சற்று முன்
Home / செய்திகள் / காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கேட்டு வவுனியாவில் அணிதிரள்வோம்! -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கேட்டு வவுனியாவில் அணிதிரள்வோம்! -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

சிறிலங்கா இராணுவத்தினராலும் அவர்களோடு இணைந்து பணியாற்றிய துணை ஆயுதக் குழுக்களினாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கேட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் புதன் கிழமை (30/01/2019) அன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட இருக்கும் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு எமது தார்மீக ஆதரவினை தெரிவித்துக் கொள்வதுடன், வடக்கு-கிழக்கு தமிழர்கள் அரசியல், கட்சி, சமய, சமூக வேறுபாடுகளைத் துறந்து பெருந்திரளாக அணிதிரளுமாறு உலகத் தமிழர்கள் சார்பில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை கேட்டுக்கொள்கின்றது.

பிராந்திய, சர்வதேச வல்லரசுகளின் சுயநலன் சார் நலன்களை மையப்படுத்தியதான நிலைமாறுகால நீதி பொறிமுறைக்குள் திட்டமிட்டு மறுக்கப்பட்டு வரும் தமிழர்களுக்கான பரிகார நீதியை பெறுவதற்கான களமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டமே இன்று காணப்படுகின்றது. சிறிலங்கா இராணுவத்தினராலும் அவர்களோடு இணைந்து பணியாற்றிய துணை ஆயுதக் குழுக்களினாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கும், போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா இராணுவத்திடம் நேரில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கும் சாட்சியங்களாக அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்டவர்கள் இருந்து வருகின்றார்கள்.

இவ்வாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிலங்கா இராணுவத்தினரது துப்பாக்கி முனையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையும் சித்தரவதைக்கு உள்ளாகியிருந்தமையும் படுகொலை செய்யப்பட்டிருந்தமையும் ஆதாரபூர்வமாக புகைப்பட, காணொளி ஆதாரங்களுடன் பல்வேறு தரப்பினரால் வெளிப்படுத்தப்பட்டு வந்துள்ள போதிலும் அச்சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புடைய இராணுவத்தினர் மீதோ அவர்களுக்கு கட்டளைகளை பிறப்பித்த உயர் அதிகாரிகள் மீதோ இதுவரை ஏதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவும் இல்லை, அதற்கான அழுத்தங்களும், நெருக்கடிகளும் சர்வதேச மனிதாபிமான, மனித உரிமை சட்ட வரையறைக்குள்ளாக மேற்கொள்ளப்படவும் இல்லை.

மாறாக, அவ்வாறானவர்களை பாதுகாப்பதிலும் பதவி உயர்வுகள் வழங்கப்படுவதிலுமே சிறிலங்கா அரசு அக்கறை காட்டி வருகின்றது. இதனை தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகத் திகழ்ந்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் கண்டும் காணாது இருந்துவருவது தமிழர்களின் துர்ப்பாக்கியமாகும். ஆகவே, இனியும் தாமதிப்போமாயின் எமக்கான நீதியானது எமது வாக்குப் பலத்தின் ஊடாக எமது தலைமையாக நாம் ஏற்றிவைத்தவர்களின் கள்ளமௌனத்தை சாட்சியாக்கி குழிதோண்டிப் புதைக்கபடுவது திண்ணம்.

வடக்கு-கிழக்கு மாகாணத்தை உள்ளடக்கிய எட்டு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை ஒன்றுதிரட்டி முன்னெடுக்கப்படவிருக்கும் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியில் வடக்கு-கிழக்கு தமிழர்கள் அரசியல், கட்சி, சமய, சமூக வேறுபாடுகள் துறந்து பெருந்திரளாக அணிதிரளுமாறு கேட்டுக் கொள்வதுடன் உலகத் தமிழர்கள் சார்பில் எமது தார்மீக ஆதரவினையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com