சற்று முன்
Home / செய்திகள் / வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் மீதான ஒழுக்காற்று பிரேரணை அவுட்

வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் மீதான ஒழுக்காற்று பிரேரணை அவுட்

(பதிவு செய்த நாள் – செப்டம்பர் 11, 2015, 11.45 PM) 

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் நடந்துகொண்ட விதம் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இன்று கொழும்பில் நடைபெற்ற தமிழரசுக் கட்சி கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கொண்டுவந்த பிரேரணை கடும் எதிர்ப்பு காரணமாக பிசுபிசுத்துப்போனது.

சட்டத்தரணி கே. வி. தவராசாவின் இல்லத்தில் காலை 11 மணிக்கு இந்த கூட்டம் ஆரம்பமானபோது பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ . சுமந்திரன் எழுந்து, தேர்தல் காலத்தில் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக செயற்பட்டார் என்றும் அதற்கான நிறைய ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவற்றின் அடிப்படையில், எப்படி முன்னர் வட மாகாணசபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன் மற்றும் ரவிகரன் ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அதேபோல விக்னேஸ்வரனுக்கு எதிராகவும் எடுக்கவேண்டும் என்று ஒரு பிரேரணையை முன்வைத்தார். இந்த பிரேரணையை பரம்சோதி வழிமொழிந்து பேசினார்.

மாவை சேனாதிராசாவும் சுமந்திரனின் பிரேரணையை ஆதரித்து முதலமைச்சர் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். ஆனால், இந்த பிரேரணைக்கு தனது எதிர்ப்பை தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தற்போதுள்ள சூழ்நிலையில் இத்தகைய ஒரு நடவடிக்கையை முதலமைச்சர் மீது எடுப்பது அனாவசியமானது என்றும் அது பிளவுகளுக்கே வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டார்.

தமிழரசுக் கட்சியின் உப தலைவரான பேராசிரியர் சிற்றம்பலமும் இந்த பிரேரணைக்கு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்தார். முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை என்று கடுமையாக வாதிட்ட அவர் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் அல்லாத விக்னேஸ்வரன் மீது எப்படி தமிழரசுக்கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பியதுடன், அப்படி செய்வதனால் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுடனும் ஆலோசனை நடத்திய பின்னரே அவ்வாறு செய்ய முடியும் என்று கூறினார்.

சர்வதேச விசாரணை கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில் முதலமைச்சர் சில காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கும் இந்த தருணத்தில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது சர்வதேச விசாரணைக்கு எதிராக தமிழரசுக் கட்சி செயற்படுவதாக அர்த்தப்படுத்தப்படும் என்றும் பேராசிரியர் சிற்றம்பலம் கூறினார்.

அத்துடன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவசியமற்ற கருத்துக்களை எந்த விளக்கமும் இன்றி வெளியிட்டுவருவதகவும் குற்றம் சாட்டினார்.

வட மாகாண சுகாதார அமைச்சரான சத்தியலிங்கமும் பிரேரணையை எதிர்த்து வாதிட்டார். இந்த சந்தர்பத்தில் குறுக்கிட்ட சுமந்திரன், கனடாவில் சென்று நிதி சேகரிப்பதற்கு கேட்டதற்கு கூட முதலமைச்சர் மறுத்துவிட்டதாக கூறினார்.

இதற்கு பதிலளித்த சத்தியலிங்கம், இது பற்றி முதலமைச்சர் தன்னிடம் பிரஸ்தாபித்திருப்பதாகவும் , “நிதிகளை வசூலித்துவிட்டு இவர்கள் கணக்கு காட்டுவதில்லை” என்பதாலேயே நிதி சேகரிப்பதற்கு தான் செல்லவில்லை என்று அவர் குறிப்பிட்டதாக கூறினார்.

பொதுமக்களை தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று முதலமைச்சர் விடுத்திருந்த அறிக்கையில் ” உங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வாக்களியுங்கள்” என்று அவர் குறிப்பிட்டிருந்ததை தமிழரசுக்கட்சியின் வீட்டு சின்னத்துக்கு வாக்களிக்கவேண்டாம் என்றே முதலமைச்சர் உண்மையில் குறிப்பிட்டிருந்ததாகவும் சுமந்திரன் இந்த கூட்டத்தில் அர்த்தப்படுத்தி இருந்தார்.

இந்த தீர்மானத்துக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, கூட்டத்துக்கு தலைமை தாங்கிய சம்பந்தன், இந்த விடயத்தை விட்டுவிடுமாறும் தான் முதலமைச்சருடன் இதுபற்றி கதைப்பதாகவும் கூறினார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com