சற்று முன்
Home / செய்திகள் / கல்வி விடயங்களில் மஸ்தான் எம்.பி அநாவசிய தலையீடு – ஆசிரியர் சங்கம் கண்டனம்

கல்வி விடயங்களில் மஸ்தான் எம்.பி அநாவசிய தலையீடு – ஆசிரியர் சங்கம் கண்டனம்

ஊடக அறிக்கை 31.01.2019

பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் செயற்பாட்டை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு – ஆளுநரினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவை திசைதிருப்பும் செயற்பாட்டையும் அவர் கைவிடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட- வவுனியா நொச்சிக்குளம் கனிஸ்ர உயர்தர வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் ஆசிரியரிடம் இருந்து பணம் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டார். அந்த பாடசாலையின் அதிபர் அந்த மாணவிக்கு பனை மட்டையால் அடித்துள்ளார். இந்த சம்பவம் 16.01.2019 அன்று நடைபெற்றது.
ஆனால் – அதிபரின் அரசியல் செல்வாக்கு காரணமாக பொலிஸார் இந்த பிரச்சினையில் தலையிடவில்லை. அதன்பின் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டதன் பின்னரே பொலிஸ் விசாரணையை மேற்கொண்டது.

இந்த நிலையில் அதிபர் பிள்ளைகளின் பெற்றோர்களை அழைத்து – குறித்த மாணவியை பாடசாலையில் அனுமதிப்பதில்லை என்ற தன்னிச்சையான முடிவை எடுத்ததோடு – பாடசாலையில் நடைபெற்றுவரும் – வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளிலும் மாணவியை சேர்த்துக் கொள்ளவில்லை.

மாணவர்களை தவறுகளிலிருந்து சீர்படுத்தவேண்டிய பொறுப்பானவர்கள் -9 வயது மாணவியினை மிகப்பெரும் குற்றவாளியைத் தண்டிப்பது போன்று இரக்கமின்றி செயற்பட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக வடமாகாண கல்வித் திணைக்களம் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

அவ்வாறாயின் – தவறுகளிலிருந்து மாணவர் சமுதாயத்தை சீரமைக்க வேண்டிய பணி யாருடையது?

அறியாத வயதில் தவறிழைத்த மாணவர்களினை – சீர்படுத்தமுயற்சிக்காது – பாடசாலையிலிருந்து நீக்குவதைத்தான் வடமாகாண கல்விப்புலம் அனுமதிக்கிறதா?

அப்படி மாணவியை பாடசாலையிலிருந்து நீக்குவதாயின் – குறித்த மாணவிக்கு உடலியல் ரீதியாக பனைமட்டையால் அடிக்கும் அதிகாரத்தை அதிபருக்கு வழங்கியது யார்?

தவறுகளிலிருந்து மாணவர்களை வழிப்படுத்த முயலாது – பாடசாலைகளிலிருந்து மாணவர்களை நீக்கும் உடனடி தீர்வின் மூலம் – நிரந்தர குற்றவாளிகள் உருவாக்குவதை வடமாகாண கல்விப்புலம் ஊக்குவிக்கின்றதா?

நீண்டகால கொடிய யூத்தத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டுடெழும் நிலையில் மாணவர்களின் உடல் -உள-சமூக கௌரவத்தைப் பாதிக்கும் இத்தகைய மிலேச்சத்தனமான செயற்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது.

தவறுகளை திருத்தி மாணவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பான செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டிய பாடசாலைக் கல்விமுறையில் குறித்த பாடசாலை அதிபரின் செயற்பாடு ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும்.
இவ்விடயம் தொடர்பாக வடமாகாண ஆளுநருக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தால் முறைப்பாடு செய்யப்பட்டதற்கமைய – ஆளுநரால் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

இந்த விசாரணையை திசை திருப்பும் நோக்கில் – பாடசாலை சமூகம் என்ற பெயரில் குறித்த மாணவியின் அனுமதிக்கெதிராக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானும் கலந்துகொண்டமை மிகுந்த கண்டனத்துக்குரியது.

பொறுப்புவாய்ந்தவராக – மனித உரிமைகளை மதித்து நடக்கவேண்டிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் – 9 வயது மாணவியின் தவறை மன்னித்து – நல்வழிப்படுத்தும் போதனைக்கூடமாக பாடசாலையினை கருதாமல் -மாணவியின் கல்வி உரிமையை நசுக்கும் செயற்பாட்டையே செய்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் செயற்பாட்டை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு – ஆளுநரினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவை திசைதிருப்பும் செயற்பாட்டையும் அவர் கைவிடவேண்டும் என்பதையும் தெரிவிக்கின்றோம்.

ஜோசப் ஸ்ராலின்
பொதுச்செயலாளர்,
இலங்கை ஆசிரியர் சங்கம்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com