சற்று முன்
Home / செய்திகள் / ஈரானின் இராணுவத் தலைவரை ஏவுகணைத் தாக்குதலில் கொன்றது அமெரிக்கா – அதிர்ச்சியில் உலக நாடுகள்

ஈரானின் இராணுவத் தலைவரை ஏவுகணைத் தாக்குதலில் கொன்றது அமெரிக்கா – அதிர்ச்சியில் உலக நாடுகள்

இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரான ஜெனரல் காசெம் சுலேமானீ அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார்.

இராக்கில் உள்ள அமெரிக்க படைகள், அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் சுலேமானீயை கொன்றதை அமெரிக்க பாதுகாப்பு அலுவலகமான பென்டகன் உறுதிபடுத்தியது.

பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து இச்செய்தி வெளியானது. இத்தாக்குதலில் மக்கள் பலர் கொல்லப்பட்டனர்.

இந்த நடவடிக்கை “மிகவும் அபாயகரமான மற்றும் முட்டாள்தனமானது” என்று இரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப் கூறியுள்ளார்.

இதனிடையே, ”இந்த தாக்குதலை நடத்திய குற்றவாளிகளுக்கு கடுமையான பழிவாங்கல் நடவடிக்கை காத்திருக்கிறது” என்று இரானின் அதிஉயர் தலைவர் ஆயடூலா அலி காமனேயி எச்சரித்துள்ளார்.

இரானின் ஆட்சியில் ஜெனரல் காசெம் சுலேமானீ, ஒரு முக்கியமான நபர். அவரது படைப்பிரிவு நேரடியாக இரான் நாட்டின் அதிஉயர் தலைவர் ஆயடூலா அலி காமனேயிடம் தொடர்பில் இருக்கும். மேலும் சூலேமானி, அந்நாட்டில் ஹீரோ போல பார்க்கப்பட்டவர்.

இதனை தொடர்ந்து உலகளவில் எண்ணெய் விலை 4 சதவீதம் உயர்ந்துள்ளது.

என்ன நடந்தது?

அமெரிக்க ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தியதில், ஜெனரல் சுலேமானீ கொல்லப்பட்டதாக இரானின் புரட்சிகர காவல் படை உறுதிபடுத்தியுள்ளது.

இராக் போராளிகளின் தலைவர் அபு மஹ்தி அல்-முஹன்டியும் கொல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

சுலேமானீ மற்றும் இரான் ஆதரவு போராளிகள் இரண்டு கார்களில் பாக்தாத் விமான நிலையத்தில் இருந்து செல்லும்போது, அமெரிக்க ட்ரோனால் அவர்கள் தாக்கப்பட்டனர்.

இது தொடர்பாக பென்டகன் வெளியிட்ட அறிக்கையில், “அதிபரின் உத்தரவின் பேரில், வெளிநாட்டில் இருக்கும் அமெரிக்க பணியாளர்களை பாதுகாக்கும் நோக்கத்தில் ஜெனரல் காசெம் சுலேமானீயை கொல்லும் முடிவை அமெரிக்க ராணுவம் எடுத்தது” என்று கூறப்பட்டுள்ளது.

“இரான் எதிர்காலத்தில் தாக்குதல் நடத்துவதை தடுக்கும் நோக்கத்தோடு இது நடத்தப்பட்டது. அமெரிக்கர்கள் உலகில் எங்கிருந்தாலும், அவர்களை பாதுகாக்க அமெரிக்கா அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்தாதில் இராக்கின் போராளிகள் தலைவர்கள் சிலர் அமெரிக்கப் படைகளால் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இத்தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

சமீபத்தில் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை போராளிகள் அமைப்பு சுற்றி வளைத்ததை தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com