சற்று முன்
Home / பிரதான செய்திகள் / தமிழ் ஊடகவியலாளர்களின் கொலைகளும் விசாரிக்கப்பட வேண்டும்

தமிழ் ஊடகவியலாளர்களின் கொலைகளும் விசாரிக்கப்பட வேண்டும்

(10.10.2015) உலகில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படும் சூழல் தொடர்பான சிபிஜே- என்ற ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழுவின் இம்முறை அறிக்கையில் இலங்கை 6-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இலங்கை 4-வது இடத்தில் இருந்தது.
இந்த ஆண்டு முதலிடத்தில் சோமாலியாவும் இரண்டாவது இடத்தில் இராக்கும் உள்ளன. சிரியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கொள்ளமுடியாது என்றும் 2009-ம் ஆண்டில் போர் முடிந்த பின்னர் அங்கு எந்தவொரு ஊடகவியலாளரும் அவரது தொழிலுக்காக கொல்லப்படவில்லை என்பதற்காகவே 4-வது இடத்தில் இருந்த இலங்கை 6-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது என்றும் சிபிஜே கூறியுள்ளது.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை மற்றும் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஆகியோரின் வழக்கு விசாரணைகளுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றவுடன் கூறியிருந்தமையையும் சிபிஜே சுட்டிக்காட்டியிருக்கிறது.
கடந்த மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்துடன் ஒப்பிடும்போது தற்போது இலங்கை ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தில் ஓரளவு முன்னேற்றம் தெரிவதாக இலங்கையின் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உறுப்பினரும் தினக்குரல் வார-இதழின் ஆசிரியருமான பாரதி ராஜநாயகம் தெரிவித்தார்.
ஆனால், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்றும் பாரதி ராஜநாயகம் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரகீத் எக்னெலிகொட ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும் கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.
‘நிமலராஜன் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டார், சிவராம் கொழும்பில் கொல்லப்பட்டார், நடேசன் மட்டக்களப்பில் கொல்லப்பட்டார்…இந்த சம்பவங்கள் தொடர்பில் எந்த விதமான விசாரணைகளும் புதிய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்படவில்லை என்பது உண்மை’ என்றார் தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினர் பாரதி ராஜநாயகம்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com