சற்று முன்
Home / செய்திகள் / ஒருமுறை ஆண்டபின் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க கால்கள் தேய நடக்கும் தேவை எனக்கு ஏற்படாது – ஜனாதிபதி மைத்திரி

ஒருமுறை ஆண்டபின் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க கால்கள் தேய நடக்கும் தேவை எனக்கு ஏற்படாது – ஜனாதிபதி மைத்திரி

maithripala sirisenaஒருமுறை ஜனாதிபதியாக பதவி வகித்து மீண்டுமொரு ஆட்சியைக் கோரி இரு கால்களும் தேயும் வரை நடந்துசெல்வதற்கான தேவை தனக்கு ஏற்படாதெனத் தெரிவித்த ஜனாதிபதி  முன்னாள் தலைவர்கள் சரியான முறையில் அரசாட்சி செய்திருந்தால் இரு கால்களும் தேயும் வரை நடந்துசெல்லும் தேவை ஏற்பட்டிருக்காது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். தனது பதவிக் காலத்தில் தனது கடமைகளையும் பொறுப்புக்களையும் உரியவாறு நிறைவேற்றுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று (29) முற்பகல் மாவனல்லை பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். அதிகார மோகம் படைத்த ஒரு சிலர் தான் செல்லும் வழி அறியாமல் பாதையில் நடந்து சென்றபோதும் அரசாங்கம் சுயநினைவுடனும் பொறுமையுடனும் நடவடிக்கை மேற்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பாடுபடுவதாக இதன்போது ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இன்று ஒன்பது இலட்சம் கோடி ரூபாய் கடன் சுமையினால் எமது நாடு அவதிப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, கடந்த அரசாங்கம் பாரிய அபிவிருத்தி பற்றி மார் தட்டிக்கொண்டு தாங்க முடியாத கடன் சுமைக்கு நாட்டை இட்டுச்சென்றபோதும் இக்கடன் சுமையினை புதிய அரசாங்கத்தினால் எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார்.

கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள 50 பிரிவெனாக்கள் மற்றும் பள்ளிவாசல்களுக்கு கணனி இயந்திரங்களை வழங்கும் பொருட்டு இவ்வைபவம் இடம்பெற்றது. சர்வமதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மதத் தலைவர்களுக்கு கணனிகள் வழங்கி வைக்கும் அடையாளமாக ஜனாதிபதியினால் கணனிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அமைச்சர்களான கபீர் ஹசீம், ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, ரவூப் ஹக்கீம், முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன ஆகியோர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலர் இதில் கலந்துகொண்டனர். அத்துடன் கிட்டிய பாடசாலை சிறந்த பாசாலை எனும் எண்ணக்கருவினை கேகாலை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தி மாவனல்லை மெடேரிகம வித்தியாலயத்தில் இடம்பெற்ற வைபவத்திலும் ஜனாதிபதி நேற்று (29) முற்பகல் கலந்துகொண்டார்.

பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட இரண்டு பாடசாலைகளை சிறந்த பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் இது மேற்கொள்ளப்படுவதுடன், பிரசித்திப்பெற்ற பாடசாலைகளுக்கு நிலவும் போட்டியினை குறைப்பது இதன் நோக்கமாகும்.

அபிவிருத்தி தொடர்பாக எவ்வளவுதான் மார் தட்டிக்கொண்டபோதும் இலங்கையில் உள்ள பத்தாயிரத்து நூற்றி ஐம்பது பாடசாலைகளுள் சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் அடிப்படை வசதிகள் காணப்படவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இலவச சுகாதாரம் மற்றும் இலவச கல்விக்காக நியாயமான வளங்கள் பங்கீடு செய்தல் மற்றும் சிறந்த முகாமைத்துவம் தேவைப்படுவதாகவும் நாட்டின் அனைத்து மாணவர்களுக்காகவும் இவ் உரிமைகளை வழங்குவதற்கு தற்போதைய அரசு பாடுபடுவதாகவும் குறிப்பிட்டார்.

அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்லூரியின் அதிபர் திருமதி எஸ்.கே.பட்டவல உள்ளிட்ட ஆசிரியர் குழாம், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலர் இதில் கலந்துகொண்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com