சற்று முன்
Home / அரசியல் கட்டுரைகள் / தமிழர் முறையிட்டால் தேசத்துரோகம்!

தமிழர் முறையிட்டால் தேசத்துரோகம்!

மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தமிழ் மக்கள் சர்வதேச பொறிமுறையினை நாடியபோது அதனை தேசத்துரோகம் எனவும் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் முயற்சி எனவும் முன்னைய அரசாங்கம் கடுமையாக சாடி வந்தது.

எனினும், அந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகித்து தற்போது கூட்டு எதிரணியாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பாராளுமன்ற உரிமைகள் மீறப்படுவதாகத் தெரிவித்து வரிந்துகட்டிக் கொண்டு சர்வதேசத்தினை நாடப்போகின்றமை விசித்திரமாகவுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் தமது ஜனநாயக உரிமைகள் மீறப்படுவதாகத் தெரிவித்தே ஜெனீவாவில் அமைந்துள்ள அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தில்(Inter Parliamentary union – IPU) முறையிடப் போவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் அறிவித்துள்ளனர்.

அடிப்படையில்இ எந்தத் தரப்பாவது தம்முடைய உரிமைகள் மீறப்படுவதாக உணர்ந்தால் அதற்கு விசாரணை கோருவதை தடுப்பது நியாயம் இல்லை. அந்த வகையில் ஒருதரப்பினர் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாகக் கருதினால், அதற்காக உள்நாட்டு பொறிமுறையினையோ அல்லது ஏற்ற சர்வதேச பொறிமுறைகளையோ நாடுவதில் தவறு கிடையாது.

போர்க் காலத்திலும் அதன் பின்னரும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு பரிகாரம் தேடி தமிழ்த் தரப்புக்கள் ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபையின் பொறிமுறையின் கீழ் விசாரணைகளைக் கோரிவருகின்றன.

இவ் விசாரணைகளுக்கு கடும் எதிர்ப்பினையும் நிராகரிப்பினையும் ஆட்சியில் இருந்த போதுஇ மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கம் காட்டிவந்தது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்தினால் முன்வைக்கப்படுகின்ற குறைந்தபட்ச சிபாரிசுகளை ஏனும் நடைமுறைப்படுத்துவதை மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் நிராகரித்தே வந்தது. இலங்கையின் உள் விவகாரங்களில் சர்வதேச நடைமுறைகள் தலையிடுவது நாட்டின் இறைமையினை மீறும் செயலென்றே அவர்கள் குற்றச்சாட்டி வந்தனர்.

இதன் மூலம் சிங்கள சமூகத்தில் சர்வதேசத்திற்கு எதிரான நிலைப்பாடுகள் கூர்மையடையச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதுஇ இன்றும் சிங்கள மக்களிடம் சர்வதேச அனுசரணையுடன் நல்லிணக்கத்தினை கொண்டு செல்வதைக் கடினமாக்கியுள்ளது.

இவ்வாறான அரசியல் தொடர்ச்சி காரணமாகவும் மஹிந்த தரப்பின் விமர்சனங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் சர்வதேசத்துடன் நாடு இணைந்து பயணிப்பதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. உள்நாட்டில் மீறப்பட்ட மனித உரிமை விடயங்களை விசாரணை செய்ய சர்வதேச நீதிபதிகள் இணைத்துக்கொள்ளப்படமாட்டர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாரமும் தெரிவித்துள்ளார். இது சிங்கள மக்களையும் தலைமைகளையும் திருப்திப்படுத்துவதாகவுள்ளது. உள்நாட்டில் சர்வதேச வழிநடத்தல்கள் இருப்பதை நடைமுறை அரசாங்கத்தின் தோல்விக்குரிய விடயமாகவே பிரசாரப்படுத்தும் உத்தியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ சார்ந்த கூட்டு எதிர்க்கட்சியினரும் சிங்கள கடும்போக்குவாதிகளும் கொண்டுள்ளனர்.

உள்நாட்டில் சர்வதேசத் தலையீடுகள் காணப்படுவது நாட்டினை துண்டாடிவிடும். அது சிங்கள மக்களுக்கு சாதகமற்ற நீதியைக் கொடுத்துவிடும் என்ற அபிப்பிராயங்களை சிங்கள மக்களிடத்தில் கட்டியெழுப்பியதில் ராஜபக் ஷ அரசாங்கத்தின் பங்கு அதிகமாகவே இருந்தது.

