சற்று முன்
Home / செய்திகள் / “அரசியல் யாப்பு பற்றிய அர்த்த விளம்பலானது உச்ச நீதிமன்றத்தினாலேயே இயம்பப்பட வேண்டும்” – டெனீஸ்வரன் வழக்கு குறித்து முதல்வர் அறிக்கை

“அரசியல் யாப்பு பற்றிய அர்த்த விளம்பலானது உச்ச நீதிமன்றத்தினாலேயே இயம்பப்பட வேண்டும்” – டெனீஸ்வரன் வழக்கு குறித்து முதல்வர் அறிக்கை

நீதிமன்றத்தின் அடிப்படை அந்தஸ்தே கேள்விக்கிடமாக்கப்பட்டிருக்கும் போது அந்த ஆட்சேபணைக்கு விடையளிக்காமல் தமக்கு அந்தஸ்து இருப்பது போல் இடைக்காலத் தடைக்கட்டளையை பிறப்பிப்பது சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது. எனத் தெரிவித்திருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஒரு வேளை தமக்கு உரித்துண்டு என்று தீர்மானம் எடுத்த பின்னரே இந்தத் தடைக்கட்டளை வழங்கப்பட்டதோ என்பதை தாம் அறிந்திருகவில்லை என்றும் ஆகவேதான் தீர்மானத்தின் பிரதி வராமல் எதுவும் கூறமுடியாது இருக்கின்றது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ப.டெனீஸ்வரனை மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் பதவிநீக்கியது செல்லது எனத் தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் பதவி நீக்கத்திற்கு எதிரான இடைக்காலத் தடை ஒன்றினைப் பிறப்பித்திருந்தது.

இவ்விடயம் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்களினால் வினவப்பட்டபோதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்,

ஊடகவியலாளர் கேள்வியும் அற்ற்கான முதலமைச்சரது பதிலும் வருமாறு,

கேள்வி – கௌரவ டெனீஸ்வரன் பதிந்த வழக்கின் தீர்ப்பு பற்றி பலரும் பலவிதமாகப் பேசுகின்றார்கள். சுருக்கமாக அதைப் பற்றிக் கூறமுடியுமா?

பதில் – மற்றவை மத்தியில் பின்வரும் நிவாரணம் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கௌரவ டெனீஸ்வரன் அவர்களால் வழக்குப் பதியப்பட்டது.அதாவது அரசியல் யாப்பின் உறுப்புரை 154 F (5) ன் பிரகாரம் நியமிக்கப்பட்ட அமைச்சர் ஒருவரை ஒரு மாகாணசபையின் முதலமைச்சருக்கு பதவி நீக்கம் செய்ய முடியுமா அல்லது அவ்வுரித்து அவரின் தற்துணிபுக்கு அமைய ஆளுநர் வசம் கையளிக்கப்பட்டுள்ளதா? என்பதே அவரின் கேள்வி.

வழக்கு வடமாகாணசபை முதலமைச்சரை 1ம் எதிர்வாதியாகவும் 2ம்,3ம்,4ம்,5ம் எதிர்வாதிகளாகத் தற்போதைய அமைச்சர்களையும் ஆறாவது எதிர்வாதியாக முன்னைய சுகாதார அமைச்சர் கௌரவ வைத்தியர் சத்தியலிங்கத்தையும் ஏழாவது எதிர்வாதியாக கௌரவ வடமாகாண ஆளுநரையும் குறிப்பிட்டு அவரின் வழக்கு பதியப்பட்டது. முன்னைய மூன்று அமைச்சர்களும் எதிர்வாதிகள் ஆக்கப்படாது கௌரவ வைத்தியர் சத்தியலிங்கம் மட்டுமே எதிர்வாதி ஆக்கப்பட்டிருந்தார்.

1ம் எதிர்வாதியாகிய முதலமைச்சர் சார்பில் தெரிபட்ட சட்டத்தரணிகளால் மூன்று பூர்வாங்க ஆட்சேபணைகள் எடுக்கப்பட்டிருந்தன. அவையாவன

ஒன்று, அரசியல் யாப்பின் படி உறுப்புரை 154 F (5) பற்றிய அர்த்தம் விளம்பலானது உறுப்புரை 125ன் படி உச்ச நீதிமன்றத்தினாலேயே தீர்மானிக்கப்பட வேண்டும் என்பது. இரண்டாவதாக விண்ணப்பத்துடன் பதியப்பட்ட சான்றாவணங்கள் அனைத்தும் (இரண்டைத் தவிர) முதலாவணங்களாக அமையாதிருந்தமை 1990ம் ஆண்டு வெளிவந்த மேன்முறையீட்டு நீதிமன்ற (மேன்முறையீடு நடபடிக்கை சம்பந்தமான) விதிகளில் காணப்படும் 3(1) விதியின் ஏற்பாடுகளுக்கு முரணாக அமைந்துள்ளமை.

மூன்றாவதாக வழக்கின் விடய வஸ்துவுக்கு தேவைப்படாத முன்னைய அமைச்சருள் ஒருவரை 6ம் எதிர்வாதியாக உள்நுழைத்தமை சட்டத்திற்குப் புறம்பானது. வழக்கிற்கு அத்தியவசியமான கட்சிக்காரராக சட்டம் ஏற்கும் நபர்களுள் 6ம் எதிர்வாதி அடங்கவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டது.

