சற்று முன்
Home / செய்திகள் / இராணுவத் தலைமை அதிகாரி சவேந்திர சில்வாவுக்கு எதிராக 137 பக்க போர்க்குற்ற ஆவணம் வெளியீடு

இராணுவத் தலைமை அதிகாரி சவேந்திர சில்வாவுக்கு எதிராக 137 பக்க போர்க்குற்ற ஆவணம் வெளியீடு

சிறிலங்காவின் புதிய இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைக் கொண்ட ஆவணம் ஒன்றை, தென்னாபிரிக்காவைத் தளமாக கொண்ட அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் நேற்று வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

சிறிலங்காவினுடைய புதிய இராணுவப் பிரதானியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினைப் பதவியில் இருந்து இடைநிறுத்தி அவரை போர்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக வழக்குத் தொடருவதற்கு போதியளவு ஆதாரங்கள் இருப்பதாக அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.

தென்ஆபிரிக்காவை தளமாக கொண்ட விசாரணைக் குழுவானது 2008 – 9 போரின் போது முக்கிய களநிலை கட்டளைத் தளபதிகளில் ஒருவரான சில்வாவினுடைய பணியினை விபரிக்கும் 137 பக்க ஆணவக் கோவையை வெளியிட்டுள்ளது.

இந்த ஆவணக் கோவையானது அவருக்கு எதிரான அல்லது இன்றை வரையான சிறிலங்காவின் போர்க்கால கட்டளைத் தளபதிக்கு எதிரான மிகவும் விரிவான ஆதாரங்களைக் கொண்டுள்ளது.

இது படங்கள், சமகால குறுஞ்செய்திகள், இராணுவத்தினரிடமிருந்து பெறப்பட்ட சாட்சி வாக்குமூலங்கள் மற்றும் போர் முடிவடைந்த பின்னர் உண்மையை மறைப்பதற்காக இணையத்தில் இருந்து அழிக்கப்பட்டு நீக்கப்பட்ட உத்தியோகபூர்வ இராணுவ வெளியீடுகளின் ஆதாரங்கள் இவற்றுடன் கடந்த ஐ நா விசாரணை அறிக்கைகளின் கண்டுபிடிப்புகள் பற்றிய வரைபுகளையும் ஒன்று சேர்த்து தொகுத்துள்ளது.

என்னுடைய அணியினால் பல ஆண்டுகளாக கவனமாகச் சேகரிக்கப்பட்ட அதிர்ச்சியளிக்கும் அளவிலான ஆதாரங்கள் இந்த ஆவணக் கோவையில் உள்ளது” என அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்

“அனைத்துலக நீதிமன்றங்களில் அல்லது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட வழக்குகளில் கூட இவ்வளவு ஆதாரங்கள் இருக்கவில்லை. சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாம் நிலை பதவியில் தொடர்ந்தும் இந்த மனிதர் இருப்பதற்கு சாக்குகள் எதுவும் சொல்ல முடியாது. அவர் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட்டு குற்றவியல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.”

சிறிலங்காவில் இறுதிப் போர் நடத்தப்பட்ட முறை பற்றி ஆராய்வதற்கு 2010 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அவர்களால் நியமிக்கப்பட்ட மூன்று அனைத்துலக சட்ட நிபுணர்களில் ஒருவராக சூக்கா இருந்தார்.

இதனைத் தொடர்ந்து 2012 இல் சிறிலங்காவில் ஐ.நாவின் பாரிய தோல்விகள் பற்றி உள்ளக மீளாய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது அத்துடன் அதன் பின்னர், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினாலும் ஒரு விசாரணை நடத்தப்பட்டது.

“2015 ஆம் ஆண்டு தனது விசாரணைப் பணிகளை நிறைவு செய்த பின்னர் அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் ஆனது போர் தொடர்பான ஆவணப்படுத்தலையும் அது தொடர்பான சாட்சியங்களையும் சேகரித்து வருகின்றது.

இது, எமது அரச சார்பற்ற அமைப்பானது இறுதிக்கட்ட சிவில் யுத்தம் மற்றும் அதற்குப் பின்னரான மீறல்கள் தொடர்பான மிகவும் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ள சாட்சியங்களை இப்பொழுது கொண்டுள்ளது என்பதைக் குறிக்கின்றது.

