சற்று முன்
Home / செய்திகள் / அரசின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை – பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் – அம்னஸ்டி இன்டர்நேஷனல்

அரசின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை – பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் – அம்னஸ்டி இன்டர்நேஷனல்

amnty-15-1471284237யுத்தத்தின் பின்னரான இலங்கையில் புனர்வாழ்வு, பொறுப்புக் கூறல், மனித உரிமைகள் என்பவற்றை மேம்படுத்துவதில் கடந்த ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அரசு அனுசரணை வழங்கியதற்கு அமைவாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ள போதிலும், அவற்றில் வெளிப்படைத் தன்மை குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ள  அம்னஸ்டி இன்டர்நேஷனல் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி, பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தை மறுசீரமைக்க வேண்டும். ஐந்து மாணவர்கள் கடத்தி கொலை, ஆக்க்ஷன் பாம் நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் கொலை, மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கடத்தல், ஊடகவியலாளர்கள் கொலை போன்ற முக்கியமான மனித உரிமை மீறல் வழக்குகளில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது போன்ற விடயங்களையும் தனது அறிக்கையில் பரிந்துரைத்திருக்கின்றது.

அத்துடன், முக்கியமான விடயங்களில் காணப்படுகின்ற மந்தமான போக்கு பாதிக்கப்பட்டோரையும், மனித உரிமை ஆர்வலர்களையும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியிருக்கின்றது என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது.

இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப்பு கூறுவதற்கான நீதி, உண்மை, சீரமைப்பு முயற்சிகளில் பாதிக்கப்பட்டோரை மையமாக வைத்து செயல்படுமாறும் அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கோரியிருக்கின்றது.

செப்டம்பர் 13 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையின் 33-வது அமர்வில் சமர்ப்பிக்கவுள்ள அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் அறிக்கையிலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

ஐநா மனித உரிமைகள் புலன் விசாரணைக்கான உயர் ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்று ஒப்புக்கொண்டவாறு மனித உரிமை குற்றச்சாட்டுக்களைப் புலன் விசாரணை செய்வதற்காக சிறப்பு சட்டத்தரணியுடன் கூடிய ஒரு நீதிப்பொறிமுறை, உண்மை, நீதி, புனர்வாழ்வு, மீள்நிகழாமை என்பவற்றுக்கான ஆணையகம், காணாமல் போனோர் மற்றும் சீரமைப்பு என்பவற்றுக்குத் தனித்தனியான அலுவலகம் ஆகியவற்றை உருவாக்குவதில் போதிய அளவில் முன்னேற்றம் காணப்படவில்லை என்பதையும் சர்வதேச அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் அறிக்கை குறித்துக் காட்டியிருக்கின்றது.
பொறுப்பு கூறும் செயற்பாடுகளில் பொதுமக்களுடைய ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்ற போதிலும், அதற்கான பொறிமுறை குறித்து பொதுமக்களுக்குப் போதிய அளவில் தெளிவுபடுத்தப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையோடும் பாதுகாப்புடனும் இந்தப் பொறிமுறையில் பங்கேற்பதற்குரிய செயல்திறன் மிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என அம்னஸ்டி இன்டர்நேஷனல் வலியுறுத்தியிருக்கின்றது.
காணாமல் போனோர் தொடர்பாக நிறுவப்படவுள்ள அலுவலகத்தின் செயற்பாடுகள் மற்றும் விசாரணைகளில் வெளிப்படைத் தன்மை பேணப்பட வேண்டும். இது தொடர்பான விரிவான வரைவிலக்கணம், இந்த அலுவலகத்தின் விசாரணையாளர்களுக்குரிய அதிகாரங்கள், பாதிக்கப்பட்டவர்கள், சாட்சியாளர்களின் பாதுகாப்புக்கான ஒரு பிரிவு, காணாமல் போனோர் தொடர்பிலான சான்றிதழ், மீள்நிகழாமை குறித்த உத்தரவாதம் போன்றவை தொடர்பிலான இந்த அலுவலகத்தின் செயற்பாடுகள் தெளிவுபடுத்தப்படுதல் அவசியம் என்றும் அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் அறிக்கை வலியுறுத்தியிருக்கின்றது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com