சற்று முன்
Home / செய்திகள் / இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ஞானசார தேரர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி எனச் சாடியிருக்கும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் சகல இன மக்களும் இவ்வாறான தான்தோன்றித்தனமான சிங்கள பௌத்த வெறி கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

“ஒரே நாடு, ஒரே சட்டம்” சட்ட வரைபை தயாரிப்பதற்காக ஞானசார தேரர் தலைமையிலான 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (26) வெளியிடப்பட்டுடிருந்தது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள கேள்விபதில் அறிக்கையிலேயே நீதியரசர் க.வி.விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார். அவரது முழுமையான கேள்விபதில் அறிக்கை வருமாறு,

கேள்வி: ஜனாதிபதி ஞானசார தேரரின் தலைமைத்துவத்தின் கீழ் ஒரு ஜனாதிபதி செயலணியை உருவாக்கியுள்ளார். அவருடைய நோக்கு ஒரு நாடு ஒரு சட்டம் என்பது இது பற்றி உங்களுடைய அபிப்பிராயம் என்ன?

பதில்: ஜனாதிபதி பல்வேறு குற்றவாளிகளை இதுவரை தனது அதிகாரங்களைப் பாவித்து சிறைகளில் இருந்து வெளிக் கொண்டு வந்து மன்னிப்பு அளித்துள்ளார். உதாரணத்திற்கு இரண்டு நீதிமன்றங்களால் கொலைக் குற்றவாளியாக காணப்பட்ட இரத்நாயக்க என்ற இராணுவ வீரர் அவர்களுள் ஒருவர், கொலைக்குற்றவாளியாகக் காணப்பட்ட துமிந்த சில்வா மற்றொருவர். அண்மையில் கரணகொட என்ற முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிராக இருந்த குற்றச்சாட்டுக்களை கைவாங்கி அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். போர்க்காலத்தின் போது பல குற்றங்களைப் புரிந்த இராணுவ அதிகாரிகள் ஓய்வு பெற்ற பின் அவர்களைக் கொண்டு வந்து அவர்களுக்கு அரசாங்க உயர்பதவிகள் கொடுத்துள்ளார். ஆகவே குற்றஞ்சாட்டப்பட்டு குற்றவாளியாகக் கணிக்கப்பட்டு சிறையில் இருந்த ஞானசார தேரரை தற்போது தமது ஜனாதிபதி செயலணிக்கு தலைவராக்கியமை எனக்கு வியப்பைத் தரவில்லை. அவருடைய அந்த செயலணியில் அங்கம் பெறும் அங்கத்தவர்கள் பெரும்பான்மை சிங்களவர்களும் ஒரு சில முஸ்லீம்களும் ஆவர்.

வட மாகாணத் தமிழ் மக்களுக்கு என்று தேசவழமை என்ற ஒரு சட்டம் டச்சுக் காலத்தில் இருந்து சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றது. “ஒரு நாடு ஒரு சட்டம்” என்று கூறும் பொழுது தற்போது வலுவில் இருக்கும் றோம டச்சுச் சட்டம், ஆங்கிலச் சட்டம், கண்டியச் சட்டம், தேசவழமைச் சட்டம், முஸ்லீம் சட்டம் ஆகியவற்றைப் புறக்கணித்து இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாகக் கணித்து ஒற்றைச் சட்டத்தைக் கொண்டு வரவே இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

“ஒரு நாடு ஒரு சட்டம்” என்று கூறும் பொழுது இந்த நாட்டில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடகிழக்கு மாகாணங்களை சிங்கள மாகாணங்களுடன் சேர்த்து அவை சிங்கள பௌத்தத்திற்குள் அடங்கியவை என்று எடுத்துக் காட்டவே இந்த இன ரீதியான செயலணி உருவாக்கப்பட்டுள்ளது என்று நான் நம்புகின்றேன். கண்டியத் திருமணங்களில் ஃபின்ன, ஃதீக என்ற இரு விதமான திருமணங்கள் இருக்கின்றன. ஒன்றில் கணவனுடன் போய் மனைவி வாழ்வது மற்றையது மனைவியின் முல்கெதரவில் சென்று கணவன் வாழ்வது. இவையெல்லாம் பாரம்பரியமாக கண்டிய மக்கள் ஏற்றுக்கொண்ட திருமண முறைகள். இவற்றையெல்லாம் ருகுணரட்டவில் (தென்மாகாணம்) இருந்து வரும் கோட்டாபய மாற்றியமைக்க இருக்கின்றாரா? கண்டிய மக்களின் தலைவர்களுடன் கண்டிய சட்டத்தை நீக்கப் போவதாகக் கூறி அவர்களின் சம்மதத்ததை ஏற்றுக் கொண்டுள்ளாரா? முஸ்லீம் மக்களுடன் இதுபற்றிப் பேசி முஸ்லீம் சட்டத்தைக் கைவிட முஸ்லீம் மக்கள் ஆயத்தமா என்று அவர்களுடன் கலந்துரையாடியிருக்கின்றாரா?

