சற்று முன்
Home / செய்திகள் / ஆளணியை நிரப்பமுடியாமல் திண்டாடுபவர்கள் அபிவிருத்தித் திட்டங்களை எவ்வாறு வெற்றிகரமாக முன்னெடுப்பர் ?

ஆளணியை நிரப்பமுடியாமல் திண்டாடுபவர்கள் அபிவிருத்தித் திட்டங்களை எவ்வாறு வெற்றிகரமாக முன்னெடுப்பர் ?

யாழ் மாநகரசபைக்கான உள்ளூராட்சித் தேர்தல் கடந்த ஆண்டு பெப்ரவரி10 ஆம் திகதி நடைபெற்று
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் மாநகரசபையினைக் கைப்பற்றி ஒரு வருடம் ஆகியுள்ளபோதும் மிக முக்கிய பதவிநிலை அதிகாரிகள் உள்ளடங்கலாக யாழ் மாநகரசபையின் ஆளணியில் வெற்றிடமாகக் காணப்படும் 20 சதவிகித ஆளணி வெற்றிடத்தினைக் கூட நிரம்ப முடியாத வினைத்திறனற்ற செயற்பாடுகளையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

யாழ்ப்பாணம் மாநகரசபையில் பிரதி ஆணையாளர், உதவி ஆணையாளர், பிரதம பொறியியலாளர், கால்நடை மருத்துவ அதிகாரி, நிர்வாக உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், சுகாதாரக் கல்வி அதிகாரிகள், உணவு தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் உள்ளிட்ட மிக முக்கிய உயர் பதவிகளுக்கான ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்படாமையால் யாழ் மாநகரசபை நிர்வாக ரீதியில் வினைத்திறனுடன் செயலாற்ற முடியாமல் திண்டாடுகின்றது.

யாழ் மாநகரசபையில் மிக மோசமான நிர்வாகச் சீர்கேடு மிக்க ஆட்சி என வர்ணிக்கப்பட்ட ஈபிடிபியின் ஆட்சியை நிராகரித்து பிரச்சாரங்களை மேற்கொண்டு பதவிக்கு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதே ஈபிடிபியுடன் இணைந்து ஆட்சியைக் கைப்பற்றியது.

மக்களுக்கு எதுவுமே செய்யாத வினைத்திறனற்ற சபை என விமர்சிக்கப்படுகின்ற வடக்கு மாகாணசபையின் உறுப்பினராக இருந்த இம்மானுவேல் ஆர்னோல்ட் யாழ் மாநகரசபையின் முதல்வராகப் பதவியேற்றிருந்தார். எனினும் அவரால் பதவிக்கு வந்த ஒருவருடத்தில் யாழ் மாநகரசபையின் மொத்த ஆளணியில் வெற்றிடமாக உள்ள 20 சதவிகித ஆளணியை அதுவும் மிக முக்கிய பதவிகளுக்கான ஆளணிகளைக்கூட நிரப்பிட முடியாத நிலையே நீடிக்கிறது.

யாழ்ப்பாணம் மாநகரசபையில் 1238 நிரந்தர ஆளணி நியமத்திற்கான கோட்டா உள்ளபோதும் அவற்றில் 1032 ஆளணியினரே நியமிக்கப்பட்டுள்ளதோடு மிக முக்கிய பதவிநிலை அதிகாரிகள் உட்பட 218 ஆளணி வெற்றிடங்கள் யாழ் மாநகரசபையில் காணப்படுவதாக யாழ் மாநகரசபையின் தகவல் வழங்கும் அதிகாரியான நிர்வாக உத்தியோகத்தர் க.ஜெயானந்தன் குறிப்பிட்டுள்ளார்.

தகவல் அறியும் சட்டம் ஊடாக யாழ் மாநாகரசபையில் உள்ள ஆளணி வெற்றிடங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே குறித்த தகவல்களை அவர் வழங்கியுள்ளார்.

தகவல் அறியும் சட்டம் ஊடாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் யாழ் மாநகரசபையில்,
பிரதி ஆணையாளர் 01, உதவி ஆணையாளர் 01, பிரதம பொறியியலாளர் 01, கால்நடை மருத்துவ அதிகாரி 01, நிர்வாக உத்தியோகத்தர்கள் 03, தொழில்நுட்ப உத்தியோகத்தர் 01, நீர் வேதியல் உத்தியோகத்தர் 01, மொழிபெயர்ப்பாளர்கள் 03, சுகாதாரக் கல்வி அதிகாரிகள் 03, உணவு தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் 05, நூலகர் 01, பொது சுகாதார தாதியர் 03, மருந்தாளர் 03, பொதுச் சுகாதார மருத்துச்சி 14, பொதுச் சுகாதார அதிகாரிகள் 02, நூலகர் தரம் 02 – 09, முகாமைத்துவ உதவியாளர்கள் 11, வருவாய்ப்பகுதி அதிகாரி 09, கள வேலை மேற்பார்வையாளர்கள் 03, சுகாதார மேற்பார்வையாளர்கள் 04, சந்தை மேற்பார்வையாளர்கள் 13, முன்பள்ளி ஆசிரியர்கள் 03 உள்ளிட்ட பதவிகளுக்கு ஆளணியினர் இல்லாமல் உள்ள தாகவல்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதோடு இத்தனை ஆளணி வெற்றிடத்தை வைத்துக்கொண்டு எவ்வாறு யாழ் மாநகரசபையை வினைத்திறனுடன் செயற்படுத்த முடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அத்தோடு சாரதிகள் 05, தச்சுத் தொழிலாளிகள் 05, ஒட்டுநர்கள் 04, மேசன் 02, மின் இணைப்பாளர்கள் 03, கே.கே.எஸ் 10, சுகாதாரத் தொழிலாளிகள் 56, நீர் வேலை தொழிலாளிகள் 17 உள்ளிட்ட பணிகள் உள்ளடங்கலாக 218 ஆளணி வெற்றிடங்கள் உள்ளபோதும் அவை நிரப்பப்படாமல் உள்ள தகவல்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

யாழ் மாநகரசபை கடந்த பல மாதங்களாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கப்போவதாக வெறும் அறிக்கைகளை விடுத்தவண்ணமுள்ளது. ஆனால் இதுவரை எவையும் செயல்வடிவம் பெற ஆரம்பித்திருக்கவில்லை. யாழ் மாநகரசபை உறுப்பினர்களும் வீதி கூட்டுவதையும் புல்லுவெட்டுவதையும் வீதிக்கு தாரிடுவதையும் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி நண்பர்களிமிருந்து பாராட்டுக்களைப் பெறுவதிலேயே ஒரு வருடமாக கவனம் செலுத்திவருகின்றனர்.

இந்நிலையில் யாழ் மாநகரசபையை நம்பி அவர்களிடம் உலகவங்கியின் புதிய நகர திட்டம் உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுப்பதற்கு கையளிக்கப்போகிறார்கள் என்பதுவும் அவர்கள் அவ்வாறு அத்திட்டங்களை வினைத்திறனுடன் செய்துமுடிக்கப்போகின்றார்கள் என்பதுவும் ஆச்சரியமான ஒன்றாகவே காணப்படுகின்றது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com