சற்று முன்
Home / பிரதான செய்திகள் / தமிழ் மக்கள் பேரவை எனது ஆலோசனையை கேட்டால் ஒத்துழைப்பேன். – வீ.ஆனந்தசங்கரி

தமிழ் மக்கள் பேரவை எனது ஆலோசனையை கேட்டால் ஒத்துழைப்பேன். – வீ.ஆனந்தசங்கரி

தமிழ் மக்கள் பேரவை தனது ஆலோசனையை கேட்டு அதனை அரசியல் அணியாக மாற்றுவார்களாயின் தனது முழு ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அனுப்பிய ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு இருந்ததாவது, 
தமிழ் மக்களின் இனப்பிரச்சினை சம்பந்தமாக மிக அவதானமாகவும் புரிந்துணர்வோடும் செயற்பட வேண்டிய காலம் இதுவென நினைக்கின்றேன். 
தமிழ் தேசிய கூட்டமைப்பு மூலம் பெரும் சாதனைகளை புரியலாமென கருதி நான்கு கட்சிகள் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினோம். அதன் இயக்கத்துக்கு ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் பற்றி விபரிக்க தகுந்தநேரம் இதுவல்ல.
 இன்றுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகள் சில புறந்தள்ளப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏகபிரதிநிதிகளாக காலத்துக்காலம் ஒரு கட்சி ஏனையவற்றை புறந்தள்ளி செயற்படுகின்றது. இதன் விளைவாக இன்று பெயரளவில் மட்டுமே தமிழ் தேசிய கூட்டமைப்பு இயங்குகின்றதேயொழிய சில சந்தர்ப்பத்தில் ஒரு கட்சி மட்டும் தனியாகவும், வேறு சந்தர்ப்பத்தில் இரு கட்சி தலைவர்கள் இணைந்தும், பெருமளவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அணியின் தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டும் வந்துள்ளமையால், தமிழ் தேசிய கூட்டமைப்பு உண்டா இல்லையா? என்ற நிலைமைதான் இன்று ஏற்பட்டுள்ளது. 
இக்கட்டத்தில்தான் சகல தமிழ் அரசியல் கட்சிகளையும் இணைத்து ஒரு புதிய அணியை உருவாக்க உத்தேசித்து நல்லதொரு தலைமையை தேட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டிருந்தேன்.
 சிலர் திட்டமிட்டு இம்முயற்சியை தோல்வியடைய செய்துள்ளனர். ஆனால் இன்றைய அவசர சூழ்நிலையை உணர்ந்து வடமாகாண முதலமைச்சரின் தலைமையில் ஒரு புதிய அணியை உருவாக்கும் முயற்சியின் முன்னோடியாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையைகூட விட்டுக்கொடுக்க தயாராக இருந்தேன். 
முதலமைச்சர் அவர்கள் மிக கண்ணியமான முறையில் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாகட்டும் அதன்பின் தலைமை தாங்குவது பற்றி பரீசிலிக்கலாம் என்ற தொனியில் அறிக்கை விட்டிருந்தார். 
இந்த நேரத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனை இணைத்துக் கொண்டு ஒரு சிலர் சேர்ந்து முதலமைச்சரை தலைவராக தமிழ் மக்கள் பேரவையை எதுவித முன்னறிவித்தலும் இல்லாமல் ஆரம்பித்துள்ளனர். அது குறித்து பெரிதாக எதனையும் நான் நினைக்கவில்லை. 
ஏனெனில் இன்றைய உடனடி தேவையாக அது இருந்தது. அதுகூட என்னை துன்புறுத்தவில்லை ஆனால் ஒற்றுமைக்கு கிடைத்தவொரு அருமையான வாய்ப்பை இழந்துவிட்டோம் என்றவொரு கவலைதான் எனக்கு. இவ்வாறு உருவாகவிருந்த அமைப்பு ஒரு புதிய அரசியல் அணியாக உருவாக்கப்பட்டிருப்பின் பொருத்தமானதாக அமைந்திருக்குமென எண்ணி மகிழ்ச்சியடைந்திருப்பேன். 
ஆனால், இன்றும்கூட பொருத்தமான நிலை ஏற்படவில்லை. ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்து பல்வேறு தரப்பினரைக் கொண்டு தற்போது தொடங்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஒத்தாசையாகவே செயற்படும். இதற்கு எதிர்ப்பில்லை ஆதரவாகவே செயற்படும் என தினமும் வெளிவந்து கொண்டிருக்கும் பத்திரிகை அறிக்கைகள் மேலும் மக்கள் மத்தியில் குழப்பத்தை தோற்றுவித்துள்ளது. 
இக்கருத்து உண்மையாக இருக்குமானால் அது பிரயோசனம் எதையும் தராது என்பது மட்டுமல்ல மாற்று வழியை கையாளுவதற்கு முட்டுக்கட்டையாகவே அமையும். 
தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் போக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் அவ்வமைப்பிலுள்ள கட்சிகளின் உறுப்பினர்கள் சிலருக்கு பெரும் அவமானத்தையும் தந்து கொண்டிருக்கின்றது. ஆகவே தமிழ் மக்கள் பேரவையின் முயற்சிக்கு நான் முட்டுக்கட்டை போடுவதாக தவறாக எண்ணாமல் எனது ஆலோசனையையும் கேட்டு இதை அரசியல் அணியாக மாற்றுவார்களேயானால் எனது ஒத்துழைப்பையும் வழங்க தயாராகவே இருக்கின்றேன். 
ஆகவே இந்த முடிவை மறுபரிசீலனை செய்யலாம். இந்த விடயத்தில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களோடு நீண்டகாலம் பழகியமையால் அவர்கள் இப்பிரச்சனையை எவ்வாறு அணுகுவார்கள், அவர்களின் அணுகுமுறையில் நிச்சயம் ஒரு நல்ல முடிவு வராது என்பதை முன்கூட்டியே என்னால் கூறமுடியும். 
தமிழ் மக்கள் பேரவை நல்லதொரு அரசியல் சாசனத்தை உருவாக்கித் தருவோம் என்கிறார்கள் ஆனால் அவர்கள் உருவாக்கும் வரைவை இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பது கேள்விக்குறியே.
 உத்தேச அரசியல் அமைப்புக்கு பலவிதமாக ஆலோசனைகள் பல கடந்த காலங்களில் முன் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட்டுள்ளன. எது எப்படியிருப்பினும் இந்த வட்டத்துக்குள்ளே ஓட முடியுமே தவிர வேறு எந்தத் தீர்வையும் உள்ளே கொண்டுவர முடியாது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com