சற்று முன்
Home / செய்திகள் / ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்த கேரள இளைஞர்கள் – இலங்கை ஊடாக சென்றதாக தகவல்

ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்த கேரள இளைஞர்கள் – இலங்கை ஊடாக சென்றதாக தகவல்

5628216501இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த நான்கு இளம்பெண்கள் உட்பட 17 பேர் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்களில் ஒருவர் தன்னுடய மனைவிக்கு அனுப்பிய வாட்ஸ்அப் தகவல் மூலம் இந்த விஷயம் தெரியவந்துள்ளது என தி ஹிந்து செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

மேலும், இவர்கள் அனைவரும் கேரளாவின் தமிழக எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், தமிழகத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு மற்றும் பாலக்காட்டை சேர்ந்த 16 பேர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் திடீரென மாயமானார்கள்.

இவர்களில் 4 பெண்களும் 2 குழந்தைகளும் உண்டு. இவர்கள் இலங்கை மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள புனித தலங்களுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றனர். இதன்பிறகு கடந்த ஒரு மாதமாகியும் இவர்களை பற்றிய எந்த தகவலும் வரவில்லை.

இந்நிலையில் காணாமல் போன ஹபீசுதீன் என்பவரின் மனைவியின் கையடக்கத் தொலைபேசிக்கு கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது.

அதில் உள்ள விவரங்கள் வருமாறு:

நாங்கள் சொர்க்க இராஜ்ஜியத்திற்கு வந்து விட்டோம். இனி எங்களை தேட வேண்டாம். நாங்கள் இஸ்லாமிய நாட்டிற்கு வந்து விட்டோம். இங்கு நிரபராதிகளை அமெரிக்கா கொன்று குவிக்கிறது. எனவே அவர்களை பழிவாங்குவதற்காக ஐஎஸ் அமைப்புக்காக நாங்கள் எங்களை அர்ப்பணித்து விட்டோம்.

இதுகுறித்து பெற்றோரிடம் கூறி புரிய வைக்க வேண்டும். அவர்களையும் ஐஎஸ் அமைப்பிற்கு அழைத்து கொண்டு வரவேண்டும். இவ்வாறு அந்த தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை பார்த்து ஹபீசுதீனின் மனைவி அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து கணவரின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரது பெற்றோர் காசர்கோடு எம்பி கருணாகரன், எம்எல்ஏ ராஜகோபாலன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராய் விஜயனிடமும் அவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக விசாரணை நடத்த கேரள டிஜிபி லோக்நாத் பெக்ராவுக்கு முதல்வர் உத்தரவிட்டார். உளவுத்துறை பொலிசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

காசர்கோடு மாவட்டம் திருக்கரிப்பூரை சேர்ந்த டாக்டர் இஜாஸ் என்பவர் தலைமையில் 16 பேரும் சிரியாவுக்கு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. கேரளாவில் இருந்து ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்தவர்கள், தமிழக எல்லையில் உள்ள நகரங்களைச் சேர்ந்தவர்கள்.

இதனால் தமிழகத்தில் இருந்து யாரும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேராமல் தடுக்க, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இணையதளங்களில் பரிமாறப்படும் தகவல்களை காவல் துறையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

சிரியாவுக்கு சென்றுள்ள குழுவில் டாக்டர் இஜாஸ், அவரது மனைவி ரிபைலா, ஷிகாஸ் அவரது மனைவி அஜ்மலா, அப்துல் ரஷீத் அப்துல்லா, இவரது மனைவி ஆயிஷா, இவர்களது 2 வயது குழந்தை, ஹபீசுதீன், மர்வான் இஸ்மாயில், அஸ்பாக் மஜீத், பிரோஸ், பாலக்காட்டை சேர்ந்த இசா, அவரது மனைவி பாத்திமா மற்றும் யசியா, அவரது மனைவி உட்பட 17 பேர் இலங்கை வழியாக சிரியா அல்லது ஆப்கானிஸ்தானுக்கு சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

இஜாஸின் செல்போன் பேச்சை மத்திய உளவுத்துறையினர் ஒட்டு கேட்டனர். அதில் அவர் ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்தது உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் இவர், ஆப்கானிஸ்தானில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தி ஹிந்து செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கேரளாவை சேர்ந்த 17 பேர் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மத்திய உளவுத்துறையான ரா அதிகாரிகள் நேற்று கேரளா வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இவர்கள் காசர்கோட்டிலும் மங்களூரிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மங்களூரில் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்க்கும் அமைப்பு செயல்படுவதாக விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஐஎஸ் அமைப்பில் இணைந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் கொச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:

காசர்கோடு மற்றும் பாலக்காட்டை சேர்ந்த 17 பேர் ஐஎஸ் தீவிரவாதிகள் இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது உண்மையாக இருந்தால் மிகவும் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஆகும். இந்த இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக அவர்களது உறவினர்கள்தான் என்னிடம் கூறியுள்ளனர். எனவே இது தொடர்பாக தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

கேரளாவில் இருந்து ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக கூறப்படுபவர்களில் திருவனந்தபுரம் ஆற்றுகால் பகுதியைச் சேர்ந்த பிடிஎஸ் மாணவி நிமிஷா என்ற பாத்திமாவும் ஒருவர் என்று தெரியவந்துள்ளது. இவரது தாய் பிந்து. தனது மகளும் ஐஎஸ்சில் சேர்ந்ததாக நேற்று பத்திரிகைகளில் தகவல் வந்த பிறகுதான் அவருக்கு இது தெரியவந்துள்ளது.

இது குறித்து பிந்து கூறியதாவது: எனது மகள் காசர்கோட்டில் தனியார் பல் மருத்துவ கல்லூரியில் பிடிஎஸ் படித்து வந்தார். கடந்த நவம்பர் மாதம் எனக்கு அவள் போன் செய்து நான் இஷா என்பவரை திருமணம் செய்தேன் என்றார். அதிர்ச்சியடைந்த நான் காசர்கோடு பொலிசில் புகார் செய்தேன்.

பொலிசார் எனது மகளையும் இஷாவையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது இருவருக்கும் 18 வயது ஆனதால் விருப்பம் உள்ள மதத்திற்கு மாறவும் விரும்பியவரை திருமணம் செய்யவும் உரிமை உண்டு என்றும் நீதிபதி கூறினார்.

ஆனால் என் மகளை என்னுடன் அனுப்ப கோரினேன். ஏற்க மறுத்த நீதிமன்றம் இஷாவுடன் என் மகளை அனுப்பி வைக்க உத்தரவிட்டது. இதனால் இஷாவிடம் என் மகளை எங்கு சந்தித்தாய் என கேட்டேன். சொந்த ஊர் பாலக்காடு என்றும் பெயர் பெட்சன் என்றும் கூறினார்.

சமீபத்தில்தான் அவரும் முஸ்லிமாக மாறியதாக அவர் கூறினார் என்றார். இதுபோல் கொச்சியை சேர்ந்த ஒரு பெண்ணும் ஐஎஸ் அமைப்பில் இணைந்ததாக கூறப்படுகிறது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com