சற்று முன்
Home / பிரதான செய்திகள் / வறுத்தலைவிளான் மீள் குடியேற்றம் – நேரடி றிப்போட்

வறுத்தலைவிளான் மீள் குடியேற்றம் – நேரடி றிப்போட்

அடிப்படை வசதிகள் இன்றி அரை நிரந்தர வீடுகளில் மீள் குடியேறியுள்ள வலி.வடக்கு வறுத்ததலை விளான் மக்கள்.

வலி.வடக்கு வறுத்தலை விளான் மக்கள் கடந்த 1986 ம் ஆண்டு இராணுவ நடவடிக்கையினால் முதல் முதல் தமது சொந்த இடங்களை விட்டு கையில் எடுத்து செல்ல கூடிய பொருட்களுடன் இடம்பெயர்ந்து இருந்தனர்.

அந்த இராணுவ நடவடிக்கை முடிவடைந்ததும் அப் பகுதி மக்கள் மீண்டும் 1989ம் ஆண்டு தமது சொந்த இடங்களுக்கு மீள திரும்பினார்கள். மீண்டும் ஆறு மாத காலம்  சொந்த இடங்களில் வாழ முதல் மீண்டும் பாரிய இராணுவ நடவடிக்கை முன்னேடுகப்பட்டதால் அப்பகுதியில் இருந்து மீண்டும் கையில் எடுத்து செல்ல கூடிய பொருட்களுடன்  சொந்த இடங்களில் இருந்து வெளியேறினார்கள்.

குறுகிய காலத்திற்கு தான் இந்த இடம்பெயர்வு என நினைத்து அன்றைய தினம் வெளியேறிய மக்கள் 25 வருடங்களுக்கு தமது சொந்த இடங்களுக்கு மீள திரும்ப முடியாது நலன்புரி நிலையங்களிலும், உறவினர்கள் நண்பர்கள் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் வசித்து வந்தனர்.

 நாட்டில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் கடந்த ஏப்பிரல் மாதம் 11ம் திகதி மீள தமது சொந்த இடங்களுக்கு செல்ல அப்பகுதி மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

தமது சொந்த இடங்களுக்கு மக்கள் சென்று பார்வையிட்ட போது அப்குதியில் மக்கள் வாழ்தமைக்கு அடையாளமே இல்லாது அவர்கள்  வாழ்ந்த பல வீடுகள் முற்றாகவும் சில வீடுகள் பகுதி ரீதியாகவும் இடித்து அழிக்கப்பட்டு மண் மேடாக காணப்பட்டது.

அத்துடன் வறுத்தலை விளான் கிராம சேவையாளர் து J/241 பிரிவில் வசித்த மக்களின் 46 ஏக்கர் காணிவிவசாய காணிகள் மற்றும் குடியிருப்பு காணிகளை உள்ளடக்கி மக்களின் 60 வீடுகளையும் கையகபடுத்தி பாரிய இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டு  இருந்தது.

அதனால் இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியில் குடியிருந்த மக்கள் 25 வருடத்திற்கு பின்னரும் மீள குடியமர முடியாது தொடர்ந்து கோப்பாய் பிரதேச செயலக பகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள புளியடி , இழுப்பையடி நலன்புரி நிலையங்களிலேயே வாழ்ந்து வருகின்றார்கள்.

‘ எமது காணிகளையும் விரைவில் விடுவித்து எம்மையும் எமது சொந்த இடங்களில் மீள குடியேற அனுமதிக்க வேண்டும்’  என வறுத்தலை விளானில் இருந்து இடம்பெயர்த்து கோப்பாய் பகுதியில் உள்ள நலன்புரி நிலையத்தில் வசித்து வரும் ஜேசுதாஸ் புஸ்பராணி என்பவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

வறுத்தலை விளானில் இராணுவ முகாம் அமைந்துள்ள 46 ஏக்கர் காணியினுள் தான் இவரது வீடும் காணியும் அமைந்துள்ளது அதனால் இவர் மீள குடியமர முடியாது தொடர்ந்து நலன்புரி நிலையத்திலையே வசித்து வருகின்றார்.

 புஸ்பராணி தொடர்ந்து கூறுகையில், கடந்த 25 வருடகாலமாக இடம்பெயர்ந்த சனம் எனும் பெயருடன் பல இன்னல்களுக்கு மத்தியில் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வந்துள்ளோம்.

எமது சொந்த மண்ணிலே வாழும் போது வசதியுடனையே வாழ்ந்தோம். இடம்பெயர்ந்து முகாம் களில் வசிக்கும் போது எம்மை இடம்பெயர்ந்த சனம் என கூறுவதுடன் எம்மை ஒரு விதமாக மற்றவர்கள் நோக்குவார்கள் அவை எமக்கு மிகுந்த மன வலிகளை தந்தது.

வலிகளுடனும் இன்னல்களுடனும் தொடர்ந்து எம்மை நலன்புரி நிலையங்களில் வாழ விடாது எம்மை எமது சொந்த இடங்களில் மீள் குடியேற்ற இந்த புதிய அரசாங்கம் விரைந்து  நடவடிக்கை எடுக்க வேண்டும்.என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.


அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர கோரிக்கை.

வறுத்தலை விளானில் மீள் குடியேறிய அரை நிரந்த வீடுகளில் வசிக்கும் மக்கள் தாம் அடிப்படை வசதிகள் இன்றி பல சிரமங்களுக்கு மத்தியிலையே வாழ்வதாக தெரிவிக்கின்றனர்.

வறுத்தலைவிளானில் கடந்த 25வருடங்களுக்கு பின்பு மீள குடியேறியுள்ள தாயொருவர் கூறுகையில், எமது குடும்பம் இப்பகுதியில் அந்த காலத்திலேயே கல் வீட்டிலை வசித்து வந்தனாங்க. இடம்பெயர்ந்து இங்கு வந்து பார்த்த போது எமது வீடு இருந்த அடையாளமே தெரியாது இடித்து அழிக்கப்பட்டு உள்ளது.

அரசாங்கம் அரை நிரந்த வீட்டு கட்டுவதற்கு உதவியுள்ளது. தற்போது அந்த வீட்டிலையே வாழ்கின்றோம். ஆனா அந்த வீட்டில் இரவுகளில் பயத்துடனையே படுத்து உறங்குகின்றோம்.

இரவில் மின்சாரம் இல்லை விளக்கு வெளிச்சத்திலையே வாழ்கின்றோம்.  பிள்ளைகள் விளக்கு வெளிசத்திலையே கல்வி கற்கின்றார்கள். அவர்கள் இடம்பெயர்ந்து இருந்த வேளை மின் விளக்கு வெளிச்சத்தில் படித்தவர்கள் தற்போது விளக்கு வெளிச்சத்தில் கற்க முடியாது அவதிபடுகின்றார்கள் அதனால் அவர்கள் கல்வி பாலாகி விடுமோ என எமக்கு பயமாக இருக்கின்றது.

இவ்வாறு பல இன்னல்களுக்கு மத்தியில் தான் எமது சொந்த மண்ணிலே குடியேறியுள்ளோம். எமது அடிப்படை வசதிகளை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

வாழ்வாதார உதவி .

தமக்கு சுயதொழில் முயற்சிகளுக்கு உதவிகளை செய்து தருமாறும் அல்லது வாழ்வாதாரத்திற்கான உதவிகளை செய்து தருமாறு யுத்தத்தில் கணவனை இழந்த பெண்ணான மேரி எனும் பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

நான் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் வசித்து வந்த போது கூலி வேலைக்கு சென்றே எனது குடும்பத்தை நடத்தினேன். தற்போது எமது சொந்த மண்ணிலே குடியேறியுள்ளதால் வேலையின்றி வாழ்வாதரமின்றி கஷ்டபடுகின்றேன். 

கூலி வேலைகள் இப்பகுதியில் இல்லாததால் யாழ்.நகரை அண்டிய பகுதிகளுக்கே செல்ல வேண்டிய நிலையில் உள்ளேன். இடம்பெயர முன்னர் இப்பகுதியில் இருந்த பல கூலி தொழிலாளிகள் தையிட்டி பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கே ஆண்களும் பெண்களுமாக கூலி வேலைகளுக்கு செல்வோம்.

தற்போதும் தையிட்டி பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ளதனால் எமதுக்கான வேலைகளை தேடி நாம் நகரை அண்டிய பகுதிகளுக்கே செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம்.

அதனால் இப்பகுதியில் வாழும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பெரிதும் வாழ்வாதாரம் இன்றி கஷ்டங்களை எதிர்நோக்கு கின்றார்கள்.அவர்களுக்கான சுய தொழில் முயற்சிக்கு உதவிகளையோ வாழ்வாதார உதவிகளையோ செய்து தருமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

மாற்றத்தை ஏற்படுத்துவோம் என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த 6300 ஏக்கரில் 1000 ஏக்கர் நிலப்பரப்பினை விடுவித்து மக்களை மீள் குடியேற்றி விட்டோம் என கூறினாலும், 25 வருடகாலமாக இன்னல்களுடனும் துன்பங்களுடன் வாழ்ந்த இந்த மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வில்லை 

மாற்றத்தை ஏற்படுத்துவோம் என கூறிய இந்த அரசாங்கம் இந்த மக்களின் வாழ்வில் எப்போது மாற்றத்தை ஏற்படுத்தும் ???

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com