சற்று முன்
Home / Uncategorized / அதிமுக அரசு வாட்ஸ்ஆப் அரசாக மாறியுள்ளது: விஜயகாந்த் கடும் தாக்கு!

அதிமுக அரசு வாட்ஸ்ஆப் அரசாக மாறியுள்ளது: விஜயகாந்த் கடும் தாக்கு!

மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கும் இடத்தில் உள்ள  அதிமுக அரசு முற்றிலும் முடங்கிப்போய், வாட்ஸ் ஆப் அரசாக மாறியுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாம் இயற்கையை அழிக்க, அழிக்க, இயற்கை விஸ்வரூபம் எடுத்து நம்மை அழிக்கிறது. இனியாவது விழித்துக்கொண்டு இயற்கைக்கு மாறாக எவ்வித செயலும் செய்யாமல், இயற்கையோடு ஒன்றிணைந்து மக்கள் வாழ்ந்திட அதிமுக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுதான் மக்கள் பிரச்சனைகளை தீர்க்கமுடியும். ஆனால் தமிழகத்திலோ, நீதிமன்றங்கள்தான் மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் சக்தியாக உருமாறியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிமுக அரசு முற்றிலும் முடங்கிப்போய், வாட்ஸ்ஆப் அரசாக மாறியுள்ளதே இதற்கு காரணமாகும்.
மழை வெள்ளம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் திறப்பு உள்ளிட்ட பிரச்னைகளில் உயர்நீதி மன்றமே தானாக முன்வந்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் அரசுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய நிலைமாறி, நீதிமன்றமே ஆக்கிரமிப்பாளர்களையும், அரசையும் எச்சரிக்கும் நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது.
மிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும், அரசும், அதிகாரிகளும், ஆளும் கட்சியினரும் உடந்தையாக இருந்தததால்தான், தற்போது ஆக்கிரமிப்புகள் பூதாகரமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, புதிய ஆக்கிரமிப்புகள் உருவாகாமலும், குப்பை கூளங்களும், திடக்கழிவுகளும் குவியாமல் நடவடிக்கை எடுத்து, இந்த விஷயத்தில் நேர்மையாகவும், நியாயமாகவும் அதிமுகஅரசு நடந்துகொள்ளவேண்டுமென்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
நேற்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், நீர்நிலையை ஆக்கிரமித்து அதன்மீது சாலையமைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக மனுதாரர் புகார் கூறியும், அதிகாரிகள் அதுகுறித்து நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையில் ஆக்கிரமிப்புகள் செய்யப்படவில்லையென உண்மைக்கு மாறான தகவல்களை கூறி இருப்பதாக நீதிமன்றம் கருதியதாலேயே, தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆதாரங்களில் கட்டடங்கள் கட்டுவதற்கு தடைவிதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நீர்நிலைகளை பாதுகாக்கவேண்டும் என்கின்ற அக்கறை அதிமுக அரசுக்கு இருந்திருந்தால், அரசு அதிகாரிகள் இதுபோன்று தவறான தகவல்களை உயர்நீதிமன்றத்திற்கு அளித்திருப்பார்களா? அரசே நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்துவருகிறதென்பது இதிலிருந்தே தெரியவருகிறது.
அதிமுக, திமுக, இரண்டு ஆட்சியிலும் நடைபெற்ற ஆக்கிரமிப்புகளை அகற்றும் வகையில், உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை அதிமுக அரசு நிறைவேற்றவேண்டும். அரசியல் சுய லாபத்திற்காகவும், வாக்கு வங்கி அரசியலுக்கும் இந்த ஆக்கிரமிப்புகளை நீண்ட காலமாக இரண்டு கட்சிகளும் பயன்படுத்தி வந்தன. அரசியல்வாதிகளின் துணையோடு பல தனிநபர்கள் நீர் நிலைகளை ஆக்கிரமித்து பிரம்மாண்ட கட்டிடங்களை கட்டியுள்ளனர். அதோடு மட்டுமல்ல இரண்டு கட்சிகளின் ஆட்சி காலத்தில் அரசாங்கத்தினுடைய பல்வேறு அலுவலகங்கள் மற்றும் அரசு பயன்பாட்டிற்காக பல நீர் நிலைகள் மூடப்பட்டு கட்டடங்களாகவும், மைதானங்களாகவும் மாறியுள்ளன. இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அரசிடம் உள்ள அதிகாரத்தின் மூலமே அகற்றி இருக்கலாம். அதை செய்யாமல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு அதை செயல்படுத்தும் கட்டாயத்திற்கு அதிமுக அரசு தள்ளப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வழக்கிலும் அதிமுக அரசு கால அவகாசம் கேட்டு, அந்த வழக்கையே நீர்த்துப்போக முயற்சி எடுக்கும். அதுபோன்று எவ்வித முயற்சியும் செய்யாமல், உயர்நீதிமன்றம் கொடுத்துள்ள நான்கு வார கால அவகாசத்திற்குள் அதன் உத்தரவை நிறைவேற்றவேண்டும். ஆக்கிரமிப்பை அகற்றுவதில் அரசு எவ்வித விருப்பு வெறுப்பும் இல்லாமல், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறும்போது 100 ஆண்டுகளுக்கு முன்புதான் சென்னையில் இதுபோன்று மழை பெய்ததாக கூறினார். அப்போது இதுபோன்ற சேதமோ, பாதிப்புகளோ ஏற்பட்டதாக தெரியவில்லை. அதிமுக, திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகுதான், நீர்நிலைகள் அரசாலும், அரசின் துணையுடன் தனி நபர்களாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, விதிகளைமீறி கட்டிடங்கள் கட்டப்பட்டது. அதனால்தான் சென்னை மாநகராட்சி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இவ்வளவு பெரிய பேரழிவு ஏற்பட்டது. அதுகூட இயற்கையாக அல்லாமல், செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது என்பதற்கான காரணங்கள் தற்போது வெளிவந்த வண்ணம் உள்ளது.
தமிழக மக்களையும், வருங்கால தலைமுறையினரையும் காக்கவேண்டும் என்றால், கடந்த காலங்களில் நீர்நிலைகளின் பரப்பளவும், கொள்ளளவும் எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலைக்கு நீர்நிலைகளை மீட்டெடுத்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வுகாண முடியும். எனவே அதிமுக அரசு எப்போதும், எல்லோரையும் ஏமாற்றுவதைப்போல, இதிலும் ஏமாற்றாமல் உண்மையாகவும், நேர்மையாகவும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நீர்நிலைகளின் கரையோரங்களில் வசித்துவந்த ஏழை, எளிய மக்களுக்கு, அவர்களின் தொழில் மற்றும் கல்வி பாதிக்காத வகையில், சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்புகளை அவர்கள் வசித்துவந்த பகுதிக்கு அருகாமையிலேயே அமைத்துத்தர வேண்டும்.
“அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்” என்பார்கள் அதுபோல நாம் இயற்கையை அழிக்க, அழிக்க, இயற்கை விஸ்வரூபம் எடுத்து நம்மை அழிக்கிறது. இனியாவது விழித்துக்கொண்டு இயற்கைக்கு மாறாக எவ்வித செயலும் செய்யாமல், இயற்கையோடு ஒன்றிணைந்து மக்கள் வாழ்ந்திட அதிமுக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கொழும்பின் புறநகர் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஒருவர் பலி!

கொழும்பின் புறநகர் பகுதியான பேலியகொடயில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com