சற்று முன்
Home / செய்திகள் / ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலைக்கு நீதி மறுப்பு – சந்தேக நபர்கள் விடுவிப்பு

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலைக்கு நீதி மறுப்பு – சந்தேக நபர்கள் விடுவிப்பு

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை வழக்கின் சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என சட்ட மா அதிபர் திணைகளம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு பரிந்துரைத்துள்ளது.

அதனால் 6 சந்தேக நபர்களையும் விடுவிக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2000ஆம் ஆண்டு, ஒக்ரோபர் 19ஆம் திகதி இரவு 10 மணியளவில் யாழ்ப்பாண நகரின் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாக அப்போது இருந்த, கச்சேரியடிப் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்டார்.

அன்று மாலையில், நாகர்கோவிலில் இலங்கை விமானப்படை உலங்குவானூர்தி விடுதலைப் புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்ட செய்தியை பிபிசி தமிழோசைக்கு தொலைபேசி மூலம் வழங்கி விட்டு, வீரகேசரி நாளிதழுக்காக தொலைநகலில் அனுப்புவதற்காக அந்தச் செய்தியை எழுதிக் கொண்டிருந்த போதே, அவரது வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் அவரைச் சுட்டுப்படுகொலை செய்தனர்.

அதையடுத்து, அவரது வீட்டுக்குள் கைக்குண்டை வீசிவிட்டுச் சென்றதில், நிமலராஜனின் தந்தை, தாய், மருமகன் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்தப் படுகொலைக்கு ஈபிடிபியே காரணம் என்றும் குற்றம்சாட்டப்பட்ட போதிலும், அரசில் அப்போது இடம்பெற்றிருந்த ஈபிடிபியினருக்கு எதிராக முறையான விசாரணைகள் ஏதும் நடத்தப்படவில்லை.

பிபிசி தமிழோசை, ஹிரு எவ்எம், சூனியன் எவ்எம் வானொலிகளுக்கும், வீரகேசரி, ராவய இதழ்களுக்கும் செய்தியாளராளராக யாழ்ப்பாணத்தில் இருந்து பணியாற்றியிருந்தார் நிமலராஜன்.

யாழ்ப்பாணம் அரச படைகளின் கட்டுப்பாட்டில் வந்த பின்னர், அங்கு இடம்பெற்ற படைகளின் அட்டூழியங்கள் குறித்தும், தீவகத்தில் ஈபிடிபியினரின் முறைகேடுகள் குறித்தும் வெளியுலகிற்கு அம்பலப்படுத்தி வந்தார் நிமலராஜன்.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பி 423/2000 என்ற வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டது.

சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக கடந்த பல ஆண்டுகளாக வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தது.

இந்த நிலையில் பொலிஸ் தலைமையக சட்டப் பிரிவின் பணிப்பாளருக்கு சட்ட மா அதிபரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நிமலராஜன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 6 பேருக்கும் எதிரான குற்றவியல் நடவடிக்கையை தொடர்ந்து முன்னேடுக்க முடியாது என பரிந்துரை வழங்கியுள்ளார்.

அத்துடன், வழக்கின் சந்தேக நபர்களை விடுவித்து 14 நாள்களுக்குள் அறிக்கையிடுமாறும் பொலிஸ் திணைக்களத்தின் சட்டப் பிரிவு பணிப்பாளருக்கு சட்ட மா அதிபர் பணித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com