சற்று முன்
Home / நேர்காணல்கள் / இலங்கையை விட்டு வெளியேறுபவர்கள் தாங்கள் விரும்பும்
நாட்டுக்கு சென்றுவிட்டால் சரி என நினைக்கிறார்கள்

இலங்கையை விட்டு வெளியேறுபவர்கள் தாங்கள் விரும்பும்
நாட்டுக்கு சென்றுவிட்டால் சரி என நினைக்கிறார்கள்

இதனால்தான் அகதிக் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன

ஜூன் 20 சர்வதேச அகதிகள் தினத்தினை முன்னிட்டு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் அவுஸ்ரேலியாவில் ஈழ அகதிகள் தொடர்பில் குரல்கொடுத்துவருபவருமான காந்தன் புலம்பெயர் இணைய மின்னிதழுக்கு வழங்கியிருந்த சிறப்பு நேர்காணல்

சர்வதேச அகதிகள் தினம் குறித்தும் அகதிகள் தொடர்பில் தங்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் தொடர்பிலும் கூறுங்கள் ?

அகதிகள் தினம் ஜூன் 20 என்பது சர்வதேச ரீதியில் அகதிகளை நினைவு கூறவும் அவர்களுக்கான ஒரு அங்கீகாரத்தை வழங்கும் ஐக்கிய நாடுகள் சபையால் அகதிகள் நாளாக ஜூன் 20 பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இன்று உலகெங்கும் 80 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து உள்ளார்கள் இதில் 21 மில்லியன் மக்கள் அகதிகளாகவும் 10 மில்லியன் மக்கள் நாடற்றவர்களாகவும் இருக்கிறார்கள். இவற்றில் 4 மில்லியன் மக்கள் அகதி கோரிக்கை விட்டிருக்கும் மக்கள் ஆவர். ஒரு அகதியானவர் தமது அடிப்படை உரிமைகளான பாதுகாப்பு தங்குமிடம் வேலைவாய்ப்பு கல்வி மற்றும் நீதி கிடைக்காத அல்லது மறுக்கப்படும் சமயத்தில் அவர் வேறு ஒரு நாட்டில் புகலிடம் கோர முடியும். இவை அனைத்தும் அனைத்துலக மனித உரிமை சட்டத்தின் கீழ் ஒரு நாட்டின் பிற கைக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் என வரையறுக்கப்பட்டுள்ளன. எனினும் ஐநா அகதிகளுக்கான சாசனத்தின் படி மனித உரிமை மீறல்கள் தமக்கு ஏற்படும் பட்சத்தில் அவரின் உயிருக்கு ஆபத்து என நியாயமான அந்த நாட்டின் பாதுகாப்பை நாட முடியாத அல்லது பாதுகாப்பை விரும்பாவிடின் அவருக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டும் என குறிப்பிடப்படுகிறது.
இலங்கையைப் பொறுத்தவரை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த காலத்திலிருந்து இன்று வரை தமிழர்களின் அடிப்படை உரிமைகள் இலங்கையை காலங்காலமாக ஆண்டு வரும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கங்களால் மறுக்கப்படும் பறிக்கப்படுவதுமாக இருந்து வந்துள்ளது. இவ்வாறான சம்பவங்கள் தமிழர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவது அனைத்துலக இனப்படுகொலைக்கான சட்டங்களுடன் ஒத்துப்போவதாக இருக்கின்றது. இதனை எதிர்த்துப் போராடியவர்கள் அதாவது சாத்வீக போராட்டமாக இருந்தாலும் சரி ஆயுதப் போராட்டமாக இருந்தாலும் சரி இலங்கை அரசாங்கம் போராட்டங்களை ஒரு அடக்குமுறை வடிவிலேயே தடுத்து வந்திருக்கின்றது. இதனாலேயே இவ்வாறான அடக்குமுறைக்கு முகம் கொடுக்க முடியாத அல்லது அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தொழில்வாய்ப்பு கோரியும் அகதி புகலிடம் கோரி தஞ்சமடைந்துள்ளனர்.
ஐநா அகதிகள் அமைப்பின் கணிப்பின்படி 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 15 ஆயிரம் பேர் அகதிகளாக கணிக்கப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டுக்கு பின் வந்த ஆட்சியிலும் பல தமிழர்கள் புகலிடம் கோரி நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். 2017 இல் கூட இராணுவத்தால் பாலியல் துன்புறுத்தல்கள் நிகழ்ந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தற்பொழுது இலங்கையில் நடக்கும் மனித உரிமைகள் மீறல்களுக்கு இனரீதியான பாரபட்சமான அரசின் போக்குகளும் தமிழ் மக்களை பாதுகாப்புத் தேடி வெளிநாடுகளுக்கு செல்லவைத்துள்ளது. இவ்வாறான மக்கள் புகலிடம் கோரும் நாடுகளுக்கு செல்ல முதல் இடைத்தங்கல் நாடுகளான மலேசியா சிங்கப்பூர் தாய்லாந்து மற்றும் ஆபிரிக்க நாடுகளில் பல வருடங்களாக தங்கள் குடும்பங்களுடன் தங்கியிருந்து துயரங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் இலங்கைக்கு வருவதற்கு போதிய பாதுகாப்பான வழிவகைகள் அல்லது சட்டம் எவையும் இலங்கை அரசினால் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் கூட இன்னமும் நீக்கப்படவில்லை சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பை சிங்கள அரசு உறுதிப்படுத்தவும் வழங்கவும் முடியாமல் மேலும் மேலும் அடக்குமுறைகளை பரவலாக்கி சிறுபான்மை இன மக்களை அடக்கி ஒடுக்கி வந்திருக்கிறார்கள்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியிலும் தாயகப் பகுதியில் சிங்கள ராணுவத்தினர் வீதித் தடைகளை ஏற்படுத்தியும் இராணுவ முகாம்களை அமைத்து சிறுபான்மை இனங்களை அச்சுறுத்துகின்ற நிலையே காணப்படுகின்றது. இந்நிலையில்தான் தற்போதும் பல மக்கள் படகுகள் மூலம் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு புகலிடம் தேடி தப்பிச்செல்ல முனைகிறார்கள். நாங்கள் இவ்வாறான மக்களுக்கான பாதுகாப்பையும் சட்ட உதவிகளையும் அல்ட்ரான் என்ற அமைப்பினூடாக நாங்கள் மேற்கொண்டுவருகின்றோம்.

