சற்று முன்
Home / செய்திகள் / கொழும்பை வந்தடைந்தது ‘ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா’

கொழும்பை வந்தடைந்தது ‘ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா’

இந்தியக் கடற்படையின் பாரிய விமானம் தாங்கிப் போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா’ தனது முதலாவது சர்வதேச பயணத்தினை மேற்கொண்டு நேற்று (21) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
முப்பது ஆண்டுகளின் பின்னர் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தந்துள்ள முதல் விமானம் தாங்கிப் போர்க்கப்பலான ‘விக்கிரமாதித்யா’வுக்கு பெரியளவில் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.

கடற்படையினரின் பாரிய வரவேற்புக்கு மத்தியில், வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, பாதுகாப்பு செயலாளர், முப்படைத்தளபதிகள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதுடன் கப்டன் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவின் மேற்கு கரையோரப் பகுதியான விசாகப்பட்டிணத்தில் அடுத்த மாதம் 05 ஆம் 08 ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கும் சர்வதேச கடற்படை அணிவகுப்பில் கலந்து கொள்வதற்குச் செல்லும் வழியில் நல்லெண்ண விஜயமாக இக்கப்பல் இலங்கைக்கு வருகை தந்துள்ளது. நேற்று காலை கொழும்பு துறைமுகத்தினை வந்தடைந்த இக்கப்பல் நாளை (23) வரை இங்கு தங்கியிருக்கும்.

இதற்கு முன்னர் 1985 ஆம் ஆண்டு அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் ஒன்று  கொழும்புத் துறைமுகத்துக்கு பயணம் செய்திருந்தது. அதற்குப் பின்னர் 2016 ஆம் ஆண்டில் ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட விக்கிரமாதித்யா கப்பல் கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியக் கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது. 44,500 தொன் எடையுள்ள இந்தப் போர்க்கப்பலில், 30 மிக்-29 போர் விமானங்களும், ஆறு காமோவ் உலங்கு வானூர்திகளும் தரித்து நிற்கும் வசதிகள் உள்ளன.

110 அதிகாரிகளும், 1500 மாலுமிகளும் இதில் பணியாற்றுகின்றனர். இக்கப்பலின் விஜயமானது இந்திய- சிறிலங்கா பாதுகாப்பு உறவுகளில் முக்கிய திருப்பமாக கருதப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com