சற்று முன்
Home / அரசியல் கட்டுரைகள் / சம்பந்தர் ஒருசிங்கள எதிர்க்கட்சித் தலைவரைப் போலவா செயற்படப் போகிறார்? – நிலாந்தன்

சம்பந்தர் ஒருசிங்கள எதிர்க்கட்சித் தலைவரைப் போலவா செயற்படப் போகிறார்? – நிலாந்தன்

சம்பந்தர் எதிர்க்கட்சித் தலைவராகியதன் மூலம் சாதிக்கப் போவது என்ன? இக்கேள்விக்குரிய பதில் மற்றிருகேள்விகளில் இருந்தே தொடங்குகிறது. முதலாவதுகேள்வி, அவர் எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதற்கான உள்நாட்டுப் பின்னணிஎது? இரண்டாவது கேள்வி அவர்  எதிர்க்கட்சித் தலைவராக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் பிராந்தியமற்றும் அனைத்துலக பின்னணி எது?
முதலாவது கேள்வி. அவர் எதிர்க்கட்சித் தலைவராக ஏன் தெரிவுசெய்யப்பட்டார்? ஏனெனில்  யார் எதிர்க்கட்சியார் ஆளும் கட்சி என்று துலக்கமாகக் கூற முடியாத ஓர வித கலங்கலான நிலை நாடாளுமன்றத்தில் தோன்றியுள்ளது. சரி. அப்படி ஒரு நிலை தோன்றக் காரணம் என்ன?
காரணம் – ஜனவரி 08 ஆம் திகதி நிகழ்ந்த ஆட்சிமாற்றம்தான் அந்த ஆட்சி மாற்றமானது ஆளும் கட்சிக்கு எதிராக அக்கட்சி ஆட்களையே திருப்பியதால் ஏற்பட்டஒன்று.  ஆயின் அடுத்த கேள்வியைக் கேட்கலாம்;.
ஆட்சி மாற்றத்திற்குக் காரணம் என்ன? அல்லது அதற்கான தேவை என்ன?
யுத்த வெற்றிவாதம் தான் காரணம். யுத்தவெற்றிவாதமானது சீனவிரிவாக்கத்திற்குவழிகளை இலகுவாக்கிக் கொடுத்ததன் மூலம் தன்னை இலங்கைத்தீவில்நிரந்தரமாக ஸ்தாபித்துக்கொள்ளமுற்பட்டது. வெற்றிவாதத்தை அதன் பங்காளிகளை வைத்தே தோற்கடிக்க வேண்டிய தேவை அமெரிக்க இந்தியபங்காளிகளுக்கு ஏற்பட்டது. அதன் விளைவாக ஏற்;பட்டதுதான் இப்போதிருக்கும் நாடாளுமன்றம். அதாவது ஆளும் கட்சி எது? ஏதிர்க்கட்சி எது என்று கண்டுபிடிக்க முடியாத ஒருகலங்கலான நாடாளுமன்றம். இப்படிப்பார்த்தால் இப்போதிருக்கும் பிரச்சினைகள் எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம் யுத்த வெற்றிவாதம்தான்.
யுத்த வெற்றிவாதம் என்றால் என்ன? அதுபேரினவாதத்தின் 2009 ஆம்  ஆண்டிற்குரிய புதியவடிவம். எனவே முதலாவது கேள்விக்குரிய விடையை பின்வருமாறு பொழிவாகச் சொல்லலாம்.  பேரினவாதத்தின் ஒருகட்ட உச்சவளர்ச்சியின் விளைவின்  விளைவே இப்போதுள்ள நாடாளுமன்றம் எனலாம். அதாவது சம்பந்தர் எதிர்க்கட்சித் தலைவராக வந்தமை என்பது  இலங்கைத் தீவின் ஜனநாயக மாண்பின்  வெளிப்பாடு அல்ல. மாறாக  இனவாதத்தின் விளைவாக கோறையாகிப் போன ஒரு  ஜனநாயகக் கட்டமைப்பின் விளைவே இது.
எனவே சம்பந்தர் எதிர்க்கட்சித் தலைவராகியமை என்பது பேரினவாதத்தின் விளைவின் விளைவுதான். சுpறலங்கா சுதந்திரக் கட்சியானது எதிர்க்கட்சியாகச் செயற்பட முடியாத அளவிற்கு குழம்பிப் போய்க் காணப்படுகிறது.  இதை இன்னொருவிதமாகச் சொன்னால் அது எதிர்க்கட்சியாகச் செயற்படும் பலத்தை இழந்து காணப்படுகின்றது. சரியாக 38 ஆண்டுகளுக்கு முன்னரும்  சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது எதிர்க்கட்சியாகச் செயற்பட முடியாத நிலை வந்தபோதே தமிழர் ஐக்கியவிடுதலைக் கூட்டணி எதிர்க் கட்சியாக தெரிவு செய்யப்பட்டது.
