சற்று முன்
Home / செய்திகள் / ஆர்னோல்டை நினைத்தாலே யூ.எஸ் ஹோட்டல் சதிதான் நினைவுக்கு வருகிறது

ஆர்னோல்டை நினைத்தாலே யூ.எஸ் ஹோட்டல் சதிதான் நினைவுக்கு வருகிறது

உள்ளூராட்சி சபைகளே நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொறுப்பேற்பது என்பது தவறான முன்னுதாரணம் எனத் தெரிவித்திருக்கும் மூத்த முன்னாள் போராளியான காக்கா அண்ணன் எனப்படும் மு.மனோகர் இன்று திலீபன் நினைவு நாளை யாழ். மாநகர சபை நடத்தினால் நாளை ஆட்காட்டிவெளி மற்றும் பண்டிவிரிச்சான் துயிலும் இல்லங்களை அந்தந்தப் பிரதேச சபைகள் பொறுப்பெடுப்பதை தவிர்க்க முடியாமல் போகும். இந்த இரு சபைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் கீழுள்ளன என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 15 ஆம் நாள் நடைபெற்ற நிகழ்வுகள் வேதனையளிக்கின்றன. ஒரு கட்சி முற்பகல் 10.10 இற்கு நிகழ்வு என்றது. சில நாட்களின் பின் இன்னொரு கட்சி காலை 09.30 இற்கு நிகழ்வு என்றது. இதில் அஞ்சலி என்பதை விட அடுத்தவனின் காலை வாருவதே முக்கியமானதாக கட்சிகளுக்குத் தெரிந்தது. மேலும் அங்கு நடைபெற்ற நிகழ்வுகள் உணர்வுள்ள தமிழர்களுக்கு கவலையளித்தன. திலீபன் உண்ணாவிரதமிருந்த காலத்தில் அவனைப் பார்த்திருந்த ஒரு சிலரைத் தவிர ஏனையோர்தான் சச்சரவில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மனதில் திலீபனின் நினைவு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை எமக்கு உணர்த்தியது.

இதில் சம்பந்தப்பட்ட ஒரு கட்சி அன்னை பூபதியின் நிகழ்விலும் இவ்வாறான கோளாறை ஏற்படுத்தியது. உண்ணாவிரதம் தொடங்குவதற்கு முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளருடன் சேர்ந்து அன்னை பூபதியின் சகோதரியை சுடரேற்ற வைத்து நாமே அன்னைக்கு முதலில் அஞ்சலி செலுத்தினோம் எனப் படம் காட்டியது.

ஓர் ஒழுக்கமான கீழ்ப்படிவுள்ள சிப்பாயே பின்னர் படையணிகளை சரியாக நெறிப்படுத்தும் தளபதியாக விளங்குவான் என்பது எமது தலைவரின் கூற்று. யூ.எஸ். ஹோட்டலிலும் மாகாண சபையிலும் திரு இ.ஆர்னோல்ட் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்த எமக்கு இவர் இந்நிகழ்வைப் பொறுப்பெடுப்பது திலீபனின் ஆன்மாவுக்கு செய்யும் துரோகமாகவே தென்படுகின்றது.

செப்ரெம்பர் 26 என்றாலே திலீபனின் நாளும் யாழ். கோட்டையும்தான் நினைவுக்கு வரும். அந்த நினைப்பே இல்லாமல்தான், தூபிக்குப் பக்கத்தில் ஜனசக்தி இன்சூரன்ஸ் சார்பில் பந்தல் போட்டு சினிமாப் பாடல்களை அலறவிட்டு நடைபெற்ற கொண்டாட்டங்களில் கலந்து கொண்டவர்தான் தற்போதைய யாழ். மேயர். மனம் பொறுக்காமல் யாரோ ஒருவர் இன்று திலீபனின் நினைவுநாள் என்று சுட்டிக் காட்டியிருக்கிறார் போல இருக்கிறது. சப்பாத்துடன் அஞ்சலி செலுத்தப் போன இவருக்கு ஒரு இளையவர்தான், அதைக் கழற்ற வேண்டும் எனவும் சுட்டிக் காட்ட வேண்டியிருந்தது. இந்த ரணம் எமது மனதில் இருந்து அகலவில்லை. அதற்குள் திலீபனின் நிகழ்வை இவர் பொறுப்பெடுப்பதாக அறிவிப்பதை எப்படிச் சகிப்பது.

அவரது அழைப்பில் ‘நான்’ என்ற பதம் வரும்போதெல்லாம் எமக்கு யூ.எஸ். ஹோட்டல்தான் நினைவுக்கு வருகிறது.

எனவே திலீபனின் நினைவு நிகழ்வு மட்டுமல்லாது எதிர்வரும் மாவீரர் நாள் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளிலும் அரசியல்வாதிகளோ, உள்ளூராட்சி மன்றங்களோ தலையிடாது அதன் உறுப்பினர்கள் சாதாரண பிரஜைகளாக கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம் – என்றுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com