சற்று முன்
Home / பிரதான செய்திகள் / அரசியல் கைதிகளை விடுதலை செய்வதுதான் உண்மையான நல்லிணக்கம் – தமிழ் சிவில் சமூக அமையம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதுதான் உண்மையான நல்லிணக்கம் – தமிழ் சிவில் சமூக அமையம்

(15.10.2015) அரசியல் கைதிகளால் தமது விடுதலைக்காக நடத்தப்படும் உண்ணாநோன்பு போராட்டத்திற்கு தமிழ் சிவில் சமூக அமையம் தனது தார்மீக ஆதரவை வழங்குகின்றது. அவர்களது உறவுகளால் சமாந்திரமாக நடத்தப்படும் அடையாள உண்ணாநோன்பு போராட்டங்களுக்கும் ஏனைய போராட்டங்களுக்கும் எமது பங்களிப்பையும் ஆதரவையும் வழங்குகிறோம். 

சர்வதேச மன்னிப்பு சபையின் (Amnesty International) அரசியல் கைதிகள் எனும் பதத்திற்கான வரைவிலக்கணத்தை தமிழ் சிவில் சமூக அமையம் ஏற்றுக் கொள்கின்றது. அதன் பிரகாரம் எமது மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடியவர்களை, அப்போராட்டத்த்திற்கு உதவி செய்தவர்களை இலங்கை அரசின் குற்றவியல் சட்டங்கள்  குற்றவாளிகளாக கருதினாலும் அவர்களை தமிழ் மக்கள் அரசியல் காரணத்திற்காக கைது செய்யப்பட்டவர்களாகவே கருதுகிறோம். யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஆறு ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் அரசியல் கைதிகள் யாவரையும் உடனடியாக விடுதலை செய்வது உண்மையான நல்லிணக்கத்திற்கான முதற்படி என நாம் கருதுகிறோம். 
இலங்கையின் சட்டத்திற்கு உட்பட்டு நோக்கும் போது கூட சட்டத்திற்கு முரணாக (பயங்கரவாதத் தடை சட்டம் உட்பட) நீண்ட காலம் இவ்வரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட முடியாது என்பதை சுட்டிக் காட்டுகின்றோம். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரிவு 9 (1) இன் கீழ் 18 மாதத்திற்கே (வழக்கு தொடர முதல்) ஒருவரை தடுப்புக் காவலில் வைக்க முடியும். வழக்கு தொடராமல் தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்தல் சட்டத்திற்கு முரணான சிறை வைப்பாகும் (unlawful imprisonment). நீண்ட காலம் தடுப்பில் உள்ளவர்களுக்கு உடனடியாக வழக்கு தாக்கல் செய்ய அல்லது விடுதலை செய்ய சட்ட மா அதிபருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் அறிவுறுத்தல் வழங்குமாறு நாம் அரசாங்கத்தை கோருகின்றோம்.
அண்மையில் சந்திரிக்கா பண்டாரநயாக்க குமாரதுங்கவை கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தொடர்பான வழக்கில் 15 வருடங்கள் சிறையில் வாடிய பின்னர் குற்றமற்றவராக காணப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பெண்மணியின் அவல நிலையில் இன்னும் பலர் இருக்கக் கூடும் என்பது வெளிப்படை. வழக்கு தாக்கல் செய்யப்பட்ட சந்தர்ப்பங்களில் பிணையில் செல்வதற்கான சம்மதத்தை பயங்கரவாத தடை சட்டத்தின் பிரிவு 7 (2) க்கு கீழ் நியாயமான காரணம் இல்லாமல் சட்ட மா அதிபர் மறுக்கக் கூடாது என நாம் கோருகின்றோம். மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாது ஒழிப்பதற்கான சட்ட நகர்வுகளையும் எடுக்க நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
எழில் ராஜன் & குமாரவடிவேல் குருபரன் 
இணைப் பேச்சாளர்கள்
தமிழ் சிவில் சமூக அமையம்  

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com