இந்த ஆவணக் கோவையானது நாங்கள் வைத்திருக்கும் தகவல்களில் ஒரு சிறிய பகுதி மாத்திரமே என சூக்கா தெரிவித்தார். பல வருடங்களாகப் பெற்ற அறிவினைக் கொண்டு அர்ப்பணிப்புமிக்க நிபுணர்கள் குழு செய்த வேலையில் முக்கியத்துவத்துவத்தை இது காட்டுகின்றது.”

2015 ஆம் ஆண்டு புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதாக வாக்குறுதியளித்த சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது கலப்பு நீதிமன்றம் உட்பட்ட ஒரு உறுதியான இடைக்கால நீதித் திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் ஐ நாவின் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியது. பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு மறுப்புத் தெரிவித்தது.

கடந்த காலத்தில் வாக்குறுதிகள் வழங்கியிருப்பினும் பத்து வருடங்களுக்கு முன்னர் முடிவடைந்த போரில் மூத்த இராணுவ அதிகாரிகள் எவரும் அவர்களது நடவடிக்கைகளுக்காக குற்றங்காணப்படவில்லை. பதிலாக குற்றஞ்சாட்டப்பட்ட பலர் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளார்கள்.

ஜனவரி 2019 இல் சவேந்திர சில்வா இராணுவப் பிரதானியபாக பதவியுயர்வு வழங்கப்பட்டமையானது மிகவும் அதிர்ச்சியானதாக இருந்தது. சிறிலங்காவின் பகுதிகளில் முன்னர் இடம்பெற்ற போரில் உயிர்தப்பி இன்னமும் வாழ்ந்துவரும் தமிழர்கள் மத்தியில் இது அச்சத்தையும் பயங்கரத்தையும் ஏற்படுத்தியது. ஆயினும் தெற்கில் உள்ள சிலர் அவரை இன்னமும் ஒரு வீரராகவே கருதுகின்றனர்.

“சவேந்திர சில்வா தண்டனையிலிருந்து பாதுகாப்பை அனுபவிக்கும் வரை அனைத்துலக சமூகம் சட்ட ஆட்சியின் மற்றும் பொறுப்புக்கூறலின் முன்னேற்றம் பற்றி முழுமையாக பேசமுடியாது. இந்த நபர் இராணுவத்தை நிர்வகித்து வரும் வேளையிலும் அத்துடன் அது மோசமான அனைத்துலக குற்றங்களை புறக்கணித்து வரும் வேளையிலும் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கான ஐ நாவின் திணைக்களம் சிறிலங்காவிலிருந்து அமைதிகாக்கும் படையினரை எவ்வாறு பணியில் அமர்த்த முடியும்.

சிறிலங்கா நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில் இந்தப் பிராந்தியத்தில் சிறிலங்காவுடன் நெருங்கிய இராணுவ உறவினைப் பேணிவரும் நாடுகள் சவேந்திர சில்வாவினுடைய நுழைவு அனுமதிகளை மறுதலிக்க வேண்டும் அல்லது பொதுவான சட்டவரையறையின் கீழ் கைது செய்ய வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்”; என சூக்கா தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டு இலத்தீன் அமெரிக்காவில் தூதுவராக இருந்த, போரின் போது சவேந்திர சில்வாவின் நேரடி கட்டளைத் தளபதியாக இருந்த ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவிற்கு எதிராக அனைத்துலக சட்டவரையறையின் கீழ் தொடர்ச்சியான போர்க்குற்ற வழக்குகளை அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் பதிவு செய்தது.

இந்த வழக்குகளைப் பதிவு செய்வதற்கு முதல்நாள் ஜெயசூரிய நாட்டைவிட்டு தப்பிச் சென்றார் அத்துடன் பிறேசிலிற்கோ அல்லது சிலிக்கோ திரும்பி வந்து ஒரு அனைத்துலக நீதிமன்றத்தில்

தனக்கெதிரான குற்றச்சாட்டுகளை சோதித்துப் பார்ப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

ஆவணக்கோவையின் சுருக்கம்

சவேந்திர சில்வா பற்றிய இந்த ஆவணக் கோவையானது 2008 – 9 ஆண்டுகளில் அவர் கட்டளைத் தளபதியாக இருந்த 58 ஆவது படைப்பிரிவு சிறிலங்காவின் வடக்கில் உள்ள தொடர் நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்களை விபரிக்கின்றது. அந்த தாக்குதல்கள்

– பொதுமக்கள் மீது வேண்டுமென்றும் கண்மூடித்தனமாகவும் நடாத்தப்பட்ட தாக்குதல்கள்

– வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள்

– பாதுகாப்பு வலயங்கள் மீதான தாக்குதல்கள்

– தடைசெய்யப்பட்ட மற்றும் கண்மூடித்தனமான ஆயுதப்பாவனை போன்றவற்றை உள்ளடக்குகின்றது.

