சற்று முன்
Home / செய்திகள் / யாழில் வட்டி வசூலிக்கும் குழுக்களுடன் பொலிஸாருக்கு தொடர்பு!

யாழில் வட்டி வசூலிக்கும் குழுக்களுடன் பொலிஸாருக்கு தொடர்பு!

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு கொடுத்த பணத்தின், வட்டியை வழங்காத நபர்கள் இருவரை கடத்தி சென்று சித்திரவதை புரிந்து அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , சம்பவத்துடன் சுன்னாக பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. 

அதேவேளை சுன்னாகம் பகுதியில் பட்டா வாகனத்தால் வீதியில் பயணித்த காரினை மோதி விபத்தினை ஏற்படுத்தி , காரில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு, அவர்களை காருடன் சேர்ந்து தீ வைக்க முயன்ற குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ள மூவருக்கும், வட்டி பணம் வசூலிக்கும் குழுவுடன் தொடர்பு உள்ளது என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

மீற்றர் வட்டிக்கு வழங்கப்பட்ட பணத்திற்கான வட்டியினை மீள வழங்காத நபர் ஒருவரை இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள் அடங்கிய குழுவொன்று தோட்ட வெளி பகுதி ஒன்றுக்கு கடத்தி சென்று , சித்தரவதை புரிந்து , தாக்குதல் மேற்கொள்ளும் காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.

அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , தாக்குதலாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டு , அளவெட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , மீற்றர் வட்டிக்கு பணம் வழங்கும் நபர்களிடம் “கொமிசன்” அடிப்படையில் ,வட்டி வசூலித்து கொடுக்கும் வேலையை குழுவாக செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

வட்டி பணத்தினை கொடுக்காத நபர்களை , கடத்தி சென்று , சித்திரவதை புரிந்து , அடித்து துன்புறுத்தி வட்டி பணத்தினை வசூலித்து வந்துள்ளனர். 

பணத்தினை கொடுத்த நபர்களின் ஏவலில் நடைபெறும் இந்த செயற்பாட்டினை காணொளிகளாக பதிவு செய்து , பணம் கொடுத்த நபர்களிடம் அந்த காணொளிகளையும் கொடுத்து வந்துள்ளார்கள்.

அதேவேளை இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்றால் , அங்கு கடமையில் இருக்கும் பொலிஸ் உத்தியோகஸ்தர் அவர்களின் முறைப்பாட்டினை ஏற்காது திருப்பி அனுப்பி வைப்பதுடன் , அவர்கள் பொலிஸ் நிலையம் வந்த விடயத்தினை வட்டிக்கு பணம் கொடுத்த நபர்களிடம் அறிவித்தும் விடுவார். அதனால் பணம் கொடுத்தவர்கள் முறைப்பாடு செய்ய சென்றவர்களை அச்சுறுத்தி வந்துள்ளனர். 

இந்நிலையில் வட்டி பணத்தினை வசூலிக்கும் குழுவை சேர்ந்தவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக , வட்டி வசூலிப்பதற்காக ஆட்களை கடத்தி ,சித்திரவதை புரியும் காணொளி காட்சிகளை ஒரு தரப்பு வெளியிட்டுள்ளது. சுமார் 20க்கும் மேற்பட்ட காணொளிகள் அவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து , வட்டி வசூலிக்கும் குழுக்களுடன் பொலிஸாருக்கு தொடர்பு இருந்தால் தொடர்புடையவர்களையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு வடமாகாண ஆளூநர் ஜீவன் தியாகராஜா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு பணித்துள்ளார்
About Mayoorathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com