இவ்வாறானதோர் சூழ்நிலையில், மஹிந்த ராஜபக் ஷ சார்பு அரசியல் நிலைப்பாட்டுடன் அவரை மீண்டும் பதவிக்குக் கொண்டு வருவோம் என கங்கணம் கட்டிச் செயற்படும் உறுப்பினர்களான நாமல் ராஜபக் ஷஇ உதய கம்மன்பிலஇ கெஹெலிய ரம்புக்வெல்லஇ ஜோன்ஸ்டன் பெர்னாண்டோஇ டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட தரப்பினரே ஜெனீவாவில் உள்ள அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்திற்கு சென்று தமது உரிமைகள் மீறப்படுவதாக முறையிடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்றத்தின் உள்ளும் வெளியிலும் தமக்கு அரசியல் ரீதியான அடக்கு முறைகளை நல்லாட்சி அரசாங்கம் முன்வைக்கின்றது என்ற வாதமே இவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

மேலும்இ தமது அணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி தரப்பட வேண்டும் என்ற கோரிக்கைஇ பாராளுமன்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நல்லாட்சி அரசாங்கத்தினால் அடக்கு முறைகள் இடம்பெறுகின்றன என்ற குற்றச்சாட்டுக்கள் இவர்களிடத்தில் பிரதானமாக உள்ளன. இதேவேளைஇ உள்ளூராட்சிசபைத் தேர்தல்கள் தொடர்பில் அரசாங்கம் பின்னடித்து வருகின்றமையினையும் குற்றச்சாட்டாக இவர்கள் உள்ளடக்குகின்றனர்.
அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியம் ஐக்கிய நாடுகள் சபைஇ சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்தே தொழிற்படுகின்றது. இது ஜனநாயகத்தை விரிவு படுத்துதல்இ சமாதானத்தினை ஏற்படுத்துதல், பெண்களின் பிரதிநிதித்துவம்இ மனித உரிமைகளின் நிலைத்தகு நிலையினை ஏற்படுத்துதல் என பாராளுமன்றங்கள் சார்ந்து இயங்குகின்றன.

இந்த அமைப்பிடம் கடந்த காலப்பகுதிகளிலும் இலங்கை தொடர்பில் வேறு முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில்இ இலங்கையில் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம்இ நடராஜா ரவிராஜ்இ தி.மகேஸ்வரன்இ டி.எம்.தஸாநாயக்கா ஆகியோர் தொடர்பில் நடைபெற்றுவரும் விசாரணைகளை இந்த அமைப்பு கண்காணிக்கின்றது.
இவ் விசாரணை பற்றி அரசாங்கம் உரியவாறு வெளிப்படுத்த வேண்டுமெனவும் இந்த அமைப்பு கோரிவருகின்றது. எனினும்இ இலங்கை உரியவாறு பாராளுமன்ற உறுப்பினர்களின் படுகொலை விடயத்தில் அதிக கரிசனைக்கு உரியதாக நடவடிக்கைகளை கடந்த ஆட்சியில் எடுக்கவில்லை. தற்போதே இது பற்றிய கைதுகளும் முன்நகர்வுகளும் நடைபெறுகின்றன.

அடுத்துஇ பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த சரத் பொன்சேகாவிற்கு 30 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போது அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் மனித உரிமைக்குழு விசாரணைகளை அவதானித்தே வந்தது. மரணமடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தனவே இம் முறைப்பாட்டினை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றியத்திற்குக் கொண்டு சென்றிருந்தார். எனினும்இ அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கம் சரத் பொன்சேகா தொடர்பான முறைப்பாட்டை அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றியம் கவனத்தில் எடுக்கவில்லை என்றே கூறியது. ஆயினும்இ அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியச் செயலாளர் இன்ங்பேர்க் செக்வர்ஸ் அரசாங்கத்தின் அக்கூற்றை மறுத்து தாம் முறைப்பாட்டை ஏற்றுள்ளதாகத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கூட்டு எதிர்க்கட்சியினர் முறையிடப்போவதாக முன்வைக்கும் குற்றச்சாட்டில் பிரதானமாக எதிர்க்கட்சித் தலைவர் பதவி பற்றிய விடயம் உள்ளது. அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக உத்தியோகபூர்வமாக அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு வழங்க முடியாது என்பது ஏற்கனவே கூறப்பட்டு விட்டது. இவ்வாறான ஒரு நிலையில் அரசியல் ரீதியில் எதிர்க்கட்சியினராக தம்மைப் பிரகடனப்படுத்தி மஹிந்த தரப்பினர் இயங்குகின்றனர்.

