சற்று முன்
Home / அரசியல் கட்டுரைகள் / ஈழத் தமிழனை முடக்கும் வியூகம் ! – டி.அருள் எழிலன்

ஈழத் தமிழனை முடக்கும் வியூகம் ! – டி.அருள் எழிலன்

‘புலிகளுக்கு ராணுவத் தீர்வையும் மக்களுக்கு அரசியல் தீர்வையும் வழங்கப்போவதாக’ அறிவித்துதான் வன்னி மீதான யுத்தத்தை முன்னெடுத்தது இலங்கை அரசு. ஆனால், புலிகளை ராணுவரீதியாக அழித்தொழித்தவர்கள்,  ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஈழத் தமிழர்களை அரசியல்ரீதியாக அழித்தொழித்திருக்கிறார்கள். அரசியல் தீர்வு, புனர்வாழ்வு என எஞ்சியிருந்த ஈழ மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கும்  சாவு மணியடிக்க, பாம்பும் கீரியும் இணைந்த கதையாக இலங்கையில் தேசிய அரசை அமைத்திருக்கிறார்கள். ராஜபக்ஷேவை ஓரங்கட்டிவிட்டு ரணில் விக்கிரமசிங்கே இலங்கையில் பிரதமர் ஆகியிருப்பதும் அவரோடு மைத்ரி இணைந்து தேசிய அரசு அமைத்திருப்பதும், ஈழத் தமிழர்களின் அரசியல் இருப்பை முக்கியத்துவமற்றதாக்கி இருக்கிறது. எப்படி? 