கட்டளைப் பொறுப்பு

அனைத்துலக சட்டத்தின் கீழ் சவேந்திர சில்வா போன்ற கட்டளைத் தளபதி பின்வருவனவற்றுக்கு நேரடியாக பொறுப்புடையவராவார்:

– சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தனக்கு கீழ் இருந்தவர்களுக்கு கட்டளை வழங்கியமை

– சட்டத்திற்குப் புறப்பான நடவடிக்கைகள் அவருக்கு கீழ் இருந்தவர்களால் மேற்கொள்ளப்பட்டபோது அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியமை (அவர் அவற்றுக்கு கட்டளையிட்டாரோ இல்லையோ)

சில்வா அனைத்துலக சட்டங்கள் பற்றி இராணுவ வீரர்களுக்கு படிப்பித்து வருவதாக இராணுவம் தெரிவிக்கின்றது. ஆகையால் இது பற்றி அவருக்கு தெரிய வேண்டும்.

பொதுமக்கள் மீதான தாக்குதல்கள்

இந்த ஆவணக் கோவை பொதுமக்களின் உயிரிழப்புகள் மற்றும் காயங்களை ஒரு வகையான அழிவாகவே பார்க்கின்றது. பொதுமக்கள் மீது எவ்வாறான போர் நடத்தப்பட்டது என்பதை தெளிவாக காட்டக்கூடிய ஆயிரக்கணக்கான படங்கள் வெளிவந்துள்ளன. அரசாங்கத்தின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு தற்காலிக வைத்தியசாலைகள் உள்ளான போது ஏற்பட்ட முற்றிலும் பயங்கரமான காட்சிகளை அதனை நேரில் கண்ட சாட்சிகள் விபரிக்கின்றனர்:

அது கூச்சல் குழப்பம் நிறைந்ததாக இருந்தது.அதனை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. அழுது கொண்டும் கூச்சலிட்டபடியும் பெற்றோர்கள் தமது காயப்பட்ட பிள்ளைகளை இங்கும் அங்கும் பதற்றத்துடன் தூக்கிக் கொண்டு வந்தார்கள். அந்தப் பிள்ளைகள் படுகாயமடைந்திருந்தார்கள். சிலரது அரைவாசி துண்டிக்கப்பட்ட அபயவங்கள் அவர்களின் உடலில் இருந்து தொங்கிக் கொண்டிருந்தது.”

2009 ஆண்டு இடம்பெற்ற போரில் உயிர் பிழைத்த தமிழர்கள் பத்தாண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் பயங்கரக் கனவுகளாலும் மனவடுவினாலும் இறப்புகள் பற்றி அடிக்கடி வரும் நினைவுகளாலும் இன்னமும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். குழந்தை ஒன்றினுடைய தலை தனக்கு அருகில் வந்து விழுந்ததாக ஒருவர் விபரிக்கின்றார். மற்றவர் தொங்கிக் கொண்டிருந்த தனது குடலைப் பிடித்துக் கொண்டிருந்த ஒரு மனிதரைக் கடந்து சென்றதாக ஞாபகப்படுத்துகின்றார்.

சிலர் பாதுகாப்பிற்காக பதுங்குகுழி வெட்ட முயன்ற போது அங்கு அழுகிய உடல்கள் வருவதைக் கண்டார்கள். வேறு சிலர் இரத்த வெள்ளத்தின் மீது வெறுங்காலுடன் ஓடியதாக கூறுகிறார்கள். தமது அன்புக்குரியவர்கள் ஏற்கனவே இறந்து விட்டது கூட தெரியாமல் அவர்களை பதுங்குகுழிகளுக்குள் கொண்டு செல்வதை அடிக்கடி பார்த்தாக அவர்கள் விபரிக்கின்றார்கள்.