இவ்விரண்டு தெரிவுகளுக்குமிடையே சில ஒற்றுமைகளும் உண்டு. வேற்றுமைகளும் உண்டு.
முதலில் ஒற்றுமைகளைப் பார்க்கலாம். இரண்டு சந்தர்ப்பங்களிலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இயலாமையே தமிழ்த்தரப்புக்குச் சாதகமாக அமைந்தது. 1971இல் ஜே.வி.பி.யின் முதலாவது கிளர்ச்சியை சிறிமாவோ குரூரமாகநசுக்கினார்.  ஆதன் பின் 1975 இல் நடத்தியிருக்க வேண்டிய தேர்தலை இரண்டு ஆண்டுகள் ஒத்திவைத்தார்;. அவருடைய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாகக் கோபமும் விரக்தியுமுற்றிருந்த சிங்களவாக்காளர்களை ஜெயவர்த்தனா தன்வசப்படுத்தினார். அதுகெடுபிடிப் போர்க்காலம்.  திறந்த சந்தைப் பொருளாதாரத்தின்  பிரதிநிதியாகக் காணப்பட்ட ஜெயவர்த்தனா சிறிமாவோவை மிகமோசமாகத் தோற்கடித்தார்.  ஜே.வி.பியின் முதலாவது கிளர்ச்சி நசுக்கப்பட்டுசரியாக ஆறு ஆண்டுகளின் பின் நடந்ததேர்தல் அது.
1977 இல்  ஜயவர்த்தனாமிகப் பெரும் வெற்றியைப் பெற்றார் அவருக்கு 140 ஆசனங்கள் கிடைத்தன. ஆனால்  சிறிமாவோ பண்டாரநாயக்காவிற்கு எட்டு ஆசனங்களேகிடைத்தன. ஆதேசமயம் தமிழர் ஐக்கியவிடுதலைக் கூட்டணிக்கு  18 ஆசனங்கள் கிடைத்தன.  இது முதலாவது ஒற்றுமை.
இரண்டாவது ஒற்றுமை.  இரண்டு மாற்றங்களின் பின்னணியிலும் மேற்குநாடுகளே இருந்தன என்பது.  ஜெயவர்த்தனா மேற்கின் செல்லப்பிள்ளை.  அவருடைய மருமகனான ரணில் இப்பொழுது மேற்கின் கருவியாகி மாற்றத்தை முன்னெடுக்கிறார்.  இரண் ;தல் வெற்றிகளின் போதும் மேற்குநாடுகளின் நிகழ்;ச்சிநிரல்களே பெருமளவிற்கு வெற்றிபெற்றன. இவை ஒற்றுமைகள். இனி வேற்றுமைகளைப் பார்க்கலாம்.
1977 இல் இரு துரவ ஒழுங்குநிலவியது. ஆப்பொழுது இந்தியாவும் அமெரிக்காவும் பூகோளப் பங்காளிகள் அல்ல. ஆனால் இப்பொழுது மல்ரிபிளக்ஸ் உலக ஒழுங்கு உருவாகிவருகிறது.  இதில் இந்தியாவும் அமெரிக்காவும் பூகோளப் பங்காளிகளாகக் காணப்படுகின்றன.  இது ஒருவேற்றுமை.
அடுத்தது, ஆளும் கட்சிஎது? எதிர்க்கட்சி எது என்று கண்டுபிடிக்க முடியாத ஒருகட்சிச் சூழல் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ளது.
மூன்றாவது– 1977 இல்  தமிழர் தரப்பு நாடாளுமன்றுக்குள் நுழைந்த போது பெற்றிருந்தமக்களாணைக்கும்  இப்போது கிடைத்திருக்கும் மக்களாணைக்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு. 1977 இல்  தேர்தல் நடப்பதற்கு ஓராண்டுக்குமுன்பு 1976 இல் வட்டுக் கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றபபட்டது. ஒற்றையாட்சிக்கு எதிராக பிரிவினை கோரும் அத்தீர்மானத்தை முன்வைத்து பெறப்பட்ட மக்களாணையோடுதான் அமிர்தலிங்கம் நாடாளுமன்றத்திற்குள் வந்தார். அப்பொழுது சம்பந்தர் ஒருநாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.  அப்பொழுது தமிழர் ஐக்கியவிடுதலைக் கூட்டணிக்குக் கிடைத்த மக்களாணையானது மிகத் துலக்கமானது, மிகக் கூரானது. காலமுக்கியத்துவம்மிக்கது. அப்படி ஒரு மக்களாணையோடு நாடாளுமன்றத்திற்குள் வந்த ஒரு கட்சி திட்டவட்டமான எதிர்ப்பு அரசியலையே முன்னெடுத்திருக்கமுடியும்.