அதிகார முரண்பாடு!
ரணிலாக இருந்தாலும் ராஜபக்ஷேவாக  இருந்தாலும், அவர்களின் நிரந்தர எதிரி தமிழ் மக்கள்தான். தமிழ் மக்களை பயங்கரவாதிகளாகக் காட்டித்தான், சிங்கள மக்களிடம் தங்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள் இருவரும். 2002-ம் ஆண்டில் ரணில் பிரதமராகப் பதவியேற்றதும் ராணுவரீதியாக வெற்றிகளைக்  குவித்துக்கொண்டிருந்த பிரபாகரனுடன் சமாதானம் பேசினார். வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை, நார்வே தூதர் எரிக்சோல்ஹெய்ம் தலைமையில் வன்னியில் கையெழுத்தானது. ஆனால், அந்தச் சமாதானக் காலமே புலிகளுக்குத் தலைவலியாகவும் அமைந்தது. பல ஆண்டுகளாக இலங்கை ராணுவத்தால் நுழைய முடியாத வன்னிக்குள் புகுந்து அங்குலம் அங்குலமாக அந்தப் பகுதியை புவியியல்ரீதியாகப் படித்ததோடு, புலிகள் அமைப்பில் இருந்து கருணாவைப் பிளந்து, அதன் கட்டுமானத்தில் பாதிப்பையும் உண்டாக்கினார்கள். ரணிலின் அந்த ராஜதந்திரம் உண்டாக்கிய சேதங்களை உணர்ந்த புலிகள், மீண்டும் ரணில் பிரதமராகிவிடக் கூடாது என்பதாலேயே, 2005-ம் ஆண்டு தேர்தலைப் புறக்கணித்தனர். அதனாலேயே அப்போதைய தேர்தலில் வென்றார் ராஜபக்ஷே. ஆனால், அதே ராஜபக்ஷே முள்ளிவாய்க்கால் போரிலும் வென்றதுதான் துயரம்!
கடந்த 10 ஆண்டுகளாக ராஜபக்ஷேவை ரணிலாலும் வீழ்த்த முடியவில்லை; சந்திரிகாவாலும் துரத்த முடியவில்லை. அதனால் வேறு வழி இல்லாமலேயே அரசியல் எதிரிகளான ரணிலும் சந்திரிகாவும் இணைந்து, பொது எதிரியான ராஜபக்ஷேவை வீழ்த்தத் திட்டமிட்டார்கள். அதன் ஒரு வியூகமான சுதந்திரா கட்சியின் செயலாளர் மைத்ரி பால சிறிசேனவை, எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளராக்கி சிறுபான்மைத் தமிழ் மக்களின் வாக்குபலத்தோடு ஜனாதிபதி ஆக்கினார்கள்.  சிங்கள மக்களிடம் ஏகோபித்த ஆதரவோடு இருந்த ராஜபக்ஷேவை வீழ்த்த,  ஜனாதிபதி மைத்ரி தன் அதிகாரங்களைக் குறைத்துக்கொண்டார். அதாவது ராஜபக்ஷே அளவுகடந்து தனக்கு உருவாக்கிக்கொண்ட அதிகாரங்களைக் குறைத்ததன் மூலம், பிரதமர் பதவிக்கு முக்கியத்துவம் அளித்தார். ஜனவரியில் ஆட்சிக்கு வந்த மைத்ரி, ஏழே மாதங்களில்  நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்தார். ராஜபக்ஷேவின்  சுதந்திரா மக்கள் கட்சியில் இருந்துகொண்டே, ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்கேவை மறைமுகமாக ஆதரித்தார்.  எதிர்பார்த்தபடியே ரணில் வென்று பிரதமரானதும் வெளிப்படையாகவே மைத்ரியும் ரணிலும் இணைந்துவிட்டார்கள்.
ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பிரதமர் பதவியும் 19 அமைச்சர் பதவிகளும், மைத்ரியின் சுதந்திரா கட்சிக்கு ஜனாதிபதி பதவியும் 16 அமைச்சர் பதவிகளுமாக ஆட்சியைப் பங்கிட்டுக்கொள்கிறார்கள். தேர்தலில் தமிழ் மக்கள் வாழும் வடக்கு-கிழக்கில் 14 இடங்களை வென்று மூன்றாவது இடத்துக்கு வந்த தமிழ்க் கூட்டமைப்பு, ஆட்சியில் பங்கேற்கும் ஆசையில் இருந்தது. ஆனால், சிங்களப் பெருங்கட்சிகள் இரண்டும் இணைந்து அவர்களை எதிர்க் கட்சியாகக்கூட அமரவிடாமல் வெற்றுப் பார்வையாளராக்கிவிட்டன. இது, கடந்த  30 ஆண்டுகால இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் இல்லாத துயரம் என்கிறார்கள்  அரசியல் பார்வையாளர்கள்.
சோதனை, வேதனை!
நடந்து முடிந்துள்ள தேர்தலை ஒரு குறுக்குவெட்டுப் பார்வையுடன் அலசுகிறார்  யாழ்ப்பாணத்தில் வசிக்கும் குருபரன் குமாரவடிவேல்.
”இந்தத் தேர்தல் ரணிலுக்கும் மகிந்தவுக்கும் நடந்த தேர்தல் என்பதைவிட, ரணிலும் மைத்ரியும் இணைந்து ராஜபக்ஷேவை எதிர்கொண்டார்கள் என்பதுதான் சரி. ‘இந்தத் தேர்தலில்தான் நடுநிலை வகிக்கப்போகிறேன்’ என மைத்ரி பால சிறிசேன அறிவித்ததன் மூலம் ரணிலுக்கே தனது ஆதரவு என சூசகமாகச் சொன்னார். இவ்வளவு பெரிய அணித் திரட்டல்கள் இருந்தும்கூட இன்னும் சிங்களர்கள் அதிகம் வாழும் தொகுதிகளில், பொலன்னறுவைத் தவிர்த்து ஏறத்தாழ தனிச் சிங்களப் பெரும்பான்மை மாவட்டங்கள் அனைத்திலும் வெற்றிபெற்றது ராஜபக்ஷேதான். இந்த நிலையில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான பெரும்பான்மை ராஜபக்ஷேவுக்குக் கிடைக்காததற்குக் காரணம், மைத்ரி, ரணிலை ஆதரித்ததும் இதுவரை ராஜபக்ஷேவை ஆதரித்த ‘ஹெல உறுமய’வும் ரணிலுக்கு ஆதரவு வழங்கியதுமே. குறிப்பிடத்தக்க அளவு சிறுபான்மை இனங்களைக் (மலையகத் தமிழர், முஸ்லிம்) கொண்ட மாவட்டங்களில் ஐ.தே.க பெரும் வித்தியாசத்துடன் வென்றுள்ளது. என்றாலும் ரணிலுக்கு இது பிரமாண்ட  வெற்றியும் அல்ல; ராஜபக்ஷேவுக்கு இது மோசமான தோல்வியும் அல்ல. எப்போது வேண்டுமானாலும் ராஜபக்ஷே மீண்டும் முழுமையான பலத்தோடு எழலாம் எனும் நிலையில், அவரை அரசியல் அரங்கில் இருந்து அப்புறப்படுத்தவே எதிரும் புதிருமாக இதுவரை இருந்த, ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரா கட்சியும் இணைந்து தேசிய அரசை அமைத்திருக்கிறார்கள். ரணிலுக்கும் மைத்ரிக்கும் பிரத்யேகத் தேவைகள் உள்ளன. மைத்ரிக்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை முழுமையாக ராஜபக்ஷேவிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும். ரணில், குறைந்தது  10 ஆண்டுகளுக்காவது தென் இலங்கை அரசியலில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் எனத் திட்டமிடுகிறார்!
