருப்பி வைத்துக்கொண்டு தாம் நினைத்ததை நிறைவேற்ற முனையும் சக்திகளுக்கு அது வாய்ப்பாக அமைந்து விடும். இத்தருணத்தில் எம்மிடையே விழிப்பு அவசியம்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com