ஈழ அகதிகள் தமிழக முகாங்களில் அடிமைகளாகவே நடத்தப்படுவதாக தமிழக சட்டத்தரணி ஜான்சன் கூறியிருக்கிறார். இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன ?

ஈழ அகதிகள் தமிழக முகாம்களில் அடிமைகளாக நடத்தப்படுவதாக கூறுவது வேறு நாட்டு அகதிகள் முகங்களுடன் ஒப்பிடும் பொழுது ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாகத்தான் இருக்கின்றது. முகாம்களில் பதியப்பட்டு அகதிகளாக வாழ்பவர்களின் நடமாட்டங்களை தொடர்ந்து கட்டுப்படுத்தப்படுவது என்பதும் கூட அடிமைத்தனமானதுதான். உறவினர்களின் நல்ல நிகழ்வுகளுக்கோ அல்லது மரணச் சடங்குகளுக்கோ செல்வதாக இருந்தால் கூட அனுமதி பெற்றுத்தான் செல்லவேண்டும் என்பது அடிப்படை உரிமைகளை கூறுவதாகவே இருக்கின்றது. தமிழக அரசு இவ்விடயத்தில் அதிக கவனமும் சிரத்தையும் எடுத்து ஈழ அகதிகளை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்பதுதான் எங்கள் அனைவரதும் கோரிக்கையாக இருக்கிறது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார- அரசியல் சூழலில் தமிழகம் நோக்கி மக்கள் அகதிகளாக செல்வதனை எப்படிப் பார்க்கிறீர்கள் ?