தமிழர்களைப் பொறுத்தவரையில் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு கட்சிகளும், இனப் பிரச்னை தீர்வு விஷயத்தில் ஒற்றை ஆட்சியை வலியுறுத்துபவை. போரின்போது இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் விஷயத்தில் வேறுபாடு இல்லாதவை. இது உண்மையில் சிங்கள தேசிய அரசாங்கம் என்றே கருதப்பட வேண்டும். இரண்டு கட்சிகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையில், இனப் பிரச்னை தொடர்பில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் எதுவும் இல்லை. இதுவே தமிழர்களுக்கு எந்த நன்மையும் விளையாது என்பதற்கான சான்று. ரணிலும் மைத்ரியும் இணைந்து அமைக்கும் இந்த அரசைத்தான் அமெரிக்காவும் இந்தியாவும் ஆதரிக்கும் நிலையில், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அடுத்து வரும் வருடங்கள் மிகவும் சோதனையான காலகட்டமாக இருக்கும். மகிந்த ராஜபக்ஷேவின் காலத்துக்கு கீழ் தமிழ் மக்கள் அனுபவித்த துயரங்களைப் போன்ற ஒரு காலமாகவே இது அமையும். ராஜபக்ஷேவின் ஆட்சி ‘வன்மையான’ சிங்கள பௌத்த ஆட்சி என்றால், ரணிலும் மைத்ரியும் இணைந்து நடத்தும் ஆட்சி ‘மென்’ சிங்கள பௌத்த ஆட்சியாக இருக்கும். நீண்டகாலப் பாதிப்புகளையும் பின்விளைவுகளையும்  தமிழர் தரப்பு அரசியலில் ஏற்படுத்தக்கூடிய சூழலே இப்போது இலங்கையில் உருவாகியிருக்கிறது” என நிதர்சனம் சொல்கிறார்.
விசுவாசமான மாற்றங்கள்!
கடந்த ஜனவரி மாதம் நடந்த தேர்தலின்போது தமிழ் மக்களின் வாக்குகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவும் ரணிலுக்கும் மைத்ரிக்கும் தேவைப்பட்டன. ராஜபக்ஷேவை மைத்ரி வீழ்த்தியதே, தமிழ் மக்களின் வாக்குகளை வைத்துதான்.  தமிழ் மக்களின் வாக்குகள்தான் ரணில் மற்றும் மைத்ரிக்குப் பலமாகவும் பலவீனமாகவும் இருந்தன. ஏனென்றால் தென்இலங்கை சிங்களர்களிடம் பயங்கரவாதம் மீண்டும் தலையெடுக்கிறது என ராஜபக்ஷே பிரசாரம் செய்தார்.  ஆனால், இப்போது தமிழ் மக்களும் தேவை இல்லை… அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பும் தேவை இல்லை எனும் நிலையில், இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை, அரசியல் தீர்வு உள்பட எது பற்றியும் பேசவேண்டிய அழுத்தமோ, தேவையோ இனி இலங்கை அரசுக்கு இல்லை.
ஆக, கையறு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இனி என்ன செய்யப்போகிறது என்பதுதான் கேள்விக்குறி?
ஈழத் தமிழர்களின் பார்வையாக, கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறார்  நிலாந்தன்.
”இலங்கையில் இப்போது நடந்திருக்கும் மாற்றங்கள் மேற்கு உலகும் இந்தியாவும் விரும்பிய விசுவாசமான மாற்றங்கள். எல்லா தரப்பிலும் தீவிரத்தன்மை உள்ளவர்கள்  தோற்கடிக்கப்பட்டு மிதவாதிகள் வென்றிருக் கிறார்கள். சிங்களர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் இரு கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்துவிட்டு, அதை ‘தேசிய அரசு’ என சொல்வதை  பிற இனங்கள் ஏற்றுக்கொள்ளாது. தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் இணைந்து அமைக்கும் அரசின் பெயர்தான் தேசிய அரசு. அமைந்திருக்கும் அரசு தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கடந்த காலங்களைவிட மைத்ரி ஆட்சிக்கு வந்த பிறகு சிவில் உரிமைகள் தொடர்பாக சிறிய அளவு முன்னேற்றம் வடக்குப் பகுதியில் காணப்பட்டது. இதை மேலும் உறுதிப்படுத்தினால் மட்டுமே, எதிர்காலத்தில் தமிழ் மக்களின் வாக்குகளை ரணில், மைத்ரி அணியினர் பெற முடியும். கூட்டமைப்புக்கும்கூட இப்படியான நெருக்கடிகள் இப்போது உருவாகியிருக்கின்றன!”
‘கடும் சவால்களுக்கு மத்தியில் கிடைத்துள்ள இந்த முடிவை ஏற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினராக அமர்வேன்’ என்றிருக்கிறார் ராஜபக்ஷே.  ஏழு மாதங்களுக்கு முன்பு அரசியல் தீர்வுக்குப் பாடுபடுவேன் என தமிழ் மக்களுக்கு வாக்குக்கொடுத்த ரணில் பதவியேற்ற கையோடு சொல்கிறார், ‘நாட்டைத் துண்டாட பயங்கரவாதிகளுக்கு இடம்கொடுக்க மாட்டோம்’. ‘பயங்கரவாதம்’ என ராஜபக்ஷே பாணியில் ரணில் அச்சுறுத்துவது தமிழ் மக்களின் ஆகக்குறைந்த ஜனநாயகக் கோரிக்கைகளை. ஈழத் தமிழர்கள் இன்னும் என்னவெல்லாம் கொடுங்கூற்றைக் கடந்து வர வேண்டுமோ?
(நன்றி – விகடன்)

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இரணைமடு அரசியல் – இரவிரவாக வரலாற்றை இடித்தழித்த மைத்திரி

கிளிநொச்சி மாவட்டத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இரணைமடுக் குளம் அந்த மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் தேசிய ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com