ஆனால் இப்பொழுது நிலைமைகள் அவ்வாறல்ல. கடந்த ஆறு ஆண்டுகளாக கூட்டமைப்பின் உயர் பீடமானது படிப்படியாக ஒருவித இணக்க அரசியலை நோக்கியே நகர்ந்துவருகின்றது. எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றபின் சம்பந்தர் பி.பி.சி சிங்கள சேவைக்கு வழங்கிய பேட்டியில் திட்டவட்டமாக அதை அழுத்திக் கூறுகிறார். ஒருசிங்கள அரசியல்வாதி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் எப்படி நடந்து கௌ;வாரோ அப்படியே தானும் நடந்துகொள்ளப் போவதாக அவர் கூறுகிறார். ஓற்றையாட்சிக்கு எதிராக பிரிவினை கோரப் போவதில்லை எனவும் அவர் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்.
இப்படிப் பார்த்தால் தமக்குக் கிடைத்த மக்களாணையை 1977 இல்  அமிர்தலிங்கம் வியாக்கியானப் படுத்தியதற்கும் இப்பொழுது சம்பந்தர் வியாக்கியானப் படுத்துவதற்குமிடையே பெரிய வேறுபாடுகள் உண்டு.  இது மூன்றாவது வேற்றுமை.
நான்காவது வேற்றுமை–1977 இல்  ஆயுதப் போராட்டம் தலைமறைவாக இருந்தகால கட்டத்தில் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித்  தலைவரானார். இப்பொழுது அந்த ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு ஆறாண்டுகள் ஆகின்றன.  கடந்த ஆறு ஆண்டுகளில் ஆயுதப் போராட்டத்தின் விளைவாக இனப்பிரச்சினை முன்னெப்பொழுதையும் விட அதிகரித்த அளவில்  அனைத்துலக மயப்பட்டிருக்கும் ஒருஅரசியல சூழலில் சம்பந்தர் புதியபொறுப்பை ஏற்றிருக்கிறார்.
இவை யாவும்  1977 இற்கும் 2015 இற்கும் இடையிலான ஒற்றுமை வேற்றுமைகள். இனி இக்கட்டுரையின் தொடக்கத்தில் கேட்கப்பட்ட இரண்டாவது கேள்விக்குப் போகலாம். அதாவது எத்தகைய ஓர்  அனைத்துலக மற்றும் பிராந்திய சூழலின் பின்னணியில் சம்பந்தர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்? இது தொடர்பில் ஏற்கனவே இக்கட்டுரையில் ஓரளவு விவாதிக்கப்பட்டுவிட்டது. அமெரிக்க  இந்திய கூட்டுப் பங்காளிகள் இலங்கைத் தீவில் ஆட்சி மாற்றத்தை அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்குப் பலப்படுத்த முற்படுகிறார்கள். ஆட்சிமாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் புதியவலுச் சமநிலையை நாட்டுக்குள் இருக்கக் கூடிய எந்த ஒருதரப்பும் குழப்பிவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வோடு காய்கள் நகர்த்தப்படுகின்றன.
சிங்களமக்கள் மத்தியில் உள்ள இனவாத சக்திகளோ அல்லது தமிழ் மக்கள் மத்தியில் உள்ள இலட்சியப் பற்றுள்ள சக்திகளோ நிலைமைகளைக் குழப்பவில்லை என்றால் இப்போதிருக்கும் வலுச்சமநிலை பெருமளவிற்குத் தளம்பாது. தென்னிலங்கையில் இனவாதிகளுக்குத் தலைமைதாங்கக் கூடிய மகிந்தவை ஏற்கனவே ஒருகட்டம் வரை முடக்கியாயிற்று.  போர்க்குற்றம் தவிர மற்றொல்லாக் குற்றங்களையும் சுமத்தி  ராஜபக்ஸ குடும்பத்தவர்களை ஒருவிதபீதியில் வைத்திருப்பதற்கான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதாவது நாடாளுமன்றத் தேர்தலின் பின் ராஜபக்ஸ சகோதரர்கள் முன்னெப்பொழுதையும் விட கூடுதலாக தற்காப்பு நிலைக்குச் செல்லத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
ராஜபக்ஸ சகோதரர்களைத் தோற்கடிக்கும் வரையிலும ;தமிழ் மக்களின்    இழப்புக்களையும் காயங்களையும்  அனைத்துலக மயப்படுத்த வேண்டிய தேவை மேற்குநாடுகளுக்கு இருந்தது. ஆனால் இப்பொழு அத்தேவை  இல்லை என்பது மட்டுமல்ல அனைத்துலக விசாரணைப் பொறிமுறை என்றவொரு விவகாரத்தை முன்வைத்தே தெற்கில் உள்ள இனவாதசக்திகள் மறுபடியும் பலமடையக் கூடும் என்ற ஒர் அச்சம் அமெரிக்க இந்தியபங்காளிகள் மத்தியில் உண்டு. எனவே, இப்பொழுது அவர்களுக்குத் தேவை எவ்வளவுக்கு எவ்வளவு ஈழத்தமிழர் விவகாரத்தை அனைத்துலக மயநீக்கம் செய்யலாம் என்பதுதான். கடந்த சிலதசாப்தங்களாக குறிப்பிடத்தக்க அளவிலும் குறிப்பாககடந்த ஆறு ஆண்டுகளாக அதிகரித்த அளவிலும்  அனைத்துலக மயப்பட்டுவிட்ட ஒருவிவகாரத்தை பின்னோக்கிச் செலும் ஒரு பொறிமுறைக்கூடாக அனைத்துலக மயநீக்கம் செய்வது அல்லது உள்ளுர் மயப்படுத்துவது என்பது மேற்கத்தேய இந்தியப் பங்காளிகள் நினைப்பதைப் போல அவ்வளவு சுலபமானதுஅல்ல.