போரில் தப்பி பிழைத்தவர்களின் மனதில் இப்பொழுதும் பயங்கரமான சம்பவங்கள் பற்றிய நினைவுகள் தொடர்ந்தும் உள்ளன. இவர்களில் பலர் போருக்குப் பின்னரான காலப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

“ஒரு குடும்பத்தில் ஒரு 18 மாதப்பிள்ளையும் அவனுடைய தகப்பனாரையும் தவிர அனைவருமே இறந்தார்கள். இருவரும் தலையில் காயமடைந்தார்கள் அந்த ஆண்பிள்ளை மிகவும் பசியுடன் இருந்தது. அவனுடைய தலையிலிருந்து இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது. அவனுக்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது என்று கூடத் தெரியவில்லை அத்துடன் அவன் மிகவும் பசியுடன் இருந்தமையால் தன்னுடைய தலைக் காயத்தால் ஏற்பட்ட வலி மற்றும் இரத்தம் போன்றவற்றைக் கவனிக்காமல் தன்னுடைய பெருவிரலை சூப்பிக் கொண்டிருந்தான் என்று நான் நினைக்கின்றேன்.”

கிளிநொச்சி தாக்குதல்கள்

கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட வேளையிலும் அது மீண்டும் மீண்டும் தாக்குதல்களுக்கு உட்பட்ட வேளையிலும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கட்டளைத் தளபதியாக இருந்தார். சவேந்திர சில்வா பொதுமக்கள் இழப்புகள் ஏற்படும் வகையில் வைத்தியசாலை மற்றும் ஐ நாவின் கட்டிடங்கள் போன்ற பொதுமக்கள் இலக்குகள் மீது வேண்டுமென்று தாக்குதல்களை மேற்கொள்வதற்கு கட்டளையிட்டார் என்பதை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன.

புதுக்குடியிருப்பு தாக்குதல்கள்

சவேந்திர சில்வா தலைமையிலான 58 ஆவது படையணி புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையில் நேரடியாக ஈடுபட்டிருந்தது. அரசாங்கத்துடன் தொடர்பில் இருந்தமையால் அவருக்கு வைத்தியசாலையின் ஆள்கூற்று நிலை பற்றி தெரியும். அத்துடன் அந்தப் பிரதேசத்தை நோட்டமிட்ட ஆளில்லா வேவுவிமானங்கள் மற்றும் ட்ரோன் போன்றவற்றுடன் அவருக்கு தொடர்பு இருந்தது.

ஐ நா அதிகாரிகள் வைத்தியசாலை தாக்குதலுக்கு உள்ளாவதாக பலமுறைகள் சிறிலங்கா இராணுவத்திற்கு அறிவித்திருந்தமையால் மேஜர் ஜெனரல் சில்வாவிற்கு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை குண்டுத் தாக்குதலுக்கும் எறிகணைத்தாக்குதலுக்கும் உள்ளாகி வந்தமை அவருக்கு நன்றாக தெரியும் என்பதை நம்புவதற்கு போதியளவு ஆதாரங்கள் உள்ளன.

தனக்கு கீழ் இருந்தவர்கள் தன்னுடைய முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதியில் அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்தை பாரியளவில் மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள் என்பது மேஜர் ஜெனரல் சில்வாவிற்கு தெரியும் அல்லது தெரிந்திருக்க வேண்டும்.

அத்துடன் தான் கட்டளைத் தளபதியாக இருந்தும் அவருடைய சக்திக்கு உட்பட்டதாக இருந்தும் கூட அவர் அந்த தாக்குதல்களை நிறுத்தவில்லை.

பொக்கணைத் தாக்குதல்கள்

சவேந்திர சில்வாவின் முழுமையான கட்டளையின் கீழ் இருந்த படையினர் பொக்கணையில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட நேரத்தில் கண்மூடித்தனமாக மற்றும் வேண்டுமேன்றே பொதுமக்கள் மீது தாக்குதல்களையும் நடத்தினார்கள். இதில் பால் மா வழங்கும் நிலையம் மீதான தாக்குதலும் உள்ளடங்கும். இதில் பொதுமக்களுக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டன. பல பெண்கள், பிள்ளைகள் கொல்லப்பட்டும் காயத்திற்கும் உள்ளானார்கள்.