அவர்கள் பிரதான எதிர்க்கட்சிக்குரிய அங்கீகாரத்தினைப் பெறுவது வெகுஜன அரசியலை திறம்பட நடத்துவதற்கான உத்தியாக உணர்கின்றனர்.

பாராளுமன்ற நடைமுறை ரீதியில் தமக்கு எதிர்க்கட்சித் தலைமை கிடைக்கவில்லை என்பதை மறுத்து அவ்வாறு தாம் நிராகரிக்கப்பட்டமை கூட அரசியல் பழிவாங்கல் என சிங்கள மக்களிடத்தில் வியாக்கியானப்படுத்த முயற்சிக்கின்றனர்.

அதன் மூலம் அரசியல் அனுதாபம் அதிகரிக்கும் எனவும் நம்புகின்றனர். அதற்காகப் பாடுபடுகின்றனர்.
இந்த இடத்தில்இ மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்ற கோஷத்துடன் களம் இறங்கியுள்ள மஹிந்த தரப்பினர்இ எதிர்க்கட்சித் தலைவர் பதவியினையும் இன்னும் ஒரு வகையில் இலக்கு வைத்து செயற்படுகின்றமை ஒரு முரண் நிலை என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றுக்கு அப்பால் தமிழ் மக்களுக்கு கடந்த ஆட்சிக் காலத்தில் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள்,சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், வெள்ளைவான் கடத்தல்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் படுகொலைகள் உள்ளிட்ட பாரதூரமான மனித உரிமை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேசத்திடம் முறையிடுவதை கடந்த அரசாங்கம் விரும்பவில்லை. அதனை அனுமதிக்கவும் இல்லை. தற்போது கூட்டு எதிர்க்கட்சியாகத் தம்மைப் பிரகடனப்படுத்தி தமது உரிமைகள் நசுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டினை முன்வைத்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்லஇ முன்னைய அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளராக இருந்தவர்.

இவர் வெளியிட்டு வந்த கருத்துக்களில்இ உள்நாட்டில் மீறப்பட்ட மனித உரிமைகளுக்காக சர்வதேச முறையீடுகளை கடுமையாக விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உதாரணத்திற்கு, கடந்த ஜூலை 2014 காலப்பகுதியில்இ மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமிக்கும் ஆணைக்குழு முன் சாட்சியமளிப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட இவர் தெரிவித்திருந்தார். கெஹெலிய ரம்புக்வெல்ல பதவியில் இருக்கும்போது, அனைத்துலக விசாரணையினை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அந்த விசாரணைக்கு இடமளிப்பதால் நாட்டின் இறைமை பாதிப்புக்கு உள்ளாகும் எனவும் தெரிவித்து வந்தவராவார்.

மேலும், ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் முன் பாராளுமன்ற உறுப்பினர் எவரும் சாட்சியமளிக்க முடியாது எனத் தெரிவித்திருந்தார். காரணம், பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் இறைமையைப் பாதுகாப்போம் என்றே உறுதிப்பிரமாணம் செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இவ்வாறாக சர்வதேசத்தின் பொறிமுறையினை தமிழ் மக்கள் விடயத்தில் நிராகரிக்கும் தரப்புக்கள் தமக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மாத்திரம் சர்வதேச அணுகுமுறை அவசியம் என்பது புதிரானது.

தமது உரிமைகள் மீறப்படுகின்றன எனக் கருதும் போது அதற்கு நிவாரணம் தேடி வெளியுலக அமைப்புக்களை நாடுவதற்கு முயற்சிக்கின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாக்கின்ற அமைப்பிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்ல முடியுமாயின் மக்கள் தமக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்காக தங்கள் நாடுகள் கைச்சாத்திட்டுள்ள சமவாயங்களின் பிரகாரம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையினை நாடுவது தேசத்துரோகமாகவும் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் முயற்சியாகவும் பார்க்கப்பட்டது எந்த வகையில் நியாயமாகும்?

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com