தமிழ்ப் பேசும் மக்கள் என்ற முறையில் வடகிழக்கு மாகாணத்தில் இருக்கும் அவர்களுக்குரிய சட்டத்தை மாற்றுவதோ தொடர்ந்து வைத்திருப்பதோ என்பது அவர்களின் பொறுப்பு. அது மத்திய அரசாங்கத்தின் பொறுப்பல்ல.

வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்கள்தான் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள். 1833ல் வெள்ளையர்கள் இலங்கை முழுவதையும் நிர்வாக ரீதியாக ஒன்றிணைக்கும் வரையில் வடகிழக்கு தமிழ் அரசர்களாலும் தமிழ் சிற்றரசர்களாலும் ஆளப்பட்டு வந்தன. தமிழ் மொழியே அவர்களின் மொழியாகவும் இருந்தது. கண்டிய மன்னன் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனும் இன்னும் சில கண்டியத் தலைவர்களும் பிரித்தானியர்களுடன் 1815ல் செய்து கொண்ட உடன்படிக்கையில் தமிழிலேயே கையெழுத்து இட்டார்கள். இவ்வாறு தமிழுக்கும் தமிழருக்கும் என ஒரு அடையாளம் இலங்கையில் பண்டைக்காலம் தொட்டு இருந்து வருகையில் ஒரு நாடு ஒரு சட்டம் என்பதின் அர்த்தம் என்ன? இலங்கை ஒரு நாடு அல்ல. அது சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், மலையக மக்கள் மேலும் பல சிறிய இன மக்கள் வாழும் நாடு. அதுவும் தமிழ் பேசும் முஸ்லீம் மக்களும் வடகிழக்கு மாகாணங்களில் வாழ்ந்து வந்துள்ளார்கள். அரேபியாவில் இருந்தும் தென்னிந்தியாவில் இருந்தும் வந்து கிழக்கு மாகாணத்தில் குடியேறிய பின் தமிழ் மொழியையே அவர்கள் தம் தாய் மொழியாக ஏற்றுக் கொண்டார்கள்.

இவ்வாறு இருக்கையில் இலங்கையானது ஒரு நாடாக இல்லாது பல நாடுகளைக் கொண்டிருக்கும் போது ஜனாதிபதி எவ்வாறு ஒரு நாடு பற்றி அறிவிக்கலாம்? மேலும் ஐந்து சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் போது இந் நாட்டில் எவ்வாறு ஒரு சட்டத்தை அமுல்படுத்த எண்ணலாம்? அத்துடன் இவை யாவற்றையும் சிறையில் இருந்து வந்த ஒரு குற்றவாளியைத் தலைவராகக் கொண்ட ஒரு செயலணியைக் கொண்டு எவ்வாறு நடைமுறைப்படுத்த இருக்கின்றார்? தேரருக்கு எந்தளவுக்கு சரித்திரம் தெரியும், சட்டம் தெரியும்? ஜனாதிபதியின் போக்கு ஒன்றையே வலியுறுத்துகின்றது. இந்த நாடு சிங்கள பௌத்த நாடு என்றும், அதன் அடிப்படையில் இந்த நாட்டை ஒரு நாடாக அடையாளப்படுத்த வேண்டும் என்பதே அவரின் குறிக்கோள். சிங்கள பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே இந்த செயலணியின் குறிக்கோளாகும்.

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே இந்தச் செயலணி. சகல இன மக்களும் இவ்வாறான தான்தோன்றித்தனமான சிங்கள பௌத்த வெறி கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
பாராளுமன்ற உறுப்பினர்
யாழ் மாவட்டம்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com