தமது கட்டுப்பாட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதியில் பொதுமக்கள் மீதும் பொதுமக்கள் இலக்குகள் மீதும் வேண்டுமென்று தாக்குதல்களை மேற்கொண்டு வருவதும் அத்துடன் பொதுமக்கள் மத்தியில் இறப்பு மற்றும் காயம் ஏற்படும் வகையில் கண்மூடித்தனமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது பற்றி சில்வாவிற்கு தெரியும் அல்லது தெரிந்திருக்க சந்தர்ப்பம் உள்ளது. என்பதனை நம்புவதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன.

இந்த தாக்குதல்கள் குறிப்பிட்ட நீண்ட காலப்பகுதியில் திரும்பத் திரும்ப இடம்பெற்றன அத்துடன் முன்னைய தாக்குதல்கள் பற்றிய தகவல் அவரைச் சென்றடைந்திருக்க வேண்டும்.

புதுமாத்தளன் தாக்குதல்கள்

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா புதுமாத்தளன் வைத்தியசாலைக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை தலைமை தாங்கிச் சென்றார் அத்துடன் அவரின் கட்டளையின் கீழ் இருந்த படையினரே வைத்தியசாலையையும் கைப்பற்றினார்கள் என்பதனை இந்த அறிக்கையிலுள்ள ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. வைத்தியசாலைப் பகுதி உட்பட்ட புதுமாத்தளன் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல்களை மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவே திட்டமிட்டு கட்டளையிட்டதனை நம்புவதற்குரிய போதிய ஆதாரங்கள் உள்ளன. இந்த தாக்குதல்களில் வைத்தியசாலையிலும் அதனை சுற்றிய பகுதியிலும் பொதுமக்களுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டன.

வைத்தியசாலையானது பல தடவைகள் தாக்குதல்களுக்கு இலக்கானமையால் பொதுமக்கள் இலக்கினைத் தாக்கும் நோக்கத்துடனான தாக்குதல்களை மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவே கட்டளையிட்டார் என்பதை நம்புவதற்குரிய போதிய ஆதாரங்கள் உள்ளன. இதனைவிட புதுமாத்தளனில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஒரே மாதிரியானதாக இருக்கவில்லை என்பதனை நம்புவதற்குரிய போதிய ஆதாரங்கள் உள்ளன.

வலைஞர்மடம் தாக்குதல்கள்

சவேந்திர சில்வாவின் படையினர் வலைஞர்மடத்திலுள்ள வைத்தியசாலை மற்றும் கிறிஸ்தவ தேவாலயம் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டிருந்ததனை நம்புவதற்குரிய போதிய ஆதாரங்கள் உள்ளன. இதனால் பொதுமக்களுக்கு இழப்புக்கள் ஏற்பட்டதுடன் கட்டடங்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டன. 58 ஆவது படைப்பிரிவு உட்பட்ட சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணைகள் டாங்கிகள் மற்றும் கொத்துக்குண்டுகளை கண்மூடித்தனமான வழிகள் மற்றும் போர் முறைகளிலும் பயன்படுத்தினார்கள்.

மேஜர் ஜெனரல் சில்வாவின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருந்தவர்கள் வேண்டுமென்றே வலைஞர்மடத்திலிருந்த பொதுமக்கள் மீதும் பொதுமக்கள் இலக்குகள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டு வந்தார்கள். அத்துடன் பொதுமக்கள் மத்தியில் பெரியளவில் இறப்பு மற்றும் காயத்தை ஏற்படுத்தும் வகையில் கண்மூடித்தனதான தாக்குதல்களையும் மேற்கொண்டார்கள் என்பதனை அவர் அறிந்திருக்க வேண்டும் என்பதை நம்புவதற்குரிய போதிய ஆதாரங்கள் உள்ளன.

முள்ளிவாய்க்கால் தாக்குதல்கள்

மேஜர் ஜெனரல் சில்வாவின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருந்தவர்கள் வேண்டுமென்றே முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்த பொதுமக்கள் மீதும் பொதுமக்கள் இலக்குகள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டு வந்தார்கள் அத்துடன் பொதுமக்கள் மத்தியில் பெரியளவில் இறப்பு மற்றும் காயத்தை ஏற்படுத்தும் வகையில் கண்மூடித்தனதான தாக்குதல்களையும் மேற்கொண்டார்கள் என்பது அவருக்கு தெரியும் அல்லது அறிந்திருக்க சந்தர்ப்பம் உண்டு என்பதனை நம்புவதற்குரிய போதிய ஆதாரங்கள் உள்ளன.

