சற்று முன்
Home / செய்திகள் / மீள்குடியேற்றச் செயலணி – மாகாணசபையைப் புறந்தள்ளி அரசு தான்தோன்றித்தனமாக நடக்கிறது – முதலமைச்சர்

மீள்குடியேற்றச் செயலணி – மாகாணசபையைப் புறந்தள்ளி அரசு தான்தோன்றித்தனமாக நடக்கிறது – முதலமைச்சர்

CM
முதலாவது வடக்கு மாகாணசபையின் 57வது அமர்வு
21.07.2016 வியாழக்கிழமை காலை 09.30 மணிக்கு
முதலமைச்சர் உரை

குருர் ப்ரம்மா…………
அவைத்தலைவர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்கட்சித் தலைவர் அவர்களே, கௌரவ உறுப்பினர்களே,
நேற்றைய தினம் எமது பிரதம செயலாளர் ஒரு முக்கியமான விடயமொன்றை எனது கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
அதாவது 05.07.2016ந் திகதிய மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டத்தில் கௌரவ ரிஷாட் பதியுடீன், கௌரவ ஃபயிசர் முஸ்தாபா, கௌரவ டி.எம்.சுவாமிநாதன் ஆகிய அமைச்சர்களைக் கொண்ட ஒரு செயலணி நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் மத்திய அரசாங்க அலுவலர்கள் ஆறு பேரும் வடமாகாண பிரதம செயலாளரும் வடமேல்மாகாண பிரதம செயலாளரும் அங்கம் வகிக்க வேண்டும் என்றும் முடிவு எடுத்துள்ளதாகக் கூறினார். மேலும் மீள்குடியேற்றம் பற்றிய நிகழ்ச்சி நிரலில் பாரம் பரிய சிங்கள கிராமங்களும் உள்ளடக்க வேண்டும் என்றும் திருகோணமலை மாவட்டமும் அதில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
செயலணி அந்தந்த மாவட்டச் செயலர்களை உள்ளேற்க அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேலும் செயலணி எடுக்கும் தீர்மானம் காலத்திற்குக் காலம் அமைச்சர் வாரியக் கருத்தொருமிப்புக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதை எனக்கு எடுத்துக் காட்டி இச் செயலணியில் வடமாகாண அரசியல் அலகு விடுபட்டுள்ளதாகக் கூறினார். மேலும் முன்னைய ஆளுநர் கௌரவ பள்ளிகக்கார இருந்த போது மாவட்ட ரீதியாக செயலணி இருக்க வேண்டும் என்றும் சகல அரசியல் கட்சிகளும் அதில் அங்கம் வகிக்க வேண்டும் என்றும் கூறியிருந்ததை எனது கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

உள்ள+ரில் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது பாரம்பரிய காணிகளில் அல்லது வீடுகளில் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்ற கருத்தை முன்னைய ஆளுநர் ஜனாதிபதிக்கான தனது கடிதத்தில் வலியுறுத்தியிருந்ததையும் எனது கவனத்திற்குக் கொண்டு வந்தார். பிரதம செயலாளரால் தரப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் இம்மன்றின் கவனத்திற்குக் கொண்டு வந்து அவற்றின் பிரதிகளை சபையின் முன் சமர்ப்பிக்கின்றேன்.
எங்கள் மத்தியில் எவ்வாறான அரசியல் ரீதியான அல்லது வேறு காரணங்களுக்கான வேற்றுமைகள் இருப்பினும் வடமாகாணத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எமது சபையை நிராகரித்து அல்லது ஓரங்கட்டி மத்தியானது தனக்குத் தகுந்தவாறு காரியங்களை எடுத்துச் செல்வதை நாம் எவருமே ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
வடமாகாண இடம்பெயர்ந்த மக்கள் மட்டுமல்ல இந்தியாவில் இருந்து வருபவர்களையும் அவர்களின் பாரம்பரிய இடங்களில் குடியமர்த்தாது தான்தோன்றித்தனமாக மத்திக்கு உகந்த முறையில் அவர்களைக் குடியமர்த்தக்கூடிய ஒரு சந்தர்ப்பம் இந்தக் காரியத்தால் உருவாகியுள்ளது. பெயருக்கு வடமாகாணசபை பிரதம செயலாளரை உள்ளடக்கி, மத்தியே மேற்படி காரியங்களைக் கொண்டு செல்ல உத்தேசித்துள்ளது. இது வடமாகாண மக்களின் கருத்துக்களை உதாசீனம் செய்வதற்கு ஒப்பாகும். எம்மிடம் கேட்காமல் எம்மக்களின் மீள்குடியேற்றம் நடைபெறுவது பொது மக்களுக்குப் பல பின்விளைவுகளைக் கொண்டுவரக் கூடியது.
இன்று சர்வதேச மட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் சம்பந்தமாகப் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக பின்ஹெய்ரோ கோட்பாடுகளின் படி வெவ்வேறு காரணங்களினால் இடம்பெயர்ந்த மக்கள் தமது முன்னைய பாரம்பரிய இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி சில நாட்களுக்கு முன்னர் என்னைச் சந்தித்த ஐழுஆ (சர்வதேச இடம்பெயர்வுகளுக்கான நிறுவனம்) சர்வதேச நிபுணத்துவப் பிரதிநிதியுடனும் நான் பேசியிருந்தேன். மீள் குடியமர்வுகள் எம்முடன் இணைந்து சர்வதேச கொள்கைகளுக்கு அமைவாக நடைபெற வேண்டும் என்ற என் கருத்துக்களை ஐபழச ஊஎநவமழஎளமi என்ற நிபுணர் ஏற்றுக் கொண்டு அவற்றை உறுதிப்படுத்துவதற்காகவே இலங்கை வந்துள்ளதாக அறிவித்தார். இந்தத் தருணத்தில் இவ்வாறான மத்திய அரசாங்கத்தின் உதாசீனமும், தான்தோன்றித்தனமும் கண்டனத்திற்கு உரியது. ஒரு பக்கம் சர்வதேசம் பாதிக்கப்பட்ட மக்களின் நலநன வலியுறுத்துகிறது. மறுபக்கத்தில் மத்தியின் அதிகாரத்தை நிலைநாட்டுவதே குறிக்கோளாக இருந்து வருகின்றது.
செயலணியில் யார் யார் இடம்பெற வேண்டும் என்பதை விட மத்திய அரசாங்கம் செயலணியை உருவாக்க முன்னர் எம்முடன் பேசியிருக்க வேண்டும். 13வது திருத்தச் சட்டம் வந்த பின் எமக்குக் குறித்தொதுக்கப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக அல்லது உடன்பட்ட விடயங்களில் மத்தியானது மாகாணத்துடன் கலந்தாலோசித்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோட்பாட்டை உதாசீனப்படுத்தியே நடந்து வருகின்றது. இதை நான் பலமுறை மத்திய அரசாங்க அமைச்சர்களுக்கும், வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கும் எடுத்துக் கூறியே வந்துள்ளேன்.
எனவே இத்தருணத்தில் நீங்கள் உங்கள் கருத்துக்களை அவை முன் வெளியிடுவதாலும் இவற்றைப் பத்திரிகைகள் பிரசுரிப்பதாலும் எமது ஆட்சேபணையை நாங்கள் மத்திக்கு எடுத்தியம்ப உதவியாக இருக்கும் என்ற முறையில் இவ் ஆவணங்களை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.
அவை வாசிக்கப்படுகின்றன. என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com