அனைத்துலக மயப்பட்டிருக்கும் ஈழத்திழ் விவகாரத்தை அனைத்துலக விசாரணைப் பொறிமுறை என்ற ஓர் இறுதி இலக்கை நோக்கி நகர்த்துவதன் மூலம்தான் ஈழத்தமிழர்கள் தங்களுக்குரிய நீண்ட எதிர்கால கவசங்களை பாதுகாத்துக் கொள்ளமுடியும். முன்பொருதடவை கூட்டமைப்பினர் தென்னாபிரிக்க பிரதிநிதிகளைச் சந்தித்தபொழுது அவர்களில் ஒருவர் பின்வரும் தொனிப்பட ஆலோசனை கூறினாராம்.
  அனைத்துலகநீதி உடனடியகக் கிடைக்குமோ இல்லையோ அப்படி ஒருவிசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை ஈழத் தமிழர்கள் தொடர்ந்தும் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும்.  அப்படிக் கொண்டுசென்றால் அதுஎப்பொழுதும் சிங்களபௌத்த இனவாதத்தின் தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தியைப் போல் இருக்கும் என்றதொனிப்பட.
ஆனால் ஒருசிங்கள எதிர்க்கட்சித் தலைவரைப் போலசெயற்படப் போவதாக சூழுரைத்திருக்கும் சம்பந்தர்  இனப் பிரச்சினையை அனைத்துலக மயப்படுத்துவாரா? அல்லது அனைத்துலக மயநீக்கம் செய்வாரா?  பண்ணாகத்தில் வைத்து வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றியபின் செல்வநாயகம் திருமலைக்குச் சென்றிருக்கிறார்.
  அங்கேசம்பந்தர் அவரிடம் நீங்கள் இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினால் மூவினச் சூழலுக்குள் வாழும் நாங்கள் எப்படி அதைஎதிர்கொள்வது? என்ற தொனிப்பட கேள்வி கேட்டவராம்.
அண்மையில் தென்னிலங்கையில் வாழும்  தொழிற்சங்கவாதியான ஒருநண்பர் சொன்னார்….. “அண்மைத் தசாப்தங்களில்  தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய எல்லா தலைவர்களோடும் ஒப்பிடுகையில் சிங்கள வெகுசனத்தால் ஆர்வத்தோடு பார்க்கப்படும் ஒரு தமிழ்த் தலைவராக சம்பந்தர்  உருவாகிவருகிறார்”….என்று.
எனவே எட்டாவது நாடாளுமன்றத்தின் மிக மூத்த அரசியல்வாதிகளில் ஒருவராகிய சம்பந்தர் இனப்பிரச்சினையை கூடிய மட்டும் அனைத்துலக மயநீக்கம் செய்வதன் மூலம்  அமெரிக்க இந்தியபங்காளிகளின் இதயங்களிலும்  சிங்கள பொதுசனங்களின் இதயங்களிலும்  வீற்றிருக்கமுயல்வாரா? அல்லது அனைத்துலக விசாரணை ஒன்றுக்குரிய நிலைமைகளைக் கூடியமட்டும் கனியச் செய்வதன் மூலம்  தனக்கு வாக்களித்தமக்களின் இதயங்களில்  வீற்றிருக்கமுயல்வாரா? 

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இரணைமடு அரசியல் – இரவிரவாக வரலாற்றை இடித்தழித்த மைத்திரி

கிளிநொச்சி மாவட்டத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இரணைமடுக் குளம் அந்த மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் தேசிய ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com