இவற்றைப் பரிசீலிக்கப் புகுந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் பூர்வாங்க விசாரணையின் இறுதியில் சில இடைக்காலக் கட்டளைகளைப் பிறப்பித்துள்ளதாக அறியப்படுகிறது. முதலாவது பூர்வாங்க ஆட்சேபணைக்குப் பதில் இறுத்த பின்னர் தான் இக் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டனவோ நாம் அறியோம். மேன்முறையீட்டு நீதி மன்றத்துக்கு இவ் வழக்கைக் கேட்க உரித்தில்லை என்றால் இடைக்காலத் தடைக்கட்டளை பிறப்பிக்கவும் உரித்தில்லை என்றாகிறது.

ஆகவே முதலாவது பூர்வாங்க ஆட்சேபணைக்கு தமக்கு உரித்து இருக்கின்றது என்று விடையளித்த பின்பே இடைக்காலத் தடைக்கட்டளையைப் பிறப்பிக்க முடியும். அவை பற்றி முழுமையாக அறிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானத்தின் பிரதி பெற வேண்டும். இதுவரையில் அது பெறப்படவில்லை. பிரதி பெற்ற பின்னரே மன்றின் தீர்மானம் பற்றிக் கூறலாம்.

ஆனால் எமது பூர்வாங்க ஆட்சேபணைகள் பற்றி சுருக்கமாகக் கூறலாம்.
முதலாவது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தினுள் இம்மனுவின் விடயவஸ்து அடங்காதென்பது. அரசியல் யாப்பு பற்றிய அர்த்த விளம்பலானது (Constitutional Interpretation) உச்ச நீதிமன்றத்தினாலேயே இயம்பப்பட வேண்டும் (உறுப்புரை 125). ஆகவே இம் மனுவைக் கேட்கும் அதிகாரத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் உடையதல்ல.

அமைச்சர்களை நியமிக்கும் மற்றும் பதவி இறக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கா ஆளுநருக்கா உண்டு என்பது அரசியல் யாப்பின் ஏற்பாடுகளின் கீழ் அர்த்த விளம்பல் வெளிப்படுத்துஞ் செயல். அதை மேன்முறையீட்டு நீதிமன்றம் அரசியல் யாப்பின் உறுப்புரை 125ன் கீழ் செய்ய முடியாது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இவ்வாட்சேபணைக்குப்பதில் தராது இடைக்கால நிவாரணங்களை வழங்கியிருந்தால் அது தவறாகவே அமையும்.

அடுத்து இவ் வழக்கில் பல ஃகசெற்றுக்கள் (Gazettes) குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றின் முறையான அசல் பிரதிகள் தாக்கல் செய்யப்படவில்லை. இது நடைமுறை விதிகளுக்கு முரணாக அமைகின்றது. சான்றாவணங்களின் அசல் பிரதிகள் கட்டாயமாகப் பதியப்பட வேண்டும். காரணம் வாய்மூலச் சாட்சியம் இல்லாது பொதுவாக ஆவணங்களை முன்வைத்தே இவ்வாறான உறுதிகேள் பேராணைகள் மற்றும் தடுப்புப் பேராணைகள் ஆகியன வழங்கப்படுகின்றன. எனவே ஆவணங்கள் அசலாக இருக்க வேண்டும்.

மூன்றாவது இவ் வழக்கின் முக்கிய விடய வஸ்துவுக்கு தொடர்பில்லாத முன்னைநாள் சுகாதார அமைச்சரை இவ் வழக்கில் உள்ளடக்கியமை ஒரு குறிப்பிட்ட சட்டத்தரணி அவர் சார்பில் உள்நுழைய வழி அமைத்துக் கொடுப்பதற்கே என்றுங் கூறலாம். விண்ணப்பதாரரின் வழக்கின் விடய வஸ்துவுக்கு பக்கபலம் சேர்ப்பதற்காக 6ம் எதிர்வாதியும் அவர்தம் சட்டத்தரணியும் அழைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் சம்பந்தமில்லாதவர்களை விண்ணப்பத்தில் கட்சிக்காரராக உள்நுழைப்பதை சட்டம் தடுக்கின்றது. அவ்வாறானவர்கள் “ஆரவாரிப்புக் கட்சிக்காரர்கள்” என்று அழைக்கப்படுவார்கள் (Cheer Parties).

ஆகவே 6ம் எதிர்வாதியின் பெயரை உள்நுழைத்தமை தவறு என்று கூறி அவரின் பெயரை நீக்குமாறு கோரப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் அடிப்படை அந்தஸ்தே கேள்விக்கிடமாக்கப்பட்டிருக்கும் போது அந்த ஆட்சேபணைக்கு விடையளிக்காமல் தமக்கு அந்தஸ்து இருப்பது போல் இடைக்காலத் தடைக்கட்டளையை பிறப்பிப்பது சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு வேளை தமக்கு உரித்துண்டு என்று தீர்மானம் எடுத்த பின்னரே இந்தத் தடைக்கட்டளை வழங்கப்பட்டதோ நாம் அறியோம். ஆகவேதான் தீர்மானத்தின் பிரதி வராமல் எதுவும் கூறமுடியாது இருக்கின்றது.

நன்றி

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com