இன்று இலங்கையில் காணப்படும் அரசியல் பொருளாதார பிரச்சினை என்பது பல கோணங்களில் பலரால் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. என்னைப் பொருத்தவரை தமிழர்கள் இலங்கையை தமது தாயகமாக ஏற்றுக்கொள்ளாமல் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான உதவிகளையும் மேற்கொள்ளாது என நம்புகிறார்கள். தமது பிள்ளைகள் பேரப் பிள்ளைகளின் எதிர்காலம் எவ்வாறு அமையப் போகிறது என அஞ்சுகிறார்கள். இலங்கை அரசாங்கம் வாங்கிக் குவித்த கடன் சுமையை செலுத்த முடியாமல் தம் மீதும் நமது சந்ததி மீதும் சுமத்திவிடும் என அவர்கள் அச்சப்படுகிறார்கள். தற்பொழுது இலங்கை அரசாங்கம் மேலும் மேலும் கடன்களை வாங்கி அந்த சுமையையும் மக்கள் மீது திணித்து வருகிறது. இதனால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. சிங்கள அரசாங்கம் இலங்கையை வெளிநாடுகளுக்கு தாரைவார்த்து மக்களை அடிமைகளாக மாற்றி நினைக்கிறது இதில் தமிழ் மக்களுக்கு எந்தவித உடன்பாடு ஏதும் இல்லாத நிலையில் தமதும் நமது பிள்ளைகளினதும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குடும்பத்துடன் இலங்கையை விட்டு தப்பிச் செல்கின்றனர். இது ஒரு துரதிருஷ்டவசமான சம்பவமாக இருந்தாலும் தமிழ் மக்கள் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறுவதை என்னால் நிராகரித்து விட முடியாது. ஆனாலும் தாயகத்திலிருந்து தமிழர் தாயகத்தை தங்களால் கட்டியெழுப்ப முடியும் என்றும் அதற்கு புலம்பெயர் தமிழர்களை உதவிகளையும் பெற்று தமிழர் தாயகத்தை வளமிக்க தேசமாக செயற்படுத்த முன்வரவேண்டும். ஐற்ரர் என்ற அமைப்பினூடாக நாமும் பொருளாதார முன்னேற்றம் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றோம். ஆனால் இது சிறு துளி அளவானதே.

சர்வதேச அகதிகள் சட்டத்தின் கீழ் உலகெங்கும் அகதிகளுக்குரிய உரிமைகள் மற்றும் பாதுகாப்புத் தொடர்பில் கூறுங்கள் ?

சர்வதேச அகதிகள் சட்டமானது ஒருவர் அகதியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமாயின் எவ்வாறு இருக்க வேண்டும் என்று சில வரையறைகளை கூறியிருக்கிறது. அவர்களுக்கான உரிமைகள் என்ன என்பன பற்றியும் கூறுகின்றது.
அனேகமாக அகதிகள் சாசனத்தில் கையெழுத்திட்ட நாடுகள் சர்வதேச அகதிகள் சட்டத்தை மதித்து நடந்தாலும் தமது நாட்டின் பொருளாதார வசதிகளுக்கு ஏற்பவே அகதிகளை பராமரிப்பதிலும் அவர்களது உரிமைகளை பேணுவதிலும் கவனம் செலுத்தி வருகின்றன. உதாரணமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் அகதி அந்தஸ்து பெற்றவர்களுக்கும் வளர்ச்சி அடையாத நாடுகளில் அகதி அந்தஸ்து பெற்றவர்களுக்கும் இடையிலான வாழ்க்கை முறையில் பல மாறுபாடுகள் காணப்படுகின்றன. ஆனால் நான் அறிந்த வரையில் எந்தவொரு தமிழர்களின் திறமைகளையோ அல்லது அவர்களின் பிள்ளைகள் கல்வி திறமைகளையோ கட்டுப்படுத்தியேதாகவோ அல்லது அகதிகள் என்பதற்காக தடுத்ததாகவோ நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் இது அகதிகள் சாசனத்தில் கையெப்பமிடாத நாடுகளான இந்தியா மலேசியா இந்தோனேசியா தாய்லாந்து போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழர்களுடைய பிள்ளைகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது. அல்லது பொருளாதாரப் பிரச்சனைகளால் மட்டுப்படுத்தப்பட் டு்ள்ளது. அனேகமாக புலம்பெயர் தமிழர்கள் தனிப்பட்ட முறையிலும் அமைப்புகள் ஊடாகவும் அகதிக் கோரிக்கையாளர்களுக்கு உதவி வருவது மகிழ்ச்சிக்குரியதே.

