சற்று முன்
Home / செய்திகள் / ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு – 50 ஆயிரம் ரூபா இழப்பீடு செலுத்திய நபர்!!

ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு – 50 ஆயிரம் ரூபா இழப்பீடு செலுத்திய நபர்!!

ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்து அவரைத் தாக்க முற்பட்டமை மற்றும் அவரது கமராவை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டு வழக்கின் எதிரியான இரும்பக உரிமையாளர், ஊடகவியலாளருக்கு இழப்பீடாக 50 ஆயிரம் ரூபாவை வழங்கியதால், யாழ்ப்பாண நீதிமன்றால் வழக்கு இணக்கத்துடன் முடிவுறுத்தப்பட்டது.

அத்துடன், இனிவரும் காலங்களில் இவ்வாறான குற்றத்தை மீளவும் செய்யக்கூடாது என்று எதிரியை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.சாமி எச்சரித்தார்.

யாழ்ப்பாணம் கொக்குவில் சந்திக்கு அருகாமையிலுள்ள இரும்பகம் ஒன்று வாள் வெட்டு கும்பலால் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி தாக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் யாழ்்ப்பாணத்தில் இயங்கும் தொலைக்காட்சி சேவையின் ஊடகவியலாளர் நடராஜா குகராஜ், செய்தி சேகரிக்கச் சென்றிருந்தார். அவர் செய்தி சேகரிப்பதைத் தடுத்த அந்த இரும்பகத்தின் உரிமையாளர் மற்றும் சிலர், அவரது கமராவை பறித்துச் சேதப்படுத்தினர்.

கமரா சேதப்படுத்தியமை தொடர்பில் ஊடகவியலாளரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. கமராவை சேதப்படுத்தியவர்களையும் அவர் பொலிஸாரிடம் அடையாளம் காட்டியிருந்தார்.

இந்த நிலையில் இரும்பக உரிமையாளர் மற்றும் அவரது சகோதரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்து அவரைத் தாக்க முற்பட்டமை மற்றும் அவரது கமராவைச் சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பொலிஸார் முதல் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.

பொலிஸாரின் அறிக்கையை ஆராயந்த நீதிவான், சந்தேகநபர்களை நிபந்தனையுடனான பிணையில் விடுவித்தார். அதனைத் தொடர்ந்து அந்த வழக்கு சுமார் 10 மாதங்களாக தொடர் விசாரணையில் இருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

எதிரிகள் தரப்புச் சட்டத்தரணி மன்றில் தோன்றி பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு இழப்பீடு வழங்கி, வழக்கை இணக்கத்துடன் முடிப்பதற்கு விண்ணப்பம் செய்தார். எதிரிகள் தரப்பு விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள முடியுமா என்று ஊடகவியலாளரிடம் மன்று கேள்வி எழுப்பியது.

அதனை ஏற்றுக்கொண்டு வழக்கை இணக்கத்துடன் முடிக்க ஊடகவியாளர் மன்றிடம் சம்மதம் தெரிவித்தார். அதனால் ஊடகவியலாளருக்கு 50 ஆயிரம் ரூபாவை இழப்பீடாக வழங்க எதிரிகளுக்கு மன்று உத்தரவிட்டது. இழப்பீடு வழங்கப்பட்டது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com