சற்று முன்
Home / செய்திகள் / இயற்கை சீற்றம் : 07 பேர் பலி 25 பேரை காணவில்லை

இயற்கை சீற்றம் : 07 பேர் பலி 25 பேரை காணவில்லை

நாடு முழுவதும் பெய்யும் கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக 07 பேர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காணாமல் போயிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு நேற்று தெரிவித்தது.

நேற்று முன்தினம் இரவு கடும் மழை மற்றும் காற்றுடன் ஆரம்பமான சீரற்ற காலநிலையால் மலையக பிரதேசங்கள் உட்பட 11 மாவட்டங்களிலுள்ள 66 பிரதேச செயலாளர் பிரிவுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இம்மாவட்டங்களைச் சேர்ந்த 4ஆயிரத்து 886 குடும்பங்களிலுள்ள 18 ஆயிரத்து 781 பேர் நேற்று மாலை வரை பாதிப்புக்கு உள்ளாகியிருந்ததாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியது.

மரம் முறிந்து விழுந்ததாலும் காற்றினால் கூரைகள் மற்றும் தகரங்கள் தூக்கி எறியப்பட்டதாலும் சுமார் 26 பேர் காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

உயிரிழந்தவர்களுள் ஐவர் மீனவர்களாவர். இவர்களுள் நால்வர் ஹிக்கடுவையிலிருந்தும் ஒருவர் அம்பலாங்கொடையிலிருந்தும் கடலுக்குச் சென்றபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. அம்பலாங்கொடையில் காணாமற்போனோரது சடலம் நேற்று கொஸ்கொடவில் கரையொதுங்கியிருந்ததாகவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி நேற்று தெரிவித்தார்.

இதேவேளை, மடுல்சீம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவரும் கிரிபத்கொடையில் லொறி மீது மரம் முறிந்து விழுந்ததில் இன்னுமொருவரும் உயிரிழந்துள்ளனர்.

ஹிக்கடுவையிலிருந்து ட்ரோலர் படகில் கடலுக்குச் சென்ற மேலும் ஐவரும் மொரகல்லவில் 10 பேரும் காலியில் 10 பேரும் காணாமற் போயிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்தது. காணாமற்போனவர்களை கடற்படையினரும் விமானப்படையினரும் தேடி வருகின்றனர்.

அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் காலியிலிருந்து காணாமற்போயுள்ள நான்கு மீன்பிடிப் படகுகளையும் கடற்படையினர் தேடி வருவதாக கொடிபிலி கூறினார்.

முன்னெச்சரிக்கை அடிப்படையில் அனர்த்தங்கள் இடம்பெறுவதற்கு முன்னதாகவே 50 குடும்பங்கள் அவர்களது சொந்த இடங்களிலிருந்து அகற்றப்பட்டதாகவும் மேலும் 150 குடும்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவர்கள் தற்போது 04 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடும் காற்று காரணமாக 202 வீடுகள் முழுமையாகவும் 3250 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

பொலிஸார், கடற்படையினர், இராணுவத்தினர், விமானப்படையினர்,அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகள் ஆகிய அனைவரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை வரை நாட்டில் பாரிய மண்சரிவுகள் மற்றும் வெள்ளம் இடம்பெற்றிருக்கவில்லை. எனினும் அதற்காக பொது மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாமென்றும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடும் காற்றினால் சேதமடைந்த வீடுகளுக்கு 1900 கூடாரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த தாழமுக்கம் வலுப்பெற்றதையடுத்து நாட்டின் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் இன்றும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று அறிவித்திருந்தது.

இதன்படி, இன்றும் சப்ரகமுவ, ஊவா, மேல், மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் 150 மில்லிமீற்றரிலும் அதிக மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர்ந்த ஏனைய பிரதெசங்களிலும் 100 மில்லிமீற்றரிலும் அதிக மழை எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 60 தொடக்கம் 70 கிலோமீற்றராக இருக்கும். கடல் பிரதேசத்திலும்

குறிப்பாக மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மணித்தியாலத்துக்கு சுமார் 100 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மண்சரிவு எச்சரிக்கை

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் சிவப்பு அறிக்கை விடுத்துள்ளது.

காலநிலை சீராகும் வரை எல்ல மற்றும் வெல்லவாய பிரதான வீதிக்கூடாக பயணம் செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

விடுமுறை ரத்து

பாதுகாப்புக் கருதி நேற்றைய தினம் மேல்,தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் சட்டம்,ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் பணிப்புரையின்பேரில் அனைத்து பொலிஸ் அதிகாரிகளதும் விடுமுறைகள் ரத்து செயயப்பட்டுள்ளன.

இதேவேளை யால மற்றும் ஹோட்டன்வெளிக்கு பயணம் செய்வதை இக்காலப்பகுதியில் தவிர்த்துக் கொள்ளுமாறு வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com