மேலும்அவர் “தரைப்படையினரை நேரடியாக வழிநடத்திச் சென்றமையால்”; அவர் அந்தப் பிரதேசத்தில் இருந்தார் அத்துடன் அப்போது பாதுகாப்பு வலயம் – 32 சதுர கிலோமீற்றர்களைக் கொண்டதாக இருந்தமையால் அவர் இடம்பெயர்ந்த பொதுமக்கள் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்ததை அவர் பார்த்திருக்க வேண்டும் என்பதை ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தன்னுடைய கட்டளையின் கீழ் இருந்தவர்களில் இவற்றுக்கு பொறுப்பானவர்களை அவர் தண்டித்தார் அல்லது இவ்வாறான தாக்குதல் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தார் என்பதை உறுத்திப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் இல்லை.

சரணடைவுகள்

வட்டுவாகல் பாலத்தடியில் இடம்பெற்ற சரணடைவுகள் 58 ஆவது படையணியிடமே இடம்பெற்றதாக ஐ.நா அறிக்கை தெரிவிக்கின்றது. அந்தப் பகுதியில் ஒட்டுமொத்த கட்டளைகளுக்கும் பொறுப்பாக இருந்தாக கூறும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களுடன் தனிப்பட்ட ரீதியில் கைகுலுக்கி கொண்டார்.

அவர்களுடைய இறந்த உடல்கள் கொஞ்ச நேரத்திற்குப் பின்னர் வட்டுவாகல் பாலத்திற்கு மற்றைய பக்கத்தில் இருந்த வீதியோரத்தில் காணப்பட்டன என அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் இனால் செவ்வி காணப்பட்ட நேரடிச் சாட்சி ஒருவர் தெரிவித்தார்.

அவர் அங்கு பிரசன்னமாகியிருந்ததையும் அந்தப் பகுதிக்கு கட்டளை வழங்கியதையும் கருத்திற் கொண்டு அவருடைய பொறுப்பின் கீழ் இருந்த படையினரே சரணடைந்தவர்கள் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமைக்கும் மற்றும் அவர்களில் சிலர் உடனடியாக படுகொலை செய்யப்பட்டமைக்கும் பொறுப்பு என்பது அவருக்கு தெரியும் அல்லது அதனை தெளிவாக காட்டும் தகவல்களை வேண்டுமென்றே கவனத்தில் எடுக்காமல் விட்டார் என்பதை நம்புவதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளன.

பாலியல் வன்புணர்வு மற்றும் ஏனைய வடிவிலான பாலியல் வன்முறை மற்றும் சித்திரவதை

சித்திரவதையினை மேற்கொள்வதற்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அனுமதி வழங்கினார் என சித்திரவதை செய்யப்பட்ட சாட்சியொருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். சிறிலங்கா பற்றிய அதிகாரபூர்வ விசாரணை அறிக்கை மற்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சாட்சியங்களையும் கருத்தில் எடுத்துப் பார்க்கும் போது தன்னுடைய முழுக்கட்டுப்பாட்டின் கீழ் இருந்த படையினர் சித்திரவதையில் ஈடுபட்டமை மற்றும் அவர் இந்த வன்முறைகளை தடுக்க தவறியதுடன் அதற்குப் பொறுப்பானவர்களையும் தண்டிக்க தவறிவிட்டார் என்பதால் அவருக்கு இது பற்றி தெரியும் அல்லது தெரிந்திருக்க சந்தர்ப்பம் இருந்தது என்பதை நம்புவதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன.

இவ்வாறே இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் மற்றும் சிறிலங்கா பற்றிய உத்தியோகபூர்வ விசாரணையின் கண்டிபிடிப்புக்களையும் கருத்தில் எடுத்துப் பார்க்கும் போது மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் இருந்த படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்ற, பாலியல் வன்முறை, சித்திரவதை மற்றும் அவமானப்படுத்துதல்கள் போன்றவற்றுக்கும் அத்துடன் சித்திரவதை ஒரு தனியான குற்றமாகவும் சவேந்திர சில்வா குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்க முடியும். அத்துடன் எதிர்நோக்க வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com