மேற்கத்தேய நாடுகளுக்கு புலம்பெயரும் இலங்கை அகதிகள் பலரது அகதிக் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் தொடர்ச்சியாக நிராகரிக்கப்படுகின்றமை குறித்துக் கூறுங்கள் ?

இலங்கையை விட்டு புகலிடம் தேடி வெளியேறுபவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய நாட்டுக்கு சென்று விட்டால் சரி எல்லாமே சரியாகிவிடும் தமது பாதுகாப்புகள் உறுதி செய்யப்பட்டு விடும் என்று கருதுகிறார்கள். அகதி அந்தஸ்து என்பது ஒருவர் தனது நாட்டில் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அரசியல் இனம் மொழி சமயம் காரணமாக தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக தன்னால் தன் நாட்டு அரசாங்கத்திடம் பாதுகாப்பினையும் நீதியையும் பெற்றுக் கொள்ள முடியாது அல்லது விரும்பவில்லை எனக் கருதினால் அதனை அவர் தகுந்த காரணங்களுடன் கூறவேண்டும். ஆதாரங்கள் தேவையில்லை தான் ஆனால் அவை அவரின் விண்ணப்பங்களை வலுப்படுத்தும். எம்மில் அநேகமானவர்கள் ஒரு நேர்முக விசாரணையை சந்தித்திருக்க மாட்டார்கள். பலர் போலீஸ் மற்றும் இராணுவத்தின் நேர்முக விசாரணைக்கு முகம் கொடுத்து இருப்பார்கள். ஆனால் அகதி விண்ணப்பத்திற்கான நேர்முக விசாரணைக்கும் இராணுவத்தின் நேர்முக விசாரணைக்கும் பாரியளவில் வித்தியாசம் உண்டு. முதலாவது பாதுகாப்பான சூழல் என்பதாகும் அதாவது உயிருக்கு பாதுகாப்பு கேட்பார்கள். இரண்டாவது சித்திரவதைகளுக்கான பாதுகாப்பு அதாவது உயிருடன் தப்புதல் ஆகும். அகதி விண்ணப்பங்கள் நிரப்பப்படும் போது பலர் சட்ட ஆலோசனைகளைப் பெறுவதில்லை. பலருக்கு அதற்கான சந்தர்ப்பங்களும் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக நாட்டை விட்டு வெளியேறியவர்களில் 99 வீதமானவர்களுக்கு உயிராபத்து இருந்திருக்கிறது. ஆனால் அவர்கள் அதனை தகுந்த முறையில் வெளிப்படுத்த தவறி வருகின்றனர். பல சட்டத்தரணிகளும் அமைப்புகளும் அகதி விண்ணப்பதாரர்களுக்காக வாதாடி அகதி அந்தஸ்தை பெற்றுக் கொடுத்திருக்கின்றன.
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்ட பலர் சித்திரவதைகளுக்கு உட்பட்டதாக அதிகளவான சான்றுகளும் உள்ளன. அனைத்துலக அமைப்புக்கள் பல இவற்றினை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். நான் அறிந்தவரையில் இந்திய முகாம்களிலிருந்து நாடு திரும்பிய பலர் காணாமல் ஆக்கப்பட்ட இருக்கிறார்கள். பலர் போர்ச்சூழலில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆஸ்திரேலிய அரசு ஸ்ரீலங்காவின் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின் பல அகதி கோரிக்கை விண்ணப்பங்களை நிராகரித்தது. அத்துடன் பலவந்தமாக அவர்களை நாடும் கடத்தியது. இன்னமும் பல தங்களது எதிர்காலம் என்னவென்றே தெரியாமல் இங்கு வசித்து வருகின்றனர். ஸ்ரீலங்காவில் தற்போது வரை நடைபெறும் அடக்குமுறைகளை ஆவணங்களாக அவ்வப்போது எம்மைப் போன்ற அமைப்புகளுக்கு அனுப்பினால் நாங்கள் அவற்றிலுள்ள அரசாங்கங்களுக்கு சமர்ப்பித்து முடிந்தவரை நாடு கடத்தல்களைத் தடுக்க முடியும் என நினைக்கிறேன்.

நன்றி – உரிமை மின்னிதழ்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com