சற்று முன்
Home / செய்திகள் / பிகாரில் லாலு- நிதிஷ் மெகா கூட்டணி 179 இடங்களை கைப்பற்றியது.

பிகாரில் லாலு- நிதிஷ் மெகா கூட்டணி 179 இடங்களை கைப்பற்றியது.

இந்தியாவில் பெரும் பரபரப்புடன் எதிர்பார்த்த பிகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு வருகின்றன. பாஜகவின் மதவாத அரசியலுக்கு மரண அடி கொடுத்த பிகார் மக்கள் நிதிஷ்குமார் தலைமையிலான மகா கூட்டணிக்கு 178 இடங்களை அளித்துள்ளனர். பாஜக தலைமையிலான கூட்டணி வெறும் 58 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.

மாநில சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 12 ஆம் தேதி முதல் கடந்த 5 ஆம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளிலும் 272 பெண்கள் உள்பட 3,450 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஆட்சியை கைப்பற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், லல்லு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகள் கொண்ட மகா கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 6 கோடியே 68 லட்சம் வாக்காளர்களில் 56.80 சதவிகிதம் பேர் வாக்களித்திருந்தனர்.

வாக்குப்பதிவு முடிந்ததும், 62,780 மின்னணு இயந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

பிகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 39 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. மூன்றடுக்கு கொண்ட பலத்த பாதுகாப்புடன் 14 ஆயிரத்து 580 பேர் வாக்குக்களை எண்ணினார்கள். முதலில் தபால் வாக்குகளை எண்ணி முடித்து விட்டு, பிறகு முகவர்கள் முன்னிலையில் மின்னணு இயந்திரங்களில் உள்ள ‘‘சீல்’கள் அகற்றப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடந்தது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்புகளும், வாக்குப்பதிவு தினத்தன்று நடத்தப்பட்ட வாக்கு கணிப்புகளும் மாறுபட்ட தகவல்களை வெளியிட்டன. இதனால் பிகாரில் ஆட்சியை கைப்பற்றப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு இன்று காலை முதலே நாடெங்கும் நிலவியது.

காலை 8.15 மணிக்கு பிகார் தேர்தல் முன்னிலை நிலவரம் வெளியாகத் தொடங்கியது. முதல் தொகுதி முன்னிலை நிலவரத்தில் பாஜக வேட்பாளர் முன்னிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அடுத்தடுத்த முன்னிலை நிலவரங்களும் பாஜகவுக்கு சாதகமாக வந்தன. 9 மணிக்கு 83 தொகுதிகள் முன்னிலை நிலவரம் தெரிந்தது.

அதில் 55 தொகுதிகளில் பாஜகவும், 21 தொகுதிகளில் மகா கூட்டணியும் முன்னிலை பெற்றிருந்தன. இதனால் மகிழ்ச்சி அடைந்த பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடிக்க தொடங்கினார்கள்.

9.30 மணிக்கு முன்னிலை நிலவரத்தில் மாறுபட்ட தகவல்கள் வெளியானது. இரு கூட்டணிகளும் மாறி, மாறி முன்னிலைப் பெற்று வந்தன. இதனால் தொலைக் காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் வெவ்வேறு விதமாக வெற்றி தகவல்கள் வெளியிடப்பட்டது.

10 மணியளவில் 243 தொகுதிகளின் முன்னிலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்போது நிதிஷ்குமார் தலைமையிலான மகா கூட்டணி, பாஜக கூட்டணியை முந்தியது. மகா கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்றது. பாஜக கூட்டணி 88 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று பின் தங்கியது.

பிகாரில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் வேண்டும். நிதிஷ்குமாரின் மகா கூட்டணி 178 இடங்களில் முன்னிலை பெற்றதால், அந்த கூட்டணி பிகாரில் ஆட்சியைப் பிடிப்பது உறுதியானது.

பாஜக கூட்டணி 58 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றது. இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டதும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் தொண்டர்களிடையே உற்சாகம் கரை புரண்டோடியது. அவர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வினியோகித்தும் வெற்றியைக் கொண்டாடினார்கள்.

மூன்றாவது முறையாக நிதிஷ்குமார் மீண்டும் பிகார் முதல்வர் ஆகிறார். வெற்றி தகவல்கள் குவியத் தொடங்கியதும் பாட்னாவில் உள்ள அவர் வீட்டுக்கு ஐக்கிய ஜனதா தளம் நிர்வாகிகள் வரத் தொடங்கினர்.

நிதிஷ்குமாருக்கு மாலைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். நாடெங்கும் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நிதிஷ்குமாரை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

நாளை அல்லது நாளை மறுநாள் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டீரிய ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பாட்னாவில் ஓரிரு நாட்களில் நடைபெற உள்ளது. அதன்பிறகு புதிய அரசு எப்போது பதவி ஏற்கும் என்பது தெரியவரும்.

கட்சிகள் வெற்றி பெற்ற இடங்கள் விவரம்:

மதச்சார்பற்ற மகா கூட்டணி:

ராஷ்டீரிய ஜனதாதளம் – 80

ஐக்கிய ஜனதாதளம் – 71

காங்கிரஸ் – 27

தேசிய ஜனநாயகக் கூட்டணி:

பாஜக – 53

லோக் ஜன சக்தி – 02

ராஷ்டீரிய லோக் சமதா கட்சி – 02

ஹிந்துஸ்தான் ஆவாம் மோர்ச்சா – 01

இதர கட்சிகள்:

சிபிஐ(எம்எல்) – 03

சுயேச்சைகள் – 04

இந்த தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக 24.4 சதம் வாக்குகளும், ராஷ்டீரிய ஜனதாதளம் 18.4 சதமும், ஐக்கிய ஜனதாளம் 16.8 சதமும், காங்கிரஸ் 06 சதமும், சிபிஐ(எம்எல்) 1.5 சதமும், லோக் ஜன சக்தி 4.8 சதமும், ஹிந்துஸ்தான் ஆவாம் மோர்ச்சா 2.3 சதமும் வாக்குகள் பெற்றுள்ளனர்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com