சற்று முன்
Home / முக்கிய செய்திகள் / இலங்கை தோல்வியடைந்த நாடு

இலங்கை தோல்வியடைந்த நாடு

இலங்கையின் அரசியல் சாசனத்தை ஜனநாயகத் தீர்ப்பின் ஊடாக தமிழ் மக்களும், சிங்கள மக்களும் நிராகரித்துள்ளார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த நாட்டில் சட்டபூர்வமான ஒரு அரசியல் சாசனம் இல்லை எனவும் அந்தவகையில் இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவிற்கு இன்று (சனிக்கிழமை) விஜயம்செய்த அவர் தமிழரசுக் கட்சி காரியாலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “நாடாளுமன்றத் தேர்தல் ஒன்று இடம்பெறப் போகின்றது. நாட்டில் புதிய அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கபட்டு அதனூடாக ஆட்சி அதிகாரங்கள் தொடர்பான விடயங்கள் பரிசீலிக்கபட்டு அந்தந்தப் பிராந்தியங்களில் வாழ்கின்ற மக்கள் விசேடமாக வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மக்கள் தங்களுடைய நாளாந்த விடயங்களை தாமே நிறைவேற்றுவதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

அதிகாரங்கள் மத்தியில் குவிந்திருக்காமல் சமஷ்டிக் கோட்பாட்டின் அடிப்படையில் அவை பரவலாக்கப்பட்டு உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் அந்த தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்.

மக்களின் வாழ்க்கையில் அன்றாடம் இடம்பெறுகின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அதிகாரத்தை கொழும்பில் குவிக்காமல் அந்தந்த பகுதிகளில் மக்களால் ஜனநாயக ரீதியாக தெரிவுசெய்யப்படுகின்ற உறுப்பினர்கள் மூலமாகவும், அமைக்கப்படுகின்ற சபைகளூடாகவும் அந்த கருமங்களை நிறைவேற்றும் முகமாக அந்த தீர்வு இருக்கவேண்டும்.

இது எமது நீண்டகால போராட்டம். அது ஒரு நியாமான கோரிக்கை. அது மக்களின் பிறப்புரிமை. இதற்காகவே தந்தை செல்வா தமிழரசுக் கட்சியை உருவாக்கி நீண்ட காலமாக போராடியிருந்தார்.

13ஆம் திருத்தச் சட்டத்தை எமது பிரச்சினைக்கான முழுமையான தீர்வாக நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதில் பல குறைகள் இருக்கின்றன. அதியுச்ச அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அந்தந்த பிராந்தியங்களில் வாழ்கின்ற மக்கள் தமது தலைவிதியை தீர்மானிக்க்கூடிய சூழல் சட்ட ரீதியாக ஏற்படுத்தப்பட வேண்டும்.

இதுதொடர்பாக நாம் கடந்த ஆட்சியில் பல முன்னேற்றகரமான விடயங்களை முன்னெடுத்தோம். அதன்மூலம் கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்துக்கள் காணப்பட்டன. ஆனால் துரதிஷ்டவசமாக அந்த அரசாங்கம் தொடர்ந்து ஆட்சிபுரியக் கூடிய சூழல் இருக்கவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதனால் அந்தக் கருமத்தை தொடர முடியவில்லை. ஆனால் விரைவில் தொடருவோம், தொடர வேண்டும்.

புதிய நாடாளுமன்றம் கூடியபின்னர் அரசியல் சாசனம் தொடர்பாகவும், அதிகாரப் பரவல் தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகள் நடைபெறவேண்டும். ஒரு மக்கள் குழாமுக்கோ அல்லது தனித்தேசிய இனத்திற்கோ சுயநிர்ணய உரிமை நிச்சயம் உண்டு. அது மறுக்கப்பட்டால் அவர்களிற்கு வெளியக சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும். அதுதான் நிலைமை.

அது எங்களது பிறப்புரிமை. நாம் இந்த உலகில் பிறந்தவுடனேயே அந்த உரிமை எமக்கு உருவாகின்றது. அது நிறைவேற்றப்பட வேண்டும். அதற்காக 70 வருடங்களாக நாம் பயணிக்கின்றோம்.

இலங்கை தமிழரசுக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆரம்பகாலம் தொடக்கம் இந்தக் கருமங்களில் பங்களிப்பைச் செய்து அதனை வழிநடத்தி வருகின்றது.

இம்முறை தேர்தலில் 20 ஆசனங்களை நாம் பெறுவோம் என்று எதிர்பார்கிறோம். வன்னியில் உள்ள ஆறு ஆசனங்களில் ஐந்தினை நாம் பெறவேண்டும். அது வன்னி மக்களின் கடமை. யாழில் 6 பேரைப் பெறவேண்டும். மட்டக்களப்பில் 4 பேரையும் திருமலையில் 2 பேரையும் பெறுவதற்கான முயற்சிகளை எடுக்கின்றோம்.

கோட்டாபய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டு இரண்டு நாட்களிற்குப் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் நீதியின் அடிப்படையில் கௌரவத்தின் அடிப்படையில் அது தீர்க்கப்பட வேண்டும் எனவும் இந்திய பிரதமர் மோடி தெரியப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு பல வாக்குறுதிகளை கொடுத்திருக்கின்றது. ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. எனவே இவற்றை நிறைவேற்றுவதற்கு உங்கள் சார்பில் ஒரு பலமான அணி நாடாளுமன்றம் செல்லவேண்டியது அவசியமாகின்றது.

சர்வதேச ரீதியாக இந்த நாட்டில் ஒரு அரசியல் சாசனம் இல்லை. 1956ஆண்டு முதல் தமிழ் மக்கள் இந்த அரசியல் சாசனத்தை நிராகரித்து வருகின்றார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பிரகடனத்தின் அடிப்படையில் ஒரு நாட்டில் ஆட்சிபுரிவதற்கு அந்தநாட்டு மக்களின் இணக்கப்பாடும் ஒருமித்த கருத்தும் இல்லாமல் அந்தசாசனம் உருவாக்கப்பட முடியாது. இந்த நாட்டில் அந்த விடயத்தை தமது ஜனநாயகத் தீர்ப்பின் ஊடாக தமிழ் மக்களும், சிங்கள மக்களும் நிராகரித்திருக்கின்றார்கள்.

எனவே, இந்த நாட்டில் சட்டபூர்வமான ஒரு அரசியல்சாசனம் இல்லை. அது உருவாக்கப்பட வேண்டும். அந்தவகையில் இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு. ஆட்சிபுரிய முடியாத நாடு. இதுவொரு பெரிய சாவால். இதனை உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் எதிர்நோக்கியே தீர்வினைக்காண வேண்டும்.

நாங்கள் அந்த விடயங்களில் தொடர்ந்து ஈடுபட்டவர்கள். அதில் பங்குபற்றியிருந்தவர்கள். நாம்தான் அவற்றைப் பேசினோம். நாம்தான் அதனை வரைந்தோம். எனவே, அனைவரும் ஒற்றுமையாக இருந்து அனைவரும் முறையாக வாக்களிப்பதுடன், வன்னியில் 5 இடங்களைப் பெறவேண்டும் என்று தாழ்மையாகக் கேட்டுக் கொள்கின்